Tag: Thirumandiram

  • Thirumandiram 10

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    திருமந்திரம் – எளிய உரை -10

    யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

    வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

    ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரத்

    தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

    (திருமந்திரம் – திருமூலர் வரலாறு)

    விளக்கம்

    யான் பெற்ற பேற்றையும் அதனால் கண்ட 
    இறவாப் பேரின்பத்தையும் இவ்வுலக மக்கள் அனைவரும் 
    பெற வேண்டும்.

    அதற்கு –
    தன்னையறிந்து தன்னில் 
    வானாக நின்ற 
    மறைப் பொருளான மெய்ப் பொருளை – முழுமுதற் சிவத்தை உணர வேண்டும்.

    அதுவே 
    உடம்பைப் பற்றிய உணர்வாய் உள்ள மந்திரமாக உள்ளது.

    அதைப் 
    பற்றப் பற்ற 
    தவம் 
    தானே சித்திக்கும்.

    அதன் பயனாய் தனக்குத் தானே பேரின்பம் 
    தித்திக்கும்.

    மறைப் பொருளை அகத்தில் இடைவிடாமல் சிந்தித்தால் 
    சிரசில் 
    அதிர்வு மிகுந்த உணர்வு உண்டாகும்.

    அவ்வுணர்வு தான் சிவம் 
    தனது வருகையையும் இருப்பையும் உணர்த்தக்கூடியது.

    திருமூலர் 
    இம்மந்திரத்தில் மறைபொருளாய் உணர்த்துவது யாதெனில்….

    அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது
    என்பதை 
    அறிவால் உணர்ந்து

    அண்டத்தில் 
    ஐம்பெரும்
    பூதங்கள் ஆகவும்
    பிண்டமாகிய அகத்தில்
    'நமசிவாய 'எனும் ஐந்தெழுத்து மந்திரமாகவும்
    இருப்பதையும் நன்குணர்ந்து

    அம்மந்திரத்தை
    இடைவிடாது 
    அகத்தில் சிந்தித்தால் சிரத்தில் எழும் அதிர்வு சிவத்தின் இருப்பை உணர்த்தும்.

  • Thirumandiram 9

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    திருமந்திரம் – எளிய விளக்க உரை – 9

    ன்னை நின்றென்னே பிறவி பெறுவது 

    முன்னை நன்றாக முயல் தவஞ் செய்கிலர்

    என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 

    தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே.

    (திருமந்திரம் –  திருமூலர் வரலாறு)


    விளக்க உரை:

    இறைவனை 
    அடைய 
    தவமே 
    பிரதானம்.

    இறுதிக் காலத்தில் தவம் செய்து இறைவனை 
    அடைந்து விடலாம் என்றிருப்பது தவறு.

    சாகப் போகும் தருவாயில் 
    'சங்கரா… சங்கரா..'
    என ஜெபிப்பதில் அர்த்தமில்லை.

    உரிய காலத்தில் 
    தவம் இயற்றாதவர்களே மீண்டும் மீண்டும் பிறவி பெறுவர்.

    வினைகளை ஒழித்து பிறவா நிலை பெற ஈசனை 
    நினைந்து நினைந்து தவம் செய்ய வேண்டும். 

    என் தவப் பயன் காரணமாகவே இறைவன் 
    எனக்கு 
    இப்பிறவியை வழங்கி மீண்டும் பிறவாத
    மரணமிலாப் பெருவாழ்வும் தந்து மெய் ஞானத்தை 
    வாரி வழங்கி 
    என்னைப்
    பூமியில் படைத்துள்ளான்.

    எதற்குத் தெரியுமா ?

    அவன் அருளிய அனைத்தையும் தமிழில் மந்திரமாக திருமந்திரமாக செவ்வனே படைப்பதற்காகவே.

    இத் திருமந்திரத்தில் ஓர் அருட் செய்தி புதைந்து கிடக்கிறது.

    திருமூலரை 
    இறைவன் 
    ஏன் படைத்தான் ? எதற்காகத் தமிழில் எழுதச் சொன்னான் ?? என்பதற்கான பதிலில்தான் அந்த புதையல் உள்ளது.

    வேறெந்த மொழியிலும் 
    காணக் கிடைக்காத உணர முடியாத
    மெய் ஞானத்தையும் சாகா கல்வியையும் அறிந்துணர்ந்து கொள்ள 
    ஏக இறைவன் 
    தேர்ந்தெடுத்துப்
    படைத்த
    ஒரே மொழி 
    தமிழ் மொழியே.

