Tag: Saibaba

  • Saibaba Arpudhangal

    பாபாவின்  சொல்லுக்கு பஞ்ச பூதங்களும் கட்டப்பட்டன என்பதை  குறிக்கும் சம்பவங்களை இப்போது பார்க்கலாம் . இருள் கவியத் தொடங்கியிருந்த ஒருநாள் மாலை நேரத்தில் , திடீரெனக் கடும் புயலும் பெருமழையும் சீரடியை தாக்கியது . அரைமணிநேரத்தில் தெருவெல்லாம் வெள்ளக் காடானது . தாழ்வான பகுதிகளில்இருந்த வீடுகளுக்குள்ளே வெள்ளம் வேகமாய்ப் புகுந்தது.

    மக்கள்  வீட்டுக்குள் வைத்திருந்த கோதுமை மாவும் பிற உணவுப் பொருட்களும் நீரில் கரைந்து ஓடின. கூரைகள்  புயலின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பிய்த்துக் கொண்டு காற்றில்பறந்தன. மக்கள்  செய்வதறியாது பரிதவிப்போடு தங்கள் இல்லங்களை விட்டு வெளியே வந்து நின்றார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கும்பல் கும்பலாகக் கொட்டும் மழையில் நனைந்து நின்றார்கள்.

    இப்போது என்ன செய்யப் போகிறோம் ,  இந்தப் புயலிலிருந்தும் மழையிலிருந்தும் எப்படித் தப்பிப்பது? என்று சீரடி மக்கள் கலங்கி நின்றார்கள் . ஆடுமாடுகளோ  கூட்டம் கூட்டமாக தங்கள் நாயகன் பாபாவின் மசூதி நோக்கி ஓடோடிச் சென்றன. அவை மசூதி வாயிலில் பாபாவின் கருணை வேண்டி நின்ற  அற்புதக் காட்சியைப் பார்த்த மக்களுக்கு  அப்போது தான்  புத்தி  எட்டியது . என்ன தான் இருந்தாலும் ஆறறிவு இல்லையா ? .

    அந்த பசுக்கூட்டங்களுக்கு இருந்த தற்காப்பு உணர்வும் , தங்களைக் காக்க பாபா இருக்கிறார் என்ற எண்ணமும் இல்லாதது நினைத்து வருந்தினர் . ஆடு மாடுகளைப் பின்பற்றி  தாங்களும் மசூதி நோக்கி ஓடலானார்கள். எல்லோரும்  கூக்குரல் இட்டு பாபா! எங்களைக் காப்பாற்றுங்கள்! என்று அவரிடம் தஞ்சம் புகுந்தார்கள். தன்னிடம் சரண் புகுந்த  மக்களையும், ஆடுமாடுகளையும் பரிவோடு பார்த்தார் பாபா . பின் திடீரெனச் சீற்றத்தோடு எழுந்து மசூதிக்கு வெளியே வந்து ஆகாயத்தை உற்றுப் பார்த்தார்.

    இடியும் மின்னலும் பேய்க்காற்றும் சீரடியையே  புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தன . அவரது விழிகள் கோவைப் பழமாய்ச் சிவந்தன. நிறுத்து! போதும் உன் சீற்றம்! என்று வானை நோக்கி உறுமினார் பாபா . எங்கு வந்து யாரிடம்ஆட்டம் போடுகிறாய்? சீரடியில் உள்ள ஆடுமாடுகள்,தாவரங்கள் உள்படஇங்கிருப்பவர்கள் எல்லோரும், என் பாதுகாப்பில் உள்ளது உனக்குத் தெரியாதா?ஜாக்கிரதை என்ற பாபாவின் முழக்கத்தைக் கேட்ட மக்கள் அச்சத்தோடு வியந்து, வாய்பொத்தி நின்றார்கள். இடி சத்தத்தையும்  மீறி  ஒலித்தது பாபாவின் குரல் .

    அடுத்த கணம் ஆகாயத்தில் பெருத்த மாற்றம் தோன்றியது . சட்டென்று மழை நின்றது. புயல் குளிர்ந்த தென்றலாய் மாறியது  , தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பது போல் இருந்தது .  மக்கள் பரவசத்தோடு பாபாவைக் கும்பிட்டார்கள். பின் மெல்லமெல்லக் கலைந்து தங்கள் இல்லம் சென்றார்கள்.

