Tag: Thirumoolar

  • Ananda Thandavam of Nataraja by Thirumoolar

    ‘தமிழ்ச் சாத்திரம்’ என்று போற்றப்படுவது திருமூலர் அருளிய திருமந்திரம். பன்னிரு திருமுறைகளில் 10-ம் திருமுறையாகத் திகழ்கிறது. ஒன்பது ஆகமங்களைத் தமிழில் சொல்லும் ஞானப் பொக்கிஷம். 3000 ஆண்டுகள் தவத்திலிருந்து, திருமூலர் ஆண்டுக்கு ஒரு பாடலாக உபதேசித்தது. மாடு மேய்க்கும் பாமரனும் முயன்றால் தெய்வ நிலையைப் பெறலாம் என்பதை உலகுக்கு உணர்த்தவே, மூலன் எனும் பாமரனின் மேனியில்  சுந்தரநாத யோகி புகுந்து, திருமந்திரம் பாடவைத்தார்.

    ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (திருமந்திரம் 2104). ஆன்மிகத்தின் உச்சநிலையில் இருப்பது உருவமற்ற ஒரே கடவுள். மலையின் அடிப் பகுதியில் ஆயிரம் வழிகள். அதன் உச்சத்தைத் தொடும்போது சிகரம் ஒன்றுதான். நம் எல்லோராலும் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்துவிட முடியாது. ஆகவே, கிடைக்கும் வழிகளைப் பிடித்துக்கொண்டு ஏறலாம்.  சிகரத்தை எட்டிவிட்டால், ஞானியாக ஆகலாம். இயலாதவர்கள், வழிபட்டு மேன்மை அடையவே நடராசரை நம்முன் நிறுத்துகிறார் திருமூலர்.

    9-ம் தந்திரம் 8-ம் தலைப்பு ‘திருக் கூத்து தரிசனம்’. இதில் சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொன்தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து ஆகிய தலைப்புகளில் – 82  பாடல்களில் நடராசரின் ஆனந்த தாண்டவத்தை பாடியுள்ளார் திருமூலர். இதை முழுதும் படிப்பவருக்கு நடராசர் பேரருள் நிச்சயம் வந்து சேரும்.
    அவற்றில் சில பாடல்கள் இங்கே… 

    விழித்திரை மூடினால்..!

    `ஆதி நடம் செய்தான் என்பார்கள் ஆதர்கள்
    ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர்’
    – திருமந்திரம் (2787)

    ஆதிபகவன் சிவன். அவரே ஆதாரமான தெய்வம். பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளி ஐந்தொழில்களையும் ஆடல் மூலமாகவே செய்து கொண்டிருக்கிறார்.

    64 மகேசுவர வடிவங்களில் பிரதானமானவர் நடராசர். மனம் ஒன்றி, நடராசரை தரிசிக்க வேண்டும். பிறகு மனதுக்குள் அவர் நடனத்தைக் கொண்டு வந்து, கண்களை மூடி தியானிக்க வேண்டும். மூடிய திரைகள் முன் நடராசர் நடனம் தவத்தில் தெரியும். தியானத்தில் – விழித்திரைக்குள் நடன தரிசனம் காணும் முறையை அற்புதமாகப் பாடுகிறார் திருமூலர்.

    நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
    உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
    பற்றுக்குப் பற்றாய் பரமன் இருந்த இடம்
    சிற்றம்பலம் என்று சேர்ந்துகொண்டேன் (தி.மந்.-2770)

    பொதுவாக மேடைகளில் திரை விலகினால் நடனம் தெரியும். சிவ தியானத்திலோ, விழித்திரை கள் மூடினால் புருவ நடுவே சிவப் பேரொளி தோன்றும்; சிவானந்த தாண்டவம் தெரியும்.

    பாதச் சிலம்பொலி கேட்கும்!

    பரமனின் பரமானந்தத் திருநடனம் புலப்படுவது மட்டுமா? பரமனின் பாதச் சிலம்போசையும் நம் காதுகளில் கேட்குமாம்!

    ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும்
    பாடிய பாட்டும் பலவான நட்டமும்
    கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
    தேடி உளே கண்டு தீர்ந்தது அற்றவாறே

    நடராசரின் நடனச் சிலம்போசையைத் தினமும் கேட்டவர் சேரமான் பெருமாள் நாயனார். அப்படியான பாக்கியம் நமக்கும் வாய்க்கும் என்று இந்தப் பாடல் மூலம் சொல்கிறார் திருமூலர்.

    மரணத்தை வென்ற ரகசியம்!

    ஒருமுறை அந்த ஆனந்த தரிசனத்தைப் பெற்றவர், எப்போதும் அதை மறக்கமாட்டார். நடன தரிசனம் கண்டவர்கள், அதையே நினைத்து நினைத்து ஆனந்தப் பரவசத்தில் களித்திருப்பார்களாம்.

    புளிக் கண்டவர்க்குப் புனல் ஊறுமாப்போல்
    களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
    அளிக்கும் அருள்கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும்
    ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே
    – திருமந்திரம் 2778

    அதாவது, புளியங்காயைத் தின்றால் புளிக்கும். மறுமுறை அதைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சுவை மனதில் எழும். தானாகவே, வாயில் உமிழ் நீர் சுரக்கும். அதேபோல், நடராசப் பெருமானின் தாண்டவத்தைக் கண்டவருக்கு, அதை நினைக்கும்போ தெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பொங்கிப் பெருகுமாம். சரி, இதனால் என்ன பயன்?

    மரணத்தையே வெல்லலாம் என்கிறார் திருமூலர்.

    தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
    ஒப்பில் எழுகோடி யுகம் இருந்தேனே – திருமந்திரம் 74

    ஆம்! திருமூலர் தனது 3000 வயது மர்மத்தை இங்கே விடுவிக்கிறார்!

    மறைப்பொருள் தத்துவம்

    யோக நிலைக்குச் சென்ற ஞானிகள் பேசமாட்டார்கள். ஞானம் என்பதை, ஒளவையார் கொன்றைவேந்தனில் ‘மோனம் என்பது ஞான வரம்பு’ என்று பாடியிருக்கிறார்.

    தான் பெருமுயற்சியால் பெற்ற ஞானத்தை மோனத்தால் மறைத்து, தனக்குள் வைத்துக்கொள்பவர் சுயநலவாதி. ஆனால் நமக்காகத் திருமூலர் தன் மோனத்தை கலைத்து, ஞானத்தை ‘திரு மந்திரத்தில்’ உபதேசித்த பொதுநலவாதி.

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
    வான் பற்றி நின்ற ‘மறைப்பொருள்’ சொல்லிடின்
    ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
    தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
    – திருமந்திரம் 85

     அணுவுக்கு அணுவாக நின்று ஆடும் நடராசரை மனதுக்குள் தியானித்து அருள் பெறுவோம்!

  • Thirumoolar part 4

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    திருமூலர் திவ்விய சரித்திரம் பாகம் – 4

     

    கருவூரார் செய்த 
    தங்க விக்கிரகத்தில் சிக்கல் வந்ததும்
    நடந்ததைச் சொல்லி கருவூராரைக்
    கை காட்டினர் சிற்பிகள்.

    காவலர்கள் ஓடிச்சென்று கருவூராரைப் பிடித்து வந்தனர்.

    "சிறையில் தள்ளுங்கள்" அதிரடித் தீர்ப்பை
    அரசன் தந்தான்.

    திருமூலர் பெருமான் பிரசன்னமானார்.

    கூடவே சீடர்கள்.
    அவர்கள் வசம் மூட்டைகள்.
    அவை நிறைய 
    தங்கத் துகள்கள்.

    " மன்னா….
    கருவூரான்..
    என் மாணவன்.
    அவனையா சிறையில் வைத்தாய்?"

    "மாபெரும் 
    மோசடிக்குத் தண்டனை….. சிறைவாசம்."
    கோபத்தின் உச்சியில் கத்தினான்
    மன்னன் உறுதியாக.