    அதன் பொருட்டே இறைவன்
    திருமூலரைப் படைத்தான்… 
    அவரைக்
    கருவியாகக் கொண்டு திருமந்திரம் படைத்தான்.

    மெய்ஞானம் பெற உகந்த ஒரே மொழி தமிழ்மொழி என்பதே இத் திருமந்திரத்தில் புதைந்து கிடைக்கும் புதையல் தகவல்.

  • Thirumandiram Eliya Vilakka Urai 8

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    திருமந்திரம் எளிய விளக்க உரை- 8

    பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை 

    இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும் 

    முயற்றுவன் ஓங்கொளி வண்ணன் எம்மானை

    இயற்றிகழ் சோதி இறைவனுமாமே.

    ( திருமந்திரம் –  திருமூலர் வரலாறு )

    விளக்கவுரை:

    எப்போதும் 
    என் குருவான 
    எம் பெருமான் 
    நந்தி பிரானின் 
    திருப் பெயரை 
    என் நாவினில்
    வைத்து 
    திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பேன்.

    அந்த ஆதி சித்தனின்
    அற்புதங்களைப் பித்தனைப் போல் பிதற்றிக் கொண்டிருப்பேன்.

    அவனையே 
    என் நெஞ்சத்தில் வைத்து 
    இரவும் பகலும் இடையறாது 
    தவம் நோற்பேன்.

    யாராலும் 
    தூண்ட முடியாத சுயமாக ஒளிர்ந்து இயல்பாகத் திகழும் ஜோதியே அவன்.

    அந்த 
    பெரும் 
    ஜோதியனை 
    பொன் மயமானவனை என்  மன்னவனை அடைவதற்கு முயல்வேன்.

    இப்படி 
    பற்றியும்
    இயற்றியும்
    முயன்றும் 
    நான் கண்ட 
    நந்தீசப் பெருமானை எல்லோரும் கண்டுணர்ந்து மெய்யின்பம் 
    பெற வேண்டும்.

    இத் திருமந்திரத்தின் வாயிலாக
    மறை பொருள் ஒன்றையும் உணர்த்துகிறார் 
    மூலர் பெருமான். 

    நம் அகத்தே இருப்பது ஒரு குரு. 
    அவர் ஆன்ம குரு.

    புறத்தே இருக்கும் குரு ஞானகுரு.

    அகத்தே இருக்கும் 
    குரு தான் 
    நமக்குப்
    புறத்தே இருக்கும்
    ஞானகுருவை அடையாளம் காட்டுவார்.

    ஞான குருவின் துணையோடு நாம் முயன்றால் 
    அகத்தே இயல்பாய் ஒளியாய் இருக்கும் ஆதி குருவை உணரலாம்.

    திருமூலர்  நந்தீஸ்வரரை
    ஞான குருவாகவும் அகத்தில் இருக்கும் அருட்பெரும்ஜோதியை 
    ஆன்ம குருவாகவும் உணர்ந்து கொண்டவர்.

    திருமூலர் 
    தனது குருவாக நந்தீஸ்வரரைக் குறிப்பிடுகிறார்.

    எல்லோரும் ஞானகுருவாக நந்தீஸ்வரரைக் கொள்ள வேண்டும் என்பதல்ல பொருள்.

    ஒவ்வொருவரும் தங்கள் குருவை தாங்களே  
    அக குருமூலம் 
    அடையாளம் 
    கொள்ள வேண்டும் என்பதே 
    இம்மந்திரத்தின் நுட்பமான
    மறைபொருள்.

  • Thirumandiram 6

    – "மாரி மைந்தன்" சிவராமன் 

     

    திருமந்திரம் – எளிய விளக்க உரை  – 6

    மாரி மைந்தன் சிவராமன்

    விதிவழி  அல்லதிவ் வேலை உலகம்

    விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை

    துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்

    பதிவழி காட்டும் பகலவனாமே.

    (திருமந்திரம் – கடவுள் வாழ்த்து)

    இறைவன் ஜோதியாக விளங்குபவன் அருட்பெருஞ்ஜோதி அவனே.

    அவன் 
    விதித்த விதி வழி தான் உலகம் சுழல்கிறது.
    தவிர வேறு வகையில் அல்ல.

