Tag: Viradhangal

  • Vaigasi viradhangal

    விரதங்கள் வைகாசி 
    1.பௌர்ணமி-சிவன்-சிவனருள்.
    2.விருஷப-ரிஷபவாகனத்தில் இருக்கும் உமாமகேஸ்வரர்-நீண்ட ஆயுள்,பொருள்,தானியம்,கல்வி,வாகன யோகம்.
    3.விசாகம்-முருகன்-முருகன் அருள்,மழலைச் செல்வம்.

    விரதங்கள் ஆனி

    1.வளர்பிறை சப்தமி திதி-துர்க்கந்தநாசன விரதம்-சருமநோய்கள் நீங்கும்.
    2.ரம்பா த்ரிதியை-த்ரிதியை-விரதம்,சிவன் வழிபாடு-அரம்பையர்கள் வாழ்த்து,அழகு,செல்வம் நிறைந்து வாழ.
    3.பௌர்ணமி-சிவன்-எண்ணியவை கைகூடும்

    விரதங்கள் ஆடி 
    1.வளர்பிறை சப்தமி திதி-அபய சப்தமி விரதம்-சூரிய உலகில் இடம்.
    2.பௌர்ணமி-சிவன்-பகை விலகும்-வரலட்சுமி-செல்வம்சேரவும்,மங்களங்கள் பெருகவும்.

    விரதங்கள் ஆவணி

    1.வளர்பிறை சப்தமி திதி-சகல பாக்யம் கிட்டும்.
    2.பௌர்ணமி-சிவன்-வேண்டியவை கிட்டும்.
     

  • Viradhangal Palangal

    விரதங்கள் நம்மை ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கு உட்படுத்த ஏற்படுத்தப்பட்டது. ஆனால், எந்த விரதத்தை ,எந்த தெய்வத்திற்காக ,எதற்காக  அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம்.

    சோமவார விரதம்

    கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும் சோமவார விரதம் சிவபெருமானைக் குறித்து அனுஷ்டிப்பதாகும். காலையில் உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல் ,இரவு மட்டும் சாப்பிட வேண்டும். அப்படி முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம். தகுந்த வாழ்க்கை துணை வேண்டுபவர்களும், திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை கிடைக்கவும் இந்த விரதம் இருப்பர்.

     பிரதோஷம்

    தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகளில் பிரதோஷ விரதம் சிவபெருமான், நந்திதேவரின் அருள் வேண்டி இருப்பது.

    சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கும் போது, சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து இந்த விரதத்தை ஆரம்பிக்கலாம். வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டிய இந்த விரதத்தின் போது, பகலில் எதையும் சாப்பிடாமல்,மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று பிரதோஷ  வழிபாடு முடிந்த பிறகு, சாப்பிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதினால்  கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், ஆகியவை நீங்கும்.

     சித்ரா பவுர்ணமி விரதம்

     சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில், சித்திரகுப்தருக்காக இருப்பது.காலையில் பிதுர் தர்ப்பணம் செய்து விட்டு, இரவில் மட்டும் சாப்பிட வேண்டும்.இதனால் மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்தலாம் .

     தை அமாவாசை விரதம்

     சிவபெருமானுக்காக இருக்கப்படும் தை அமாவாசையில் ,காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதால், முன்னோர்களுக்கு முக்தி கிடைப்பதுடன், குடும்பமும்  அபிவிருத்தி அடையும்.

    கந்தசஷ்டி விரதம்

    ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் சேவற்கொடியோன் சுப்பிரமணியருக்காக இருக்கப்படும் விரதம். முதல் 5 நாட்கள் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு ,கடைசிநாள் முழுமையாக பட்டினி இருந்து, மாலை சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம்.

     மங்களவார விரதம்

    தை மாதம் முதல் செவ்வாயில்  துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் பைரவர் மற்றும் வீரபத்திரருக்காக அனுஷ்டிக்கும் விரதம்.பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு இருக்கும் இந்த விரதத்தால், பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்கும்.

