Tag: Thiruchanoor

  • Thiruchanoor flower poojai

    திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு  புஷ்ப யாகம் நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பின், 4 டன் மலர்களால் புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம். 

    அதன்படி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்றுவந்த வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று வியாழக்கிழமை முடிவுற்றதையடுத்து,  தாயாருக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது. இதையொட்டி, காலை தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், யாகம் வளர்த்து தாயாருக்கு புஷ்ப யாகம் விமரிசையாக நடைபெற்றது.

     

    அதில், ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி, தேன் பூக்கள், தாமரை, அல்லி, தாழம்பூ உள்ளிட்ட மலர்களாலும், மருவு, மரிக்கொழுந்து, தவனம், வில்வம், துளசி உள்ளட்ட பத்ரங்களாலும் (இலைகள்) தாயாருக்கு அர்ச்சகர்கள் யாகத்தை நடத்தினர். இதற்காக 4 டன் மலர்கள் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டது.  இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • Thiruchanoor bramorchavam kodiyetram

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா தொடங்கியது.   முன்னதாக மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் யானை உருவம் வரையப்பட்ட கொடியை அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, கோவிலுக்குள் கொண்டு சென்றனர். 

    கொடிமரத்துக்கு அர்ச்சகர்கள்  அபிஷேகம் செய்தனர். கொடியை கயிற்றில் இணைத்து, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பக்தர்கள் பக்தி கோ‌ஷம் முழங்க, பிரதான அர்ச்சகர்கள் கொடிமரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர். பின்னர் கொடிமரத்துக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. 

    இதில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் பசந்த் குமார், துணை செயலாளர் ஜான்சிராணி,  அதிகாரிகள் அர்ச்சகர்கள் பங்கேற்றனர். பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு 7.30 மணிக்கு பத்மாவதி தாயார் சின்னசேஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். 

    இதைதொடர்ந்து பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் காலையிலும் இரவிலும் வீதியுலா நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து ஆர்ஜித சேவைகளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தையொட்டி ரூ 1.44 கோடியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கோயில் முழுவதும் பல வண்ண மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    பஞ்சமி தீர்த்தம் அன்று  தேவஸ்தான விஜிலன்ஸ் பணியாளர்கள் 300, சாரண சாரணியர்கள்,200,  என்.சி.சி. மாணவர்கள் 200, வாரி சேவா பக்தர்கள் 200, போலீசார் 1500 பேர் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 100 சி.சி.டி.வி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

  • Thiruchanoor Padmavathi Thayar Koil Festival

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரதம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வரலட்சுமி விரதத்தையொட்டி அதிகாலையில் சுப்ரபாதம், சகஸ்ரநாம அர்ச்சனை, நித்திய அர்ச்சனை மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து பத்மாவதி தாயார் உற்சவர் ஆஸ்தான மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டது. 

    பின்னர் தாயாருக்கு லட்சுமி சகஸ்கர நாம அர்ச்சனை, அஷ்டோத்திர நாமாவளி படிக்கப்பட்டு ரோஜா, சாமந்தி ,மல்லி, சம்பங்கி, துளசி, மருவும், தாமரை உள்ளிட்ட மலர்களால் புஷ்ப அர்ச்சனை நடைபெற்றது. இதையடுத்து வரலட்சுமி விரததிற்காக சிறப்பாக செய்யப்பட்ட இட்லி, இனிப்பு இட்லி, லட்டு, வடை, அப்பம் போலி போன்ற 12 விதமான நெய்வேத்தியம் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதை அடுத்து மகா மங்கள ஆரத்தி நடைபெற்றது.

    சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு 50000 கங்கன கயிறுகள்,  மஞ்சள் கயிறு , மஞ்சள் , குங்குமம்,  2 லட்சம் வளையல்கள் வழங்கப்பட்டது. மேலும் மூலவருக்கு தங்க புடவையால்  அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    வரலட்சுமி விரதத்தை ஒட்டி 1.5 டன்   மலர்களால் 85 தோட்டத்துறை ஊழியர்கள் ஆப்பிள், திராட்சை, மாதுளம் , சாத்துக்கொடி,  அன்னாசி பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களாலும், மலர்களாலும் ஆஸ்தான  மண்டபத்தை அலங்கரித்தனர். மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரலட்சுமி விரதத்தை ஒட்டி அபிஷேகத்திற்கு பின்னர் தரிசனம், லக்ஷ்மி பூஜை, கல்யாண உற்சவம்,  ரத்து செய்யப்பட்டது. 

    இந்த நிகழ்ச்சியில் இணை செயல் அலுவலர் பசந்த்குமார், முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத், கூடுதல் முதன்மை பாதுகாப்பில் உள்ள சிவக்குமார் ரெட்டி, துணை செயலாளர் ஜான்சிராணி, விஜிலன்ஸ் அதிகாரி அசோக்குமார் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் அதிகாரிகள் பக்தர்கள் பங்கேற்றனர்.