    "மன்னர் மன்னா… தெய்வச்சிலையாகச்
    செய்து 
    வணங்க வேண்டியவனைச் 
    சிறைப்படுத்தி விட்டாய்..

    இது பெரும் பாவம்…

    உனக்குத் தெரியுமா ?

    சுத்தத் தங்கத்தில் விக்கிரகம் 
    செய்ய முடியாது. 
    செம்பு கலந்தாலே 
    வடிவம் கைகூடும்.

    மேலும்….."
    மெல்லிய குரலில் சொன்னார் மூலர்.

    "சுத்தத் தங்கம் கொடுக்கும் ஒளி 
    நாளாக நாளாக பார்ப்போர் 
    பார்வைத் திறனை பாழ்படுத்திவிடும்…."

    பின் 
    உரத்துச் சொன்னார்.

    "நீ கொடுத்த தங்கத்தை தந்துவிடுகிறேன்.
    என் மாணவனை விடுதலை செய்….

    இதோ…
    மாற்றுத் தங்கம்.
    அதிகமாய் வேண்டுமானாலும் தருகிறேன்."

    தராசுத் தட்டில் 
    விக்கிரகம் வைக்கப்பட்டு ஈடான தங்கமும் நிறைக்கப்பட்டது. 

    "உன் தங்கத்தை 
    எடுத்துக் கொள்…
    என் தங்கத்தை
    என்னிடம் தா…"

    வேகமாய் 
    நடராஜ விக்கிரகத்தை எடுத்தபடி 
    கிளம்பத் தயாரானார் திருமூலர்.

    அவரது ஆற்றல் கண்டு மிரண்டு போன அரசன் திருமூலரின் பாதம் பணிந்தான்.

    கண்ணீர் சொரிந்து காலடி தொழுதவன் கருவூராரை விடுவிக்க கட்டளை இட்டான்.

    சிறையில் 
    பூட்டிய பூட்டு 
    பூட்டியபடி இருக்க அறைக்குள் 
    கருவூராரைக் காணவில்லை.

    "சீடனைத் தா…."
     உரத்த குரல் கொடுத்தார் .

    மன்னன் பதில் ஏதும் இல்லாமல் பரிதவித்தான்.

    தயங்கியபடியே காவலர்கள் சொன்னார்கள்.

    "அரசே…… 
    அவரைக் காணவில்லை"

    "அப்படியா…"

    கலகலவென்று 
    சிரித்த மூலர் 
    "கருவூரானே …..
    நீ எங்கே போனாய் ?எல்லோரும் 
    பார்க்கும்படி 
    தரிசனம் தா….."

    "குருவே…
    தங்கள் திருவருளால் இங்கேதான் இருக்கிறேன் …"
    கூறியபடி 
    திருவடிவு தாங்கியபடி வெளியே வந்தார் 
    கருவூர் சித்தர்.

    அரசன் 
    சிற்பிகள் 
    காவலர் 
    அத்தனைபேரும் வணங்கினர் 
    இரண்டு
    சித்தர் பெருமக்களையும்.

    அம்பலவாணராம் நடராஜர் சிலையை அரசனிடம் தந்தார் திருமூலர் பெருமான்.

    கோயில் அமையவேண்டிய முறை, தெய்வத்திற்கு உரிய இடங்கள்,
    பிரதிஷ்டை முறை,
    பூசை வகைகள் 
    என கோயில் இலக்கணம் சொன்னார் கருவூரார்.

    விடைபெற்றனர் ஈடில்லாத 
    சித்தர் பெருமக்கள் இருவரும்.

    பின் எத்தடையும் இல்லாது 
    கோயில் உருவானது.

    நடராஜர் விக்கிரகம் பேரருளோடு அருள்பாலிக்க ஆரம்பித்தது.

    கடைசியில் சோழமன்னன் 
    முற்றும் துறந்து
    முனிவனானான் 
    என்பது 
    கொங்கணர் 
    வடித்த காவியத்தில் முடிவாய் இருக்கிறது.

    சிதம்பரம்
    ஆதிமூலர் சன்னதியில்
    லிங்க வடிவில் இருக்கும் திருமூலரைத்
    தரிசிக்க –  தியானிக்க எண்ணியதெல்லாம் எண்ணியவாறு கைகூடும் என்பதே 
    திருமூலரின் சிறப்பு.
    அருட்தன்மை.