    தைப்பூச விரதம்

    தை மாத பூச நட்சத்திரத்தில் சிவபெருமானுக்காக இருக்கப்படும் விரதம். காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்ககூடிய இந்த விரதத்தால்,திருமண யோகம் கூடி வரும்.

    கேதார விரதம்

    புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள் தான் விரததிற்குரிய நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும் விரதம் இருக்கலாம்.

    ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொண்டு, கேதாரநாதருக்காக  முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம்  இருந்தால்,தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர் என்பது நம்பிக்கை . 

     கிருத்திகை விரதம்

     கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில்  சுப்பிரமணியருக்காக  அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால், 16 வகையான செல்வத்தைப் பெறலாம்.

    நவராத்திரி விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை மகாசக்தி பார்வதிதேவியை ,முதல் 8 நாள் பழ உணவு சாப்பிட்டு, 9ம் நாளான மகாநவமி அன்று முழுமையாக சாப்பிடாமல் விரதம் இருந்தால், கல்வி, செல்வம், ஆற்றல் ஆகியவற்றை அடையலாம்.

     இந்த விரதங்கள் புண்ணியங்களை பெற்றுத்தருவதுடன் நமது உடல் மற்றும் மனதையும் மேம்படுத்துகிறது.

  • Puratasi Viradhangal

    ஸித்தி விநாயக விரதம் – இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும்.

    துர்வாஷ்டமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.

    மகாலட்சுமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

    அமுக்தாபரண விரதம் – புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும்.

    ஜேஷ்டா விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.

    சஷ்டி-லலிதா விரதம் – புரட்டாவி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருளும்.

    கபிலா சஷ்டி விரதம் – புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும்.

    மகாளயபட்சம் – புரட்டாசி பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாள்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இந்தக் காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகும்.

  • Vinayakar viradhangal

    ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மதாந்தம் சம்பவிக்கின்றன. 

    சுக்கில பட்சச் சதுர்த்தியை 'சதுர்த்தி விரதம்' என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'நாக சதுர்த்தி' என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'விநாயக சதுர்த்தி' என்றும் கைக்கொள்கின்றனர்.

    மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை 'சங்கடஹர சதுர்த்தி' என்பர். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை 'சங்கடஹர சதுர்த்தி விரதம்' என்கின்றனர். இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை 'சங்கடஹர விநாயக சதுர்த்தி'என்று வழங்குவர். 

    ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் 'விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான 'தேவி' விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.
     

  • Murugan Viradhangal

    வெள்ளிக்கிழமை, கார்த்திகை, வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டி ஆகியவை முருகனுக்கு உரிய முக்கிய விரதங்கள் ஆகும். கார்த்திகை விரதத்தின் சிறப்பைச் சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருளினார். கார்த்திகைப் பெண்கள் குமரக்கடவுளை வளர்த்த காரணத்தால், அவர்களுடைய நாளான கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து, குமரப்பெருமானை வழிபடுவோர் கல்வி, செல்வம், ஆயுள், தர்மபத்தினி, நன்மக்கள், நிலபுலம் யாவும் பெற்று வாழ்வார்கள் என்று சிவபெருமான் அருள்புரிந்தார்.
    கார்த்திகை மாதம் பரணி நாளில் விரதம் தொடங்கி, வழிபாடு செய்து, அடுத்த நாள் கார்த்திகையில் விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்து, அடுத்த நாள் ரோகிணி காலையில் நீராடி, நித்திய வழிபாடு செய்து அடியார்களோடு கூடி உண்ண வேண்டும். பின்னர் மாதந்தோறும் கார்த்திகையில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

    நாரதர், சப்தரிஷிகளிலும் மேன்மையுற விரும்பி, அதற்கான விரதத்தை அருளுமாறு விநாயக்கடவுளை வேண்டிக் கொண்டார். அவர் அருளியவாறு, பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து மேன்மை அடைந்தார்.