    தன்னை சுற்றி நின்ற ஆடுமாடுகளைத்  ஆதுரியத்துடன்  தடவிக் கொடுத்தார் பாபா. பிரிந்துசெல்ல மனமே இல்லாமல் தயங்கித் தயங்கி நடந்துசென்ற மக்களையும் , ஆடு மாடுகளையும் ,  இல்லம்திரும்பும் வரை கருணையோடு பார்த்தவாறே மசூதி வாயிலில் நின்று கொண்டிருந்தார் பாபா. வானத்தில் தோன்றிய முழு நிலவு அந்த சூழலை மட்டும் இன்றி மக்களின் உள்ளங்களையும் குளிர்வித்தது .

    மழையை மட்டுமல்ல,நெருப்பையும்  தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் பாபா. ஒருநாள் மசூதியில் மக்கள் கூடியிருந்த நேரம் .  மசூதியில் எப்போதும் துனி என்ற நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் . திடீரென அந்த நெருப்பு ஓங்கி எரியலாயிற்று. சடசடவெனப் பற்றிய நெருப்பு, மசூதியின் மேற்பகுதியைத் தொட்டுவிட்டது. இந்த நெருப்பு இப்போது எல்லா இடங்களிலும் பரவும்போல் தோன்ற மக்கள் பதைபதைத்தார்கள்.

    பாபா, தம் கையில் எப்போதும் பயன்படுத்தும்சட்கா என்ற கம்பை எடுத்து , அருகே இருந்த  தூணின் மீது ஓங்கி அடித்தார்  . ம்! நெருப்பே! இறங்கு கீழே! எதற்கிந்த ஆவேசம்? நான் கட்டளையிடுகிறேன். உடனடியாய்க் கீழே இறங்கிவிடு! என்று உரக்க முழங்கினார். தூணில் அவர் அடித்த ஒவ்வோர் அடிக்கும் துனியில் எரிந்த அக்கினி ஜ்வாலை, கட்டுப்பட்டுப் படிப்படியாய்க் கீழே இறங்கியது. பின் எந்த ஆவேசமும் இல்லாமல்,சாதாரணமாய் எரியத் தொடங்கியது. அதுவரை பீதியில் உறைந்து நின்ற அடியவர்கள் பிரமித்தார்கள். பஞ்ச பூதங்களையும் பாபா தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று உணர்ந்து பணிவோடு அவரை வணங்கினார்கள்.

    தன்னை சரணடைந்த சீரடி மக்களுக்காக புயலையும் மழையையும் கட்டுப்படுத்திய  நம் சாயி , இப்போது மழையில்லாமல் தண்ணீருக்காக தவிக்கும் தன் பக்தர்களுக்காக கருணை காட்டாமல் போய் விடுவாரா என்ன ? தன் குழந்தைகளின் தாகம் தீர்க்க தன் கருணை மழையோடு அந்த வான் மழையை நமக்கு தந்தருள மாட்டாரா ? நாம் அனைவரும் அவர் பாத கமலங்களை சரண் புகுந்து வான் மழைக்கு பிராத்திப்போம். பாபா மனம் இறங்கினால் அந்த வான் இறங்கும் . வறட்சி நீங்கி பசுமை பூக்கட்டும் .

    ஸ்ரீ சச்சிதானந்த சத் குரு சாய்நாத் மகாராஜ் கி ஜெய் …..
     

  • Saibaba kodutha varam

    சீரடி தெய்வத்தின்  ஒவ்வொரு சொற்களும் அவரின் அடியவர்களுக்கு வேத வாக்கு. அவர் சொல்லும் சொற்கள் மகத்துவம் வாய்ந்தது என்று மனமார நம்பினார்கள். அவர் சொல்லிவிட்டால் அது அப்படியே பலிக்கும் என்பது அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

     ஸோலாபூரைச் சேர்ந்த சகாராம் ஔரங்கபாத்கர் என்பாரின் மனைவிக்கு 27 ஆண்டு காலமாகக் குழந்தையில்லை.  கண்ணில் பட்ட தெய்வங்கள் அனைத்துக்கும் கணக்கற்ற பிரார்த்தனைகளை அவள் செய்துகொண்டாள்.  ஆனால் அதற்கான பலனை தான்  காண முடியவில்லை . இதனால் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த அவள்,   இறுதி முயற்சியாகத் தனது சகோதரியின் புதல்வனான விஸ்வநாத்துடன் சீரடி வந்து பாபாவுக்குச் சேவை செய்துகொண்டு இரண்டு மாதங்கள் தங்கியிருந்தாள். 

     மசூதிக்கு அவள் சென்றபோதெல்லாம் கூட்டத்தால் மசூதி நிரம்பி இருப்பதையும், பாபா பக்தர்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்டாள்.அவள் அவரைத் தனியாகக் கண்டு வீழ்ந்து வணங்கி தனது நீண்ட நாள் கோரிக்கையான பிள்ளை வரத்தை வேண்ட விரும்பினாள். ஆனால் அதற்கான  உரிய சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தினால், முடிவாக அவள் பாபாவிடம் அவர் தனியாக இருக்கும்போது தனக்காகப் பேசும்படி பாபாவின் நெருங்கிய நண்பரான  ஷாமாவிடம் கேட்டுக்கொண்டாள். 

     ஷாமா அவளிடம் பாபாவின் தர்பார் வெளிப்படையானது என்றும், எனினும் அவளுக்காகத் தான் முயற்சிப்பதாகவும், கடவுள் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் கூறினார்.  தேங்காயுடனும், ஊதுபத்தியுடனும் முன்னிருக்கும் திறந்தவெளியில் பாபாவின் உணவு நேரத்தில் தயாராக இருக்கும்படியும், அவர் அவளுக்கு ஜாடை காண்பித்ததும் வரவேண்டும் என்றும் கூறினார்.  ஒருநாள் உணவுக்குப்பின் பாபாவின் ஈரக்கையை ஷாமா துண்டால் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தார். 

     இதன் பின்னர் பாபா தமது இருக்கையில் போய் அமர்ந்தார். ஷாமா அந்தப் பெண்மணிக்கு ஜாடை செய்தார்.  அவள் மேலே வந்து வணங்கி தேங்காய், ஊதுபத்தி இவைகளை பாபாவிடம்அளித்தாள்.  பாபா அந்த முற்றல் தேங்காயை ஆட்டினார்.  அதனுள்ளிருந்த பருப்பு உருண்டு சப்தம் செய்தது. 

     பாபா: ஷாமா இது உருளுகிறதே, என்ன சொல்கிறது என்பதைக் கவனி. 

    ஷாமா:  இந்த பெண்மணி, அந்த மாதிரியாக ஒரு குழந்தையும் தனது வயிற்றில் உருண்டு உயிர்ப்புற வேண்டுமென்று வேண்டுகிறாள்.  எனவே அத்தேங்காயைத் தங்களது ஆசீர்வாதத்துடன் கொடுங்கள். 

     பாபா: இத்தேங்காய் அவளுக்கு ஒரு மழலையை அளிக்குமா?  இம்மாதிரி விஷயங்களில் எல்லாம் ஜனங்கள் எவ்வளவு முட்டாள்தனமாகவும், போலி நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.

     ஷாமா:  உங்களது மொழி, ஆசி இவைகளின் சக்தியை நாங்களறிவோம் .  உங்களது சொல் அவளுக்கு நிச்சயம் குழந்தைப் பேற்றை அளிக்கும்.  நீங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர உண்மையான ஆசியை அளிக்கவில்லை.

    விவாதம் கொஞ்சநேரம் நடந்துகொண்டு இருந்தது.  பாபா தேங்காயை உடைக்கும்படி மீண்டும் மீண்டும் ஆணையிட்டுக் கொண்டிருதார்.  ஷாமாவோ முழுத் தேங்காயையும் அப்பெண்மணிக்கே அளிக்கும்படி விவாதித்துக்கொண்டிருந்தார்.  முடிவாக பாபா சம்மதித்தார். 

    பாபா: அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும்

     ஷாமா:  எப்போது?

    பாபா:  12 மாதங்களில்

    இதன்பேரில் தேங்காய் இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பகுதியை இருவரும்உண்டனர்.  மறுபகுதி அவளிடம் அளிக்கப்பட்டது. 

     பின்னர் ஷாமா அப்பெண்மணியின் பக்கம் திரும்பி "தாயே ! நீ எனது மொழிகளுக்கு ஒரு சாட்சி.  பாபாவின் கருணையால் பன்னிரண்டு மாதங்களுக்குள் உனக்குக் குழந்தை நிச்சயம் பிறக்கும். நான் கூறுவதை நீ விரைவில் உணர்வாய்" என்று கூறினார்.

     பாபாவின் வாக்கு பொய்யாகவில்லை. அவள் ஓராண்டுக்குள் ஒரு புதல்வனைப் பெற்றெடுத்தாள்.  புதல்வனது ஐந்தாவது மாதத்தில் அவனை மசூதிக்கு எடுத்துவந்தாள்.  கணவன், மனைவி இருவரும் பாபாவின் முன்னால் வீழ்ந்து வணங்கினார்கள். பாபாவுக்கு தங்களது  நன்றியை தெரிவிக்க ,அத்தகப்பனார் ரூ.500ஐ அன்பளிப்பாகச் சமர்ப்பித்தார்.  ஷ்யாம் கர்ணா என்ற பாபாவின் குதிரைக்கு ஒரு கொட்டகை கட்டுவதற்காக அத்தொகை செலவிடப்பட்டது.

    சீரடி சாய் பாதம் பணிவோம் ………

    சச்சிதானந்த சத்குரு சாய்நாத் மகாராஜ் கி ஜெய் ……

  • Saibaba Mandiram

    சாய்பாபாவின் வழிபாட்டிற்கு உகந்த சிறப்பு வாய்ந்த மந்திரங்களை காண்போம். இந்த மந்திரங்களை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் அனைத்து வித நன்மைகளும் நடக்கும்.

    ஷீரடி சாய்பாபாவின் காயத்ரி :

    ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
    ஸர்வ தேவாய தீமஹி
    தந்தோ ஸர்வப்ரசோதயாத்

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
    சச்சிதானந்தாய  தீமஹி
    தந்நோ சாய்  ப்ரசோதயாத்

    ஷீரடி சாய்பாபாவின் தியான ஸ்லோகம் :

    பத்ரி க்ராம ஸமத் புதம்
    த்வாரகா மாயீ வாசினம்
    பக்தா பீஷ்டம் இதம் தேவம்
    ஸாயி நாதம் நமாமி :

    ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம் :

    "ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி"
     
    சாயிநாதர் திருவடி :

    ஸாயி நாதர் திருவடியே
    ஸம்பத் தளிக்கும் திருவடியே
    நேயம் மிகுந்த திருவடியே
    நினைத்த தளிக்கும் திருவடியே
    தெய்வ பாபா திருவடியே
    தீரம் அளிக்கும் திருவடியே
    உயர்வை யளிக்கும் திருவடியே

    ஓம் சாய் ராம் 

  • Thursday Saibaba Viradham

    எண்ணிய காரியம் நிறைவேற ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிராதித்துக் கொள்ள வேண்டும் காலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். 

    இந்த விரதத்தை பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது

    பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிறமலர்கள் மாலை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நெய்வேத்தியம் வைத்து, விநியோகம் செய்து சாய்பாபாவை வணங்கவும். முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்லவும். 

    வீட்டிலேயே சாய் பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும். விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யலாம் ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.

  • saibaba arpudhangal

    எங்கும் நிறை பேரறிவான சத்குரு சாய்பாபா , தான் படைத்த அனைத்து ஜீவராசிகளிலும் தன்னை காண முடியும் என்பதை அவ்வப்போது உணர்த்திக் கொண்டே தான் இருக்கிறார் . மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் . அதேப்போல் தன அடியவர்களுக்கு செய்யும் தொண்டு தன்னை வந்தடையும் என்பதையும் பாபா பல தருணங்களில் நிரூபித்து இருக்கிறார் . அப்படியான ஒரு அற்புதத்தை இப்பதிவில் பார்ப்போம் .

    ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்பவர் நாந்தேட் கிராமத்தில் வசித்தது வந்த  பார்சி மில் காண்டிராக்டர் . இறைவன் அளவற்ற எல்லாச் செல்வங்களுடன்  அவரை ஆசீர்வதித்து இருந்தாலும் ,   ஒரு செல்வத்தைத் மட்டும் அவருக்கு அருளவில்லை . மக்கட் செல்வம் தானே  அனைத்திலும் சிறந்தது . வாடியாவிற்கும்  தன் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லையே  என்ற குறை அவர் மனத்தை வாட்டி வதைத்தது. அவர் கிராமத்தில் வசித்து வந்த மக்கள் அவரை பெரிதும் மதித்தனர். தர்மசீலரான அவர் ஏழை எளியவர்களுக்கு  தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். நாட்கள் செல்லச் செல்ல தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தியது. ஒரு  சமயம் அவரின் துன்பத்தைக் கண்ட அவரது  நெருங்கிய நண்பரான தாஸ்கணு,கவலைக்கான காரணத்தைக் கேட்டார் .

    உற்ற நண்பரான தாஸ் கணுவிடம் எதையும் மறைக்காமல் , வாடியா  தனக்கு ஒரு குழந்தை  செல்வம் இல்லாத குறையை வெளிப்படுத்தினார் . பாபாவின் தீவிர பக்தரான  தாஸ்கணு,தன் தெய்வம் பாபா நினைத்தால் எந்த அற்புதங்களையும் செய்வார் என்ற நம்பிக்கையுடன் ,  அவர் வாடியாவை பாபாவிடம் செல்லுமாறு கூறி தேற்றினார் . பாபாவிடம் வேண்டினால், கட்டாயம் குழந்தைப் பேறு  கிட்டும் என்று வாடியாவிற்கு  நம்பிக்கையூட்டினார்  தாஸ்கணு. அலைக்கடலில் சிக்கித் தத்தளித்தவனுக்கு  ஒரு பெரிய மரக்கலன் கிடைத்தது போன்று இருந்தது  வாடியாவிற்கு . ஷிர்டி செல்ல முடிவெடுத்த அவர் , சில நாள்களிலேயே பழங்களையும் பூமாலையையும் வாங்கிக் கொண்டு, பாபாவுக்கு தட்சிணையாக ஐந்து ரூபாயையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார். பாபாவைப் பார்த்த மறுகணமே அந்தக் கருணை நிறைந்த வடிவம் வாடியாவின் மனத்தைக் கரைத்தது. பரவசத்தோடு பூமாலையை பாபா கழுத்தில் அணிவித்து, பழக்கூடையை சமர்ப்பித்தார். பின் அவரது தாமரைப் பாதங்களைக் கீழே விழுந்து நமஸ்கரித்தார். மெல்ல எழுந்து அவர் அருகில் அமர்ந்து கொண்ட வாடியா . ஏராளமான அடியவர்கள் பாபாவைத் தேடி வருவதையும் அவரது பாதங்களில் சரணடைவதையும் பார்த்து வியந்தார்.

    பாபாவை சரணடைந்த அந்த கணமே , தம் பிரார்த்தனை கட்டாயம் பலிக்கும் என்ற பூரண நம்பிக்கையோடு குழந்தைப்பேறு வேண்டி மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கலானார். திடீரென வாடியாவின் பக்கம் திரும்பிய பாபாவின் பார்வை. “எனக்கு ஐந்து ரூபாய் காணிக்கைப் பணம் கொண்டு வந்திருக்கிறாயே? எடு!” என்றார் உரிமையுடன். தாம் ஐந்து ரூபாய் எடுத்துவந்த விஷயம் இவருக்கு எப்படித் தெரியும் என வியந்தவாறே ரூபாயை எடுத்தார் வாடியா. அப்போது , “அந்த ஐந்து ரூபாயில் ஏற்கனவே மூன்று ரூபாய் பதினான்கு அணா நான் வாங்கிக் கொண்டுவிட்டேன். மீதியை எடு!”என்றார் பாபா  சற்றே அதட்டலுடன். தாம் ஷிர்டிக்கு வருவதே முதல்முறையாக இப்போதுதான். அப்படியிருக்க இந்த மூன்று ரூபாய் பதினான்கு அணா விஷயம் என்னவென்று தெரியவில்லையே?  என்று வாடியாவுக்கு ஒன்றும் புரியவில்லை.ஆனால், பாபா எதுசொன்னாலும்  அதில் ஒரு காரணம் இருக்கும் ஆதலால் , அவர் சொன்னபடி எந்தப் பிசகும் இல்லாமல் அப்படியே செய்ய வேண்டும் என ஏற்கனவே அவருக்கு  தாஸ்கணு அறிவுறுத்தியிருந்தார் . ஆகையால், மறுபேச்சுப் பேசாமல், மீதி ஒரு ரூபாய் இரண்டணா காணிக்கையை  பாபாவின் பாதத்தில் சமர்ப்பித்தார். தமக்குக் குழந்தைப் பேறு கிட்ட அருளவேண்டும் என பாபாவிடம் விண்ணப்பித்தார். அவரது தலையை அன்போடு வருடிய பாபா, அவரின் கஷ்ட காலமெல்லாம் நீங்கிவிட்டதென்று ஆறுதல் கூறினார். மகிழ்ச்சியோடு ஷிர்டியிலிருந்து மீண்டும் நாந்தேட் கிராமத்திற்கு வந்தார் வாடியா.

    நண்பர் தாஸ்கணுவிடம் சீரடியில்  நடந்த அனைத்தையும் ஒரு வரிவிடாமல் சொன்னார். மூன்று ரூபாய் பதினான்கு அணா விஷயம் மட்டும் புரியவில்லை என்றும் அதன் பின்னணிச் சூட்சுமம் என்னவாக இருக்குமென்றும் கேட்டார். தாஸ்கணுவின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. திடீரென்று அவர் மனத்தில் மின்னல் வெட்டியது. “சில நாட்கள் முன்னால், மவுலா சாஹேப் என்ற இஸ்லாமிய அன்பரை வரவேற்றோமே? அவருக்கு நீங்கள்தானே வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தீர்கள்? அதற்கான செலவுக் கணக்கைக் கொண்டு வாருங்கள்! ”என்றார் தாஸ்கணு. வாடியாவுக்கும் சடாரென்று அது நினைவு வந்தது. அந்த இஸ்லாமிய அன்பர், வாடியா ஷிர்டி செல்ல நினைத்துக் கொண்டிருக்கும்போது வருகை புரிந்தவர். சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து, பின் ஆன்மிக நாட்டம் கொண்டு துறவியானவர்.

    அவரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆன செலவைத் தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்திருந்தார் வாடியா. ஓடிப்போய் அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துவந்து செலவுக் கணக்கைக் கூட்டிப் பார்த்தபோது என்ன ஆச்சரியம்! அது மிகச் சரியாக மூன்று ரூபாய் பதினான்கு அணா இருந்தது! ஓர் அணா கூடக் குறையவுமில்லை. கூடவுமில்லை! மவுலா சாஹேப் என்ற அந்த அன்பருக்கு செய்த உபசாரமெல்லாம் தமக்குச் செய்த மாதிரிதான் என்பதை பாபா அழகாக அறிவித்துவிட்டார் .

    வாடியாவின் கரங்களும் தாஸ்கணுவின் கரங்களும்  பக்திப் பெருக்கால் பாபாவை நினைத்துக் குவிந்தன. பின் உரிய காலத்தில் வாடியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    பாபாவின் பாதங்களை உண்மையில்  நம்பிக்கையுடன்  சரணடைந்தவர்களுக்கு குறையொன்றும் இல்லை .
     

  • Siridi saibaba Darisanam

    சீரடியில் சாய்பாபா தவம் செய்த இடம், தூங்கிய இடம், சமாதியான இடம் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச் சிறந்த வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டுள்ளது.

    தம் வாழ் நாளில் எளிமையைக் கடைபிடித்த பாபாவின்  கோவிலுக்கு மொத்தம் நான்கு  நுழைவாயில்கள் இருக்கிறது.

    கேமரா, செல்போன்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது. சீரடியில் சாதாரண நாட்களை விட வியாழக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் கூட்டம் இரட்டிப்பு மடங்கு இருக்கும்.

    சமாதி மந்திரில் உள்ள சாய்பாபா சிலை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. நாம்  எங்கு நின்றாலும் பாபா நம்மை  பார்ப்பது போலவே இருக்கும். மேடையில் சமாதியின் பின்புறம், இட்டாலியன் மார்பிளாலான பாபாவின் சிலை அழகான வெள்ளிக் குடையின் நிழலில் இருக்கிறது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான இந்தத்  திருவுருவச் சிலை பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டது.

    பாபா சன்னிதானத்தில் இருபக்கமும் நாங்கு  வரிசையாகப் பிரித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் பூஜை பஜன் ஆரத்தி எல்லாம் ஆகிறது. க்யூவில் வந்து சந்நிதானத்துக்கு உள்நுழையும் போது, சற்றே முன்பாகவே நின்று கொண்டு விட்டால் நல்ல தரிசனம் கிடைக்கும்.

    மூன்றாம் எண் நுழைவாயில் வழியாக சென்றால் குருஸ்தானுக்கு முன்பு சமாதி மந்திர் ஜன்னல் வழியாக பாபாவை மிக எளிதாக பார்த்து தரிசனம் செய்யலாம்.

    சன்னிதானத்துக்குள் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 300 பேர் வரை நின்று தரிசிக்கலாம். . பாபாவை தரிசனம் செய்து முடித்ததும் மூன்றாம் எண் கேட் வழியாக வெளியே வந்தால் பாபா வசித்த துவாரகமாயிக்கும், சாவடிக்கும் மிக எளிதாக செல்லலாம்.

    சீரடியில் பாபாவுக்கு நடக்கும் 4 ஆரத்தியில் ஏதாவது ஒரு ஆரத்தியை கண் குளிர பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலே அது புண்ணியமாக கருதப்படுகிறது.

    பக்தர்கள் கொண்டு செல்லும் மாலைகளