Tag: Sri Rangam

  • Sri Rangam Vaikunda Egadasi Special

    கலியுகம் பிறந்ததும், வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடினார்கள். இதனைக் கண்ட பெருமாள் காவலர்களிடம் ‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு காவலர்கள், ‘‘கலி பிறந்துவிட்டது. இனிமேல் அதர்மம் தலை தூக்கும்; தர்மம் நிலை குலையும்; பாவங்கள் பலவிதங்களில் பெருகும். அந்தச் சூழலிலிருந்து மானிடர்கள் யாரும் தப்ப முடியாது. அதனால் வைகுண்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள்,’’ என்றார்கள்.

    உடனே பெருமாள் சொன்னார்: ‘‘கலியுகத்தில் பக்தி பெருகும். தர்மம் செய்பவர்கள் பெருகுவார்கள். அப்படி சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்,’’ என்று அருளினார். இப்படி பெருமாள் அருளியது, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில். இப்படி பல புராண வரலாறுகள் இருந்தாலும், வைணவ ஏகாதசி அன்று சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைப்பிடித்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இருக்கும் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பெரும்பாலான வைணவக் கோயில்களில் பரமபதவாசல் என்று ஒரு சந்நதி இருக்கும். இந்த வாசல், வடக்கு நோக்கி இருப்பதைக் காணலாம். இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்தக் கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஸ்ரீரங்கத்துக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

  • Sri Rangam Sorgavasal thirappu

    வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

    பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட இன்று வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் அதிகாலை திறக்கப்பட்டது.

    இதனையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. பரமபதவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாள் திருக்கொட்டகையில் பிரவேசமாகினார்.

    நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர். சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

  • Sri Rangam Ranganathar koil sirappugal

    அரங்கநாதர் எனும் பெயரில் ரங்கநாயகித் தாயாரோடு திருமால் எழுந்தருளியுள்ள தலம் இது. பூலோக வைகுண்டம் என பக்தர்களாலும் ஆழ்வார்கள், ஆச்சார்யர்களாலும் போற்றப்பட்டு வரும் தலம். 108 வைணவ திவ்ய தேச திருத்தலங்களுள் முதல் திருத்தலம். ஸ்ரீரங்கநாதன், ஆதிசேஷன் மீது துயில் கொண்ட திருக்கோலம். தெற்கு முகம் நோக்கி சயனித்திருக்கிறார். திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து தோன்றியதாகும். பிரம்மா நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார்.  

    பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இக்ஷ்வாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேக வைபவம் காண வந்திருந்த விபீஷணனுக்கு, ராமர் இவ்விமானத்தைப் பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரிக்கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. 

    எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி’’ பள்ளி கொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான். தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது.

    பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடனும் (அந்தக் கிளி ‘‘வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு  காணலாம்’’ என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது), தனக்கு வந்த கனவுத் தகவல் மூலமாகவும் விமானம் இருந்த  இடத்தைக் கண்டுபிடித்தான். விமானம் மற்றும் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான். இதன் வெளிச் சுற்று மதில், 950 ஜ் 816 மீட்டர் பரப்பு கொண்டது. இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளது.  

    மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும்  வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுகளும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளி மூன்று சுற்றுகளுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.

    ஸ்ரீரங்கம் கோயிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்கு பல கொடைகளும் கைங்கரியமும் செய்துள்ளதாக அவை அறிவிக்கின்றன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டு வரை உள்ளன. ‘கோயில் ஒழுகு’ 11ம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோயில் வரலாறு ஆகும். இதன்படி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிராகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. கோயிலொழுகு காலப்போக்கில் திருவரங்கம் விண்ணகரத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தொகுத்து உரைக்கிறது. 