    திருமூலரின் 
    கிருபை 
    பொருந்திய இடமாக காட்டுமன்னார்கோயில் அருகே 
    திருநாரையூர் 
    பொல்லாப் பிள்ளையார் கோயிலைச் சொல்கிறார்கள்
    சித்தர் தேடல் 
    கொண்ட சிலர்.

    தமிழ்நாட்டில் 
    மூலனூர் 
    என்ற பெயரில் இருக்கும் அத்தனை ஊர்களும் திருமூலரின் 
    கிருபை பெற்ற தெய்வத்தமிழ் தலங்களே.

    சதுரகிரி மலையில் இன்றும் 
    உலா வருகிறார் திருமூலர்.

    அங்கு அவரது 
    தவக் குகை 
    ஆழ்நிலைத் தவத்திற்கு அடித்தளமாய் 
    இன்னமும் இருக்கிறது.

    குளித்தலை அருகே ஐவர்மலை என்னும் இரத்தினகிரீஸ்வரர் மலையில் 
    மன்னன் வீரசேனன் உருவில் இருந்த திருமூலரின் 
    சொரூப சமாதி முகம் இருப்பதாகவும்
    அங்கு தான் 
    திருமூலரைத் 
    தரிசித்ததாகவும் 
    போகர் 
    தனது சப்தகாண்டத்தில் 12 பாடல்களில் பரவசத்தோடு குறிப்பிடுகிறார்.

    'வழியுடனே இரத்தினகிரி மேலே சென்றேன்.
    வாகுடனே இரத்தின மென்ற கிரியிற்கண்டேன்.
    அழியாத ஆஸ்தான கோட்டை கண்டேன்.
    அதற்கப்பால் திருமாலின் கோயில் கண்டேன்.'

    என்கிறது 
    போகர் பாடல்.
    இதில் கூறப்படும் திருமாலின் கோயில் ஸ்ரீரங்கம் என்பது 
    ஓர் ஆன்மீகக் கணிப்பு.

    இன்னொரு பாடலில்
    'சமாதி இடம் கொண்டு சென்றார்
    நிலையான 
    இரத்தினகிரி மலையோரம் தான்..'
    என்கிறார் 
    போகர் பெருமான்.

    திருமூலரைத் தரிசித்து அருள் பெற உகந்த இடம் இரத்தினகிரீஸ்வரர் மலை என்பது 
    இக்குறிப்பு உணர்த்தும் போகர் அனுபவம்.

    9 மனைவிகளோடு 
    90 மக்கள் செல்வங்களோடு வாழ்வாங்கு வாழ்ந்த திருமூலர் 
    புரட்டாசி அவிட்டம் மூன்றாம் பாதத்தில் அவதரித்தார்.

    அவரை வழிபடத்
    தக்க நாள் அது.

    திருமூலரின்
    திருமந்திரம்
    தமிழுக்கும்
    சைவத்திற்கும்
    சித்தர் உலகுக்கும் ஆன்மீகத் தேடலுக்கும்
    கிடைத்த 
    ஒரு பொக்கிஷம்.

    திருமூலரே
    சித்தர் உலகிற்கு கிடைத்த
    மூலவர் தானே !

    (திருமூலர் திவ்விய சரித்திரம் – நிறைவு)

  • Thirumoolar 1

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    திருமூலர் திவ்விய சரித்திரம்  பாகம் – 1

    சித்தர்களில் 
    சிறந்தவர்
    திருமூலர். 

    கயிலாயப் 
    பரம்பரையின் 
    முதன்மைச் சித்தர்.

    ஆதி சித்தரான 
    சிவ பெருமானிடம்
    உபதேசம் பெற்றவர்.

    கயிலாய நாயகன் 
    சிவ பிரானின் 
    பிரதம சீடரான
    நந்தி தேவரின் 
    அனுகிரகம் பெற்ற 
    அற்புதச் சீடர்.

