Tag: Thiru Onam

  • Thiru Onam History

     முன்னொரு காலத்தில், சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டி, பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அவ்வெலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற என்ற பெயருடன் மன்னனாக பிறந்து, சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தது.

    மகாபலி என்னும் மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற தவவலிமையால் மூவுலகையும் ஆளும் மன்னனாகத் திகழ்ந்தான். இதனைப் பொறுக்காத தேவர்கள் அசுர வலிமை கொண்ட மகாபலியை அடக்கித் தங்களின் வலிமைக்குக் கொண்டுவரத் திருமாலின் உதவியை நாடிச் சென்றனர். 

    திருமாலும் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். திருமாலின் சூட்சமத்தை அறிந்த அசுர குருவான சுக்ராச்சாயான் அறிவுரையைக் கேளாத மகாபலியும் மூன்றடி மண் கொடுக்க சம்மதித்தார். திருமால் விசுவரூபம் எடுத்து வானத்தை ஒரு அடியாகவும், பூமியை மற்றொரு அடியாகவும் வைத்து அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்தார். வாமன மூர்த்தியால் மகாபலிச் சக்கரவர்த்தி பாதாளத்துள் வீழ்த்தப்பட்டபோது, தான் ஆட்சி செலுத்திய நாட்டை ஆண்டுக்கொரு முறை வந்து கண்ணுற்று மகிழத் திருமாலிடம் வரம் வேண்டினார். 

    பிறகு திருமாலும் மகாபலியை ஆட்கொண்டு வரம் நல்கினார். இவ்வாறு மகாபலிச் சக்கரவர்தியின் நினைவு நாளாகவும், மகாபலி மன்னன் இந்த திருவோண நன்னாளில் தான் ஆண்ட நாட்டிற்கு வருவதாகவும், அவனை வரவேற்கும் முகமாகவும் இவ்வோணம் பண்டிகை கொண்டாடப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

  • Thiru Onam Viradham

    திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைகள் நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். தமிழ் மாதமான ஆவணி, கேரளாவில் 'சிங்க மாதம்' என்று அழைக்கப்படுகிறது. சிங்க மாதத்தின் திருவோண நட்சத்திரத்தில் வளர்பிறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணுவிற்கு உகந்த நட்சத்திரம் திருவோணம் ஆகும். மகாவிஷ்ணு மூன்றடி மண் கேட்பதற்காக வாமன அவதாரம் எடுத்தது திருவோணம் நட்சத்திரத்தில்தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    27 நட்சத்திரங்களில் திருவாதிரை, திருவோணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் சிறப்பு வாய்ந்தவையாக கொண்டாடப்படுகின்றன. திருவாதிரை சிவனுக்கு உரியது. திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரியது. வாமன அவதாரம் எடுத்தபோது திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமாதேவியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான்.

    ஒப்பிலியப்பன் திருமணம் செய்து கொண்டது ஐப்பசி மாத திருவோண நட்சத்திர நாளில்தான்.திருவோணம் விரதம் விரதம் பெருமாளுக்கு உகந்தது. திருவோணத்தன்று பெருமாள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் திருவோணத்துக்கு முதல் நாள் இரவு உணவை தவிர்க்க வேண்டும். திருவோண நட்சத்திரமன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷமான வாழ்வு அமையும். திருவோணம் விரதம் இருப்பவர்கள் மாலையில் சந்திர தரிசனம் காண வேண்டும்.

    திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும் என்பது நம்பிக்கை.