    ஆதிசங்கரர் இத்தல ரங்கநாதரைக் குறித்து அருளிய ‘ஆனந்த  போதே…’  எனத்தொடங்கும் ரங்கநாதாஷ்டகம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருச்சி திருவரங்கம் காவிரி ஆற்றங்கரையில் அம்மா மண்டபம் அமைந்திருக்கிறது. இந்து சமயத்தின் புனிதச் சடங்குகளுள் ஒன்றான நீத்தார் கடன், இப்பகுதியில் அதிகம் நடத்தப் பெறுகின்றன. இக்கோயிலில் உலக நன்மைக்காக 57 ஆண் டுகளுக்குப் பிறகு நம்பெருமாள் உபய நாச்சியார்களுக்கு 1001 கலச அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி இவ்வாண்டு நடைபெறுகிறது. இதே போன்று இக்கோயிலில் 1957ம் ஆண்டு துரைபிரதட்சணம் மண்டபத்தில் 1001 கலசங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. 

    1001 கலசங்களில் 360 மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்டு அபிஷேகம் நடைபெறுகிறது. இவற்றில் 81 கலசங்கள் பிரம்ம பதம் என்றும், 520 கலசங்கள் தேவ பதம் என்றும் 400 கலசங்கள் மானூஸ் பதம் என்றவாறு அமையும். அகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தனார்) திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழா பற்றி குறிப்புள்ளது. சங்கம் மறுவிய காலத்தில், மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார் களும் (கிபி 5ம்நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். 

    நாலாயிய திவ்யப் பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான். கோயில் தென்புறத் தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர் களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம், அகோபில  மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் 8 ஆண்டுகள் தொடர்ந்து கட்டுமான வேலைகள் நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்திலுமாக 1987ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1.7 கோடி செங்கற்கள், 20,000 டன் மணல், 1,000  டன் கருங்கல், 12 ஆயிரம் டன் சிமென்ட், 130 டன் இரும்பு கம்பிகள், 8,000 டன் வர்ண பூச்சு கொண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரம் டன் எடை கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. 

    வைகுண்ட ஏகாதசி, ஒரு தென்னை மரத்தின் அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின் முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும். பகல்பத்து,  ராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதவும்,  பாடவும் பெறும். பிரமாண்டமான இந்த திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு பெருமாளை வணங்குவர். அதோடு இத்தலத்தில் நடக்கும் 3 பிரம்மோற்சவ விழாக்களிலும் (10 நாட்கள்) லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். 

    மாசி மாத தெப்பத் திருவிழா 10 நாள் விழாவிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருக்கும். தமிழ் ஆங்கில வருடப் பிறப்பின் போதும் சனிக்கிழமைகளிலும் கோயிலில் பெருமளவு பக்தர்கள் வருகை இருக்கும். இக்கோயிலின் 4ம் பிராகாரம் மிகவும் அதிசயத்தக்கதாக உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்சவம் (3 முறை) நடைபெறும் தலம். 

    புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கிய படி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமாவதாரம் முடிந்த பின்பு தோன்றிய பழமையான கோயில். பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை. 

    இத்தலத்து விமானம் பிரணாவாக்ருதி எனப்படுகிறது. வட இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் சிறப்பு வாய்ந்த வைணவ தலம். இந்தியாவில் உள்ள சில பிரமாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று.  ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்க நாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி,  முத்தங்கி சேவை சாதிக்கிறார். 

    இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது. திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது. டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது. இத்தலத்தில் தங்கி பல காலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம் அடைந்தார். 

    அவரது உடலை, சீடர்கள் பத்மாசன மாக அமர்த்தி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சந்நதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது. கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால்,  அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் 
    செய்கின்றனர். 

    கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர். ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய  தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணி விக்கப்பட்ட தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். 

    இந்த அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம். ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் ஆடிப் பெருக்கு உற்சவம் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், ‘அதை நரசிம்மரே சொல்லட்டும்!’ எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். 

    அப்போது நரசிம்மர்,  கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, ‘கம்பரின் கூற்று உண்மை!’ என ஆமோதித்து  தலையாட்டினார். மேட்டழகிய சிங்கர் என் றழைக்கப்படும் இவர், தாயார் சந்நதி அருகில் தனிச்சந்நதியில்  இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, சக்கரம் கிடையாது. சந்நதி எதிரில்,  கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது. சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது. சத்தியலோகத்தில்  ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. 