    'ஒன்றே குலம் 
    ஒருவனே தேவன்'
    என்ற 
    ஒருமைக் கோட்பாட்டை உலகுக்கு அளித்தவர்.

    சித்தர் பெருமக்களிடையே தமிழைக் காதலித்து 
    தமிழாய் வாழ்ந்த தன்னிகரில்லாச் சித்தர்.

    'என்னை இறைவன் 
    நன்கு படைத்தனன் 
    தன்னை நன்றாகத் 
    தமிழ் செய்யுமாறு…'
    எனப் பாடிய 
    தமிழ் நெஞ்சத்தார்.

    'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடும் மானிடரே..!
    உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டான்'
    என உறுதிபடச் சொல்லி உடம்பே ஆலயம் 
    உள் உறைபவனே 
    இறைவன் என 
    புதிய வேதம் சொன்னவர்.

    பல கோடி யுகங்கள் 
    வாழ்ந்து 
    மூவாயிரம் ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒன்றாய் 
    நான்கு அடிகளில் 
    ஒரு பாடல் பாடி 
    மூவாயிரம் பாடல்களைக் கோர்த்து 
    திருமந்திரம் என்னும் திருமந்திர மாலை 
    தந்தவர்.

    திருமூலர் அருளியவை 'திருமந்திரம் எண்ணாயிரம்' என வள்ளல் பெருமான் போற்றித் துதிக்கிறார்.

    திருமூலர் வர்க்கம்
    என்று
    ஒரு சித்தர் வர்க்கமே வர்ணிக்கப்படுவதும் பூஜிக்கப்படுவதும் 
    உண்டு.

    திருமாளிகைத் தேவர் காலங்கி நாதர் 
    கஞ்சமலையார்
    இந்திரன் 
    சந்திரன் 
    பிரம்மன் 
    ருத்திரன் 
    உள்ளிட்ட 
    ஏழு சித்தர்கள் 
    திருமூலரின் 
    சீர்மிகு சீடர்கள்.

    சிதம்பரத்தில் நேரில் 
    நடராஜர் நடனத்தைத் 
    தரிசித்து மகிழ்ந்தவர்.

    அங்கேயே 
    ஆதிமூலநாதர் 
    சன்னதியில் 
    மூலவராய் 
    ஆதிசிவன் ரூபத்தில் அருள்பாலித்து வருபவர்.

    திருமூலரின் 
    அருமைகளும் 
    பெருமைகளும் 
    அளப்பரியன.

    வரலாற்றில் இரண்டு திருமூலர்கள் இருந்ததாக சொல்வார் உண்டு.

    கூடு விட்டுக் கூடு பாயும் சித்தர் கலையான 
    பரகாயப் பிரவேசத்தில் வல்லவர் திருமூலர்.
    ஆதலால் 
    வான் புகழ் பெற்றவர்.

    பன்முறை
    பரகாயப் பிரவேசம் செய்திருந்தாலும் 
    அவரைப் பற்றிய 
    சித்தர் குறிப்பில் பதிவாகியுள்ளது 
    மூன்று முறையே.

    அவற்றை 
    ஒவ்வொன்றாகத்
    தரிசிப்போமா ?

     
    எல்லா சித்திகளும் 
    கைவரப் பெற்று கயிலாயத்தில் சிறப்புற்றிருந்த 
    சுந்தர நாதருக்கு 
    ஆத்ம நண்பரான அகத்தியரைப்
    பார்த்து வரலாம் 
    என்று 
    ஓர் ஆசை உதித்தது.

    கயிலாயம் விட்டு 
    அகத்தியர் வாழும் 
    பொதிகை மலைக்குப் பயணித்தார் சுந்தரநாதர்.

    வழியில் 
    பசுபதிநாத் (நேபாளம்)
    கேதார்நாத் (திருக்கேதாரம்)  காசி (கவி முத்தம்)
    விந்தமலை 
    திருப்பருப்பதம் திருக்காளத்தி திருவாலங்காடு
    காஞ்சிபுரம் என 
    சிவ தலங்களை அடைந்து சிவபாதம் போற்றி 
    சிதம்பரம் வந்தார்
    சுந்தர நாதர்.

