Tag: Viradha Muraigal

  • Thaipoosam Viradha muraigal palangal

    தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி 18.01.2022 அன்று அனைத்து முருகன் தலங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். அதோடு சிவனுக்கும், குருபகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும். பல சிறப்புகள் மிக்க தைப்பூச திருநாள் அன்று விரதம் இருப்பது எப்படி? என்று பார்ப்போம்…!!

    தைப்பூச விரதம் இருப்பது எப்படி?

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். பின்பு தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்ய வேண்டும்.

    தைப்பூசத்தன்று உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மேலும் மனமுருகி விரதமிருந்து கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை பாராயணம் செய்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலையும் வழிபடுவது நல்லது. 

    தைப்பூச விரத பலன்கள் : 

    தைப்பூச நாளில் முருகனை விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். மேலும் குடும்பத்தில் செல்வம் பெருகும், கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும். இந்நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் மூலம் தீய சக்திகள் நம்மை அண்டாது.

    முருகப்பெருமானுக்கு உகந்த இந்த தைப்பூச விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மேலும் துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும். தைப்பூசத்தன்று குழந்தைகளுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற்காரியங்களை செய்யலாம்.

    தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும். தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும்.

    திருமணத்தடை உள்ளவர்கள் மற்றும் வரன் தேடுபவர்கள் தைப்பூச நன்னாளில் வரன் தேடினால் நல்ல வரன் கிடைக்கும். இந்நாளில் திருமணப் பேச்சை ஆரம்பித்தாலே போதும் நல்லவிதமாக முடியும்.

    தைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகளும், மாந்திரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது என்பதுடன், அவை அனைத்துமே அஞ்சி நடுங்கி, அடிபணிந்து நமக்கு ஏவல் செய்யும் என்பது ஐதீகம்…
     

  • Siradi Saibaba Viradha Muraigal

    விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும், சாயிநாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயிபாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். 

    இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம். இந்த விரதம் அற்புதப் பலன்கள் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.

    காலை அல்லது மாலையில் சாயிபாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாயிவிரத கதையைப் படிக்கவும். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும்.

    இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள்உட்கொண்டு செய்யவும், அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது. வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாயிபாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.

    விரத நிறைவு விதிமுறைகள்

    9-வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப்பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும். சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, சாய்பாபாவின் விரதம் மற்றும் மகிமை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்யலாம். 9-வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதம், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயிபக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.