Tag: sorgavasal

  • Srirangam sorgavasal thirappu

    பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திபரவசத்துடன் நம்பெருமாளை சேவித்தனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பு வாய்ந்தாக கருதப்படும் வைகுந்த ஏகாதசி விழாவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

    கடந்த டிசம்பர் 22-ம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, அதனைத் தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி நேற்று வரை வைகுந்த ஏகாதசியின் பகல்பத்து எனப்படும் திருமொழித் திருநாள் நடைபெற்றது. இந்நாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்வேறு அலங்காரங்களில் ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் கோவில் பிரகாரங்களில் வலம் வந்து பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    இராப்பத்து திருவிழாவின் முதல்நாளான இன்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4.45 மணியளவில் விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர அபயஸ்தம் உட்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தை சுற்றி வந்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக கடந்து வந்தார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு பரமபதவாசலைக் கடந்துச்சென்றனர்.

    பின்னர் நம்பெருமாள் பக்தர்களுக்கு நேரடியாகச் சென்று காட்சி தரும் திருகொட்டகை பிரவேசம்  கண்டருளினார். ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தடைந்து பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார். ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளை இன்று இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

     

  • Srirangam sorgavasal thirappu

    பொதுவாக மார்கழி மாதம் வளர்பிறையில்தான் சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த முறை மார்கழி மாதம் போகி பண்டிகையின்போது ஏகாதசி வருவதால், ஸ்ரீரங்கம் கோயிலில் மட்டும் கார்த்திகை மாதமே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    108 வைண திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்.  இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, "பகல்பத்து திருமொழி, ராப்பத்து திருவாய்மொழி" என 21 நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் பகல்பத்து திருநாள் கடந்த 4ம் தேதி தொடங்கி 13ம் தேதி நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ரத்தின அங்கியணிந்த நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, சொர்க்க வாசலுக்கு வந்தார். சரியாக 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

    அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் "ரங்கா… ரங்கா… கோவிந்தா… கோவிந்தா…" என விண்ணதிர பக்திமுழக்கமிட்டனர். நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்த பிறகு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். 

    சொர்க்கவாசல் திறப்பின்போது கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் பணியாளர்கள் உட்பட வெகுசிலரே இருந்தனர். 
     

  • Vaikunda egadasi 10 days sorgavasal

    வைகுண்ட ஏகாதசி தினமான ஜனவரி மாதம் 13ஆம் தேதி முதல் பத்து நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் திறந்திருக்கும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

    அடுத்த மாதம் 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி தினமாகும். அன்று முதல் பத்து நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும். எனவே பக்தர்கள் பத்து நாட்களும் ஏழுமலையானை தரிசித்து வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம்.

    பிரம்மோற்சவ நாட்களில் செய்யப்பட்டது போல் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த பட்டியல் இனத்தவர்கள், மீனவர்கள் ஆகியோரை சொர்க்க வாசல் திறந்திருக்கும் நாட்களில் திருப்பதி மலைக்கு அழைத்து வந்து இலவசமாக தரிசனம் செய்யும் வசதியை செய்து கொடுக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டால் புத்தாண்டு முதல் அதிகளவிலான பக்தர்கள் ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளிலும் பக்தர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

    திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக ஸ்ரீவெங்கடேஸ்வரா நாம கோடி புத்தகங்கள் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் செயல்படும் ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெறும்.

    இதற்காக நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஏழுமலையான் கோவிலில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நடைபெறும் அனைத்து சேவைகளையும் வருடத்தில் ஒருநாள் தரிசிக்கும் வகையிலான உதய அஸ்தமன சேவை டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் நன்கொடை உதவியுடன் திருப்பதி மலையில் அனுமன் அவதரித்த இடத்தில் அவருடைய தாய் அஞ்சனா தேவிக்கு முழு அளவிலான ஆலயம் ஒன்றை ஏற்படுத்தவும், ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் நாத நீராஞ்சன மண்டபம் பகுதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.