    சிதம்பரத்தில் 
    தில்லை நடராஜரின் திருநடனம் கண்டார்.
    அது 
    அவருக்குக் கிடைத்த 
    பெரும் பாக்கியம்.

    அடுத்து வந்தது 
    ஆவடுதுறை.
    ஆம்…
    நம் திருவாடுதுறை,

    அங்கு 
    காவிரிக்கரையில் 
    பூஜை முடித்து
    எழுகையில் 
    ஓரிடத்தில் 
    பசுக்கூட்டம்.

    அவை 
    விம்மி விம்மி 
    செருமி செருமி 
    அழுத வண்ணம் 
    இருந்தன.

    பசுக்களின் அழுகுரல் சித்தரின் சித்தத்தைக்
    கலங்கச் செய்தன.

    பசுக்களின் 
    பரிசுத்த 
    ஆன்மாக்களின் 
    கூக்குரல் 
    சுந்தர நாதரிடம் 
    தங்கள் 
    துயர் நீக்க கோரின.

    சுந்தர நாதர் விசாரித்தார்.

    சாத்தனூரைச் சேர்ந்த 
    மூலன் என்பவன்
    பசுக்களை 
    மேய்ப்பவன்.

    மேய்க்கும்போது 
    உயிர் ஏய்த்து விலக
    அவன் மரணித்து  விட்டதாகவும் ,
    அவனின் 
    பிரியத்துக்குரிய பசுக்கள் பிரிய முடியாது என துடிதுடித்து வருவதாகவும் பதில் வந்தது.

    பசுக்களின் 
    துயர் தீர்ப்பது தனது 
    கருணைப் பெருக்கு 
    எனக் கருதிய 
    சுந்தர நாதர் 
    ஒரு கணம் யோசித்து 
    மூலன் உடலில் 
    பரகாயப் பிரவேசம் 
    செய்ய முடிவெடுத்தார்.

    மூலன் 
    உயிர்தெழுந்தாலே பசுக்கூட்டம் மகிழ்வுறும் என்பதனால் 
    சித்தர் சுந்தரநாதர்
    தனது உடலை ஓரிடத்தில் ஒளித்து வைத்துவிட்டு 
    உயிராய் 
    மூலன் உடலில் ஐக்கியமானார்.

    துடித்திருந்த பசுக்கள் 
    மூலன் உடல் 
    அசைவதைக் கண்டதும் அருகில் ஓடின.
    நாவால் 
    அவனை மேவின.
    முகர்ந்தன. 
    வால் தூக்கித் துள்ளின. 'மா'எனக் குரல் உயர்த்தின. ஆடின. மகிழ்ந்தன.

    ஏதுமறியாது 
    எழுந்த மூலன்
    மாலை வரை 
    மாடுகளை மேய்த்தான்.

    இரவு நெருங்க 
    வழக்கப்படி 
    பசுக்களை ஒட்டியபடி
    வீட்டை நெருங்கினான்.

    ஓடிவந்த மனைவி 
    மூலனை 
    ஆசையாய் நெருங்கி அரவணைக்க முயல அதிர்ந்து அவன் 
    தள்ளிப் போனான்.

    'உண்மை உரைப்பதே உத்தமம்'
    என மூலன் 
    மனைவியிடம் 
    நடந்ததைச் சொன்னார் மூலன் உருவிலிருந்த 
    சுந்தர நாதர்.

    ஏற்கவில்லை 
    அந்த 
    அப்பாவிப் பெண்.

    ஊரைக் கூட்டினாள். பஞ்சாயத்து நடந்தது.

    மூலன் உருவில் வந்த 
    சுந்தர நாதர் 
    நடந்ததைக் கூறி 
    நம்ப மறுத்தவர்களிடம் மூலனின் உடலை விட்டு உயிரைப் பிரித்துக் காட்டி மீண்டும் அவனைச் 
    சடலம் ஆக்கி 
    தன் பக்கத்தை 
    நியாயம் ஆக்கினார்.