    மனிதர்கள் அடையும் 
    இன்பமும் 
    துன்பமும் 
    அவன் 
    வகுப்பதே அன்றி வேறு அல்ல.

    எனவே 
    நித்தமும் 
    அவனை உள்ளத்தில் உணர்ந்து துதியுங்கள்.

    அதனால் 
    மட்டுமே 
    ஜோதியாக விளங்கும் 
    ஈசன் 
    சூரியன் போல் இருளகற்றி 
    ஞானம் 
    அடையச் செய்து 
    இறவாப் பேரின்பத்தை நிரந்தரமாக்கி 
    சித்தி எனும்
    பேறை அருள்வான்.

    விதி வழி என்பது கிரியை நெறி.
    துதி வழி என்பது தோத்திர நெறி.
    பதி வழி என்பது ஞானநெறி.
     

  • Thirumandiram 5

    – "மாரி மைந்தன்" சிவராமன் 

    திருமந்திரம் எளிய விளக்க உரை 5

    போற்றி என்பார் அமரர் புனிதன்அடி

    போற்றி என்பார் அசுரர் புனிதன்அடி

    போற்றி என்பார் மனிதர் புனிதன்அடி

    போற்றி என்அன்புள் பொலிய வைத்தேனே.

    (திருமந்திரம்- கடவுள் வாழ்த்து)

    இன்ப வேட்கை கொண்ட  வானுலக அமரர் இன்பம் பொருட்டு தூயவனாகிய சிவனின் திருவடியைப் போற்றித் துதித்திடுவர்.

    பொருள் வேட்கை கொண்ட கொடியவர்களான அசுரர்களும் பொருளுக்காக அவன் திருவடியைப் போற்றி தொழுதிடுவர்.

    அருள் வேட்கை கொண்ட  மண்ணுலக மனிதர்களும் 
    அருள்
    வேண்டி 
    புனிதன் திருவடியைப் போற்றி வணங்கிடுவர்.

    சித்த வேட்கை கொண்ட 
    நானும் தவநிலையில் அவனைப் 
    போற்றி 
    துதித்து 
    தொழுது 
    வணங்கி 
    என் அன்பெனும் பிடியில் 
    அவனை அகப்படுத்தி
    அவன் 
    திருவடியாய் நிற்கும் 
    ஜோதியைப் போற்றி பொலிவுடன் வைத்திருந்தேனே.

    சிவனது திருவடியை உள்ளத்தில் ஏந்தி அவனை உணர்ந்து
    அளவுகடந்த அன்போடு 
    வணங்க வேண்டும் என்பதே இம்மந்திரம்
    உரைக்கும் தந்திரம்.

  • Thirumandiram episode 2

    – "மாரி மைந்தன்" சிவராமன் 

    திருமந்திரம் எளிய விளக்க உரை – 2

    மனத்தில் எழுகின்ற மாய நன்னாடன்

    நினைத்த தறிவெனில்  தான் நினைக்கிலர்

    எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்

    பிழைக்க நின்றார் பக்கம்பேணி நின்றானே.

    (திருமந்திரம் – கடவுள் வாழ்த்து)

    மனித உள்ளம் 
    ஒரு கோயில்.

    அதில் 
    உறைந்து 
    மறைந்து நின்று  
    திருவிளையாடல்கள் புரிபவன்
    இறைவன்.

    ஒருவர் 
    தன்னை அறிவதே அவனை 
    அடையும் வழி.

    அவனை
    நினைவிலே
    நினைந்து நினைப்பவரே அறிவால் உணரமுடியும்.

    இதை அறியாத உலகோர் தன்னைத்தான் அறிவதும் இல்லை.. அவனை நினைப்பதும் இல்லை…
    இதுபற்றி  பிறர் சொல்லிக் கேட்பதும் இல்லை.

    அதனால் தான் பெரும்பாலானோர்
    எப்போதும் துன்பம் என்னும் இருளில் வாடி
    'இறைவன் 
    என்னிடம் 
    அன்பு இல்லாதவனாக இருக்கிறான் '
    என புலம்புவர்.

    இறைவனோ
    இவ்வுலகில் இறவாமல் பிழைத்திருக்கும் உபாயம் 
    அறிந்தவர் பக்கமே எப்போதும் இருக்கிறான்.

    அத்தகையவர்
    ' உள் 'ளேயே
    உள் நின்று 
    அருள் தருகிறான்.