    வெள்ளிக்கிழமை விரதம்:
    வெள்ளிக்கிழமை விரதம், ஐப்பசி மாதம் முதல் சுக்கிர வாரத்தில் தொடங்கி, முறைப்படி விரதம் அனுஷ்டித்து, பின்னர் வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை விரதத்தின் சிறப்பை வசிஷ்ட முனிவர், முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு எடுத்துக் கூறினார். அவர் அனுஷ்டித்து மேன்மையுற்றார்.
    பகீரதன் என்னும் மன்னன் வெள்ளிக்கிழமை விரதம் மேற்கொண்டு, கோரன் என்னும் அரக்கனை வென்று இழந்த தன்னுடைய அரசு உரிமையை மீண்டும் பெற்றுப் புகழ் பெற்றான்.

    கந்த சஷ்டி விரதம் :
    கந்தசஷ்டி என்ற பிரபலமான விரதம் ஐப்பசி மாதம் சுக்கில் பட்சத்தில் வரும். பிரதமை நாளில் தொடங்கி, சஷ்டி வரை ஆறு நாட்கள் முறைப்படி விரதம் இருக்க வேண்டும். அந்த நாட்களில் காலையில் நீராடி, வழிபாடு வீட்டிலும் கோயிலிலும் செய்து, முருகன் சரிதத்தைக் கேட்டு அல்லது படித்து, முருகன் நாமத்தை ஜெபித்து, ஏழாம் நாள் காலையில் வழக்கப்படி வழிபாடு செய்து, விரதத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர் மாதந்தோறும் வளர்பிறை சஷ்டி விரதம் இருக்கலாம். சஷ்டி விரதம் இருப்பவர்களின் வினைகள் அகலும், எண்ணிய காரியங்கள் நிறைவேறி, புண்ணியமும் கிடைக்கும்.
    கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி அனுஷ்டித்த முசுகுந்தச் சக்கரவர்த்தி எல்லா நலன்களும் பெற்றுச் சிறப்புடையவரானார்.

    குமார சஷ்டி விரதம் :
    ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் எனப்படும். கார்த்திகை மாத வளர்பிறைக்கு குமார சஷ்டியைச் ‘சுப்பிரமணிய சஷ்டி’ என்றும், ‘அனந்த சுப்பிரமணிய பூஜை’ என்றும் கூறுவர்.

    அனந்த சுப்பிரமணிய பூஜை:
    ‘சுப்புராயன்’ என்ற பெயர் முருகனையும், நாகப்பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகிற பெயராம். திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் அனந்த (நாக) சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும். முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம். அல்லது, இணைந்த இரு பாம்புகளுக்கிடையில் அமைந்த முருகனையோ, பாம்பின் முடிமீது அமைந்த முருகனையோ வழிபட்டால் நாக தோஷங்களும், பிற தோஷங்களும் விலகும். இதற்கு நிகராக இரு தேவியருக்கு இடையில் எழுந்தருளிய முருகனை வழிபடலாம். பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள் புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்றும் நம்புகின்றனர்.
     

  • Thai madha viradhangal

    தை பொங்கல் திருநாள் முதலாக, தை அமாவாசை, ரத சப்தமி, தைப்பூசம், தை கிருத்திகை ஆகியன நாமறிந்த சிறப்பான நாட்கள். தை மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய வேறு சில வழிபாடுகளும் உண்டு.

    சாவித்ரி கௌரி விரதம்: தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய  விரதம் இது. சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தாராம் மார்க்கண்டேயர்.
    விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். 

    பிறகு மௌன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும். இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களில்…

    ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு- ஒன்பது மஞ்சள் கிழங்குகள் – ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும்.

    நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம்.

    பைரவ வழிபாடு: தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை வடை மாலை சாற்றி வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.

    வீரபத்திர வழிபாடு: மங்கலவாரம் எனப்படும் செவ்வாய்க் கிழமை தோறும் ஒரு வருட காலம் வீரபத்திரரை வழிபட, வல்வினைகள் நீங்கும். வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது இந்த விரதம் இருப்பது சிறப்பு. இதனால், நீங்காத தடைகள் நீங்கும். பயமும் தீவினைகளும் நம்மைவிட்டு விலகும். கிரக பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அற்புத வழிபாடு இது.