    வியந்த ஊர்மக்கள் 
    சுந்தர நாதரை 
    வணங்கித் தொழுது 
    விடை கொடுத்து 
    அனுப்பினர்.

    சுந்தர நாதர் 
    பசுவின் துயர் தீர்த்த நிறைவில் 
    மூலன் மனைவி 
    மறுத்திடாத மகிழ்வில் 
    தன் உடலைத் தேடக் கரையோரம் வந்தார்.

    உடம்பைத் தேடினார்.

    என்ன நடந்ததோ 
    அப்பூவுடல் காணவில்லை.

    மெளனித்து தியானித்தார்.

    நடந்தது 
    மனத்திரையில் ஒளிபரப்பானது.

    அது இறைவனின் சித்தம் 
    என சித்தருக்குப் புரிந்தது.

    இறை விருப்பத்தை உணர்ந்தவர் 
    மூலனின் உடலிலேயே 
    தங்கி விட முடிவெடுத்தார்.

    மீண்டும் மூலன் 
    வீடு திரும்பி 
    மூலனின் 
    உடலில் புகுந்தார்.
    மூலன் ஆனார்.

    அது முதல் 
    அவர் 
    'சுந்தரநாதர்' மூலன்
    ஆனார்.

    அவரை 
    சுந்தர நாத மூலர் 
    எனக் குறிக்கிறது 
    பக்தி உலகம்.

    திருவாடுதுறை திருக்கோயிலில் 
    மூலனுடைய 
    உடலிலேயே தங்கித் தான்
    மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 
    ஆண்டுக்கொரு பாடலாய் திருமந்திரம்  படைத்தார்.

    ஞானம், யோகம்,கிரியை, சரியை 
    எனும் நால்வகை நன்னெறிகள் விளங்க அந்நன்நெறிகளான பண்புகள், யோகம்,
    ஞானம், மந்திரம், தந்திரம், எந்திரம், வைத்தியம் 
    என சகலமும் 
    உள்ளடங்கிய 
    திருமந்திரங்களாக ஜொலிக்க செய்தார்.

    திருமந்திரத்தைத்
    திருக்கோயிலின் 
    வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் 
    ஓர் அரச மரத்தின்
    கீழ் தங்கித் தவமிருந்து படைத்தார்
    திருமூலர் பெருமான்.

    அவர் முதலில் 
    இட்ட பெயர் 
    'தமிழ் மூவாயிரம்'

    திருவாவடுதுறையில் 
    இருந்தே திருமந்திரத்தை வெளியிட வேண்டுமென வேண்டுகோள் வைத்தவர் ஒரு பெருமானே.

    அவர் 
    திருவாடுதுறை இறையான
    மாசிலாமணி பெருமான்.

    திருமூலரின் திருமந்திரம் தமிழுக்கும் சித்தர்களுக்கும் ஆன்மீகத்திற்கும் 
    கிடைத்த ஒரு பொக்கிஷம்.

    திருவாடுதுறையில் திருமந்திரம் 
    மணம் எழுப்பியது பற்றி 
    ஒரு சுவையான 
    வரலாறு உண்டு.

    திருவாடுதுறை திருக்கோயிலுக்கு 
    வழிபட வந்தார் 
    ஒரு தமிழ் ஞானி.

    கோயிலின் அருகே 
    விழுந்து வணங்கி எழுந்தபோது 
    அவருக்கு ஓர் ஆச்சரியம்.

    அருகிலிருந்தோரை
    அழைத்து 
    'இங்கே தமிழ் மணம் கமழ்கிறது…
    தோண்டிப் பாருங்கள்…..' என்றார் ஆர்வமாக.

    தோண்டிய போது 
    நூல் ஒன்று இருந்தது.
    அது 
    பரப்பிய நறுமணம் கும்மென்று 
    கோயிலை நிரப்பியது.

    அந்நூல் 
    திருமந்திரம் 
    என்கிறது ஒரு வரலாறு.

    தமிழ்மணம் கண்டறிந்த 
    அந்த ஞானி….
    தமிழ் மனம் கொண்ட திருஞானசம்பந்தர்.

    (திவ்விய சரித்திரம் தொடரும்)