    இதை, ‘ஆதி பிரம்மோற்ஸவம்’  என்கின்றனர். இவ்விழாவின் இடையே  வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி,  ரங்கநாயகி தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில் ராமர் கொண்டாடிய  விழா, தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, பூபதி திருநாள் என்றே அழைக்கப்படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம். கோயில் பிராகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சந்நதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து  வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ்வாரிடம் ஒப்படைத்தார். 

    இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட் டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்னப்பெருமாள் கோயில் பிராகாரத்தில் தானிய லட்சுமிக்கு சந்நதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர்,  இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. 

    சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். பிரம்மோற்ஸவத்தின் போது பெருமாள், இவளது  சந்நதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை. 

    பெருமாளே அன்னப் பெருமாளாக அருள்பாலிப்பது சிறப்பு. ரங்கநாதர் சந்நதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30  மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது.  வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சந்நதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு. 

    மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கும் இங்கு சந்நதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும் சுவாமி க்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்தக் கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். 

    பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால்  (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சந்நதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்த ளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள்  இயக்கப்படுகின்றன. 
     

  • Sri Rangam Ranganathar Koil Unjal Urchavam

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நவம்பர் 2 ஆம் தேதி தொங்குகிறது.  இந்த ஊஞ்சல் உற்சவ திருநாள் நவம்பர் 2-ந்தேதி தொடங்கப்பட்டு 8-ந்தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது.

    ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, தினமும் மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேருகிறார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 8-ந் தேதி மட்டும் படிப்பு கண்டருளி மூலஸ்தானத்தை ரெங்கநாச்சியார் சேருகிறார்.

     ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் 7 நாட்களிலும் மாலை 3 மணி முதல் 5 மணிவரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது. மற்ற காலங்களில் வழக்கம்போல சேவை நடைபெறும். 

  • Sri Rangam Chitirai Car Festival

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வருகிற 25 ஆம் தேதி தொடங்குகிறது. மே 5 ஆம் தேதி வரை நடைபெற இந்த விழாவுக்கு நாளை மறுநாள் காலை கொடி ஏற்றப்படுகிறது.

    28-ந்தேதி மாலை 6 மணிக்கு கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வருகிறார். மே 2-ந்தேதி காலை 7 மணிக்கு வண்டுலூர் சப்பரத்திலும், மாலை 6.30 மணிக்கு மேல் தங்க குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். மே 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 5-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதி உலா வருகிறார்.

    முன்னதாக சித்திரை திருநாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆண்டு தோறும் வஸ்திர மரியாதை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வஸ்திர மரியாதை செய்யும் நிகழ்ச்சி மே  2-ந்தேதி நடைபெற உள்ளது.
     

  • Sri Rangam Panguni car festival

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

    108 வைணவத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி தேர்விழா மிகவும் விமர்சையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டு பங்குனி தேர்த்திருவிழா கடந்த மார்ச் 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    அந்தவகையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நம்பெருமாளை வழிபட்டனர். 

    இதனை தொடர்ந்து நாளை பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

  • Sri Rangam Nammazvarukku Motcham

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 7-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது. 

    நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நடத்தி காட்டப்பட்டது.

    நம்மாழ்வார் பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் வெள்ளை உடை உடுத்தி பன்னிருநாமமும், துளசி மாலையும் தரிசித்து காட்சியளித்தார். அதன்பின் நம்மாழ்வாரை அச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி இருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். 

    பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். அதன்பின் பல்வேறு வேதங்களை உச்சரித்தவாறு நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர். 

    பின்னர் நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்பட்டது. பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை காண்பித்து நம்மாழ்வார் மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர்.

    அதன் பின் காலை 8 மணிமுதல் 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். இதனை தொடர்ந்து நம்பெருமாள் காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். அதன்பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது. 

    அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் இன்று(29-ந்தேதி) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. அதன்பின் அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சாற்றமறை நடைபெற்றது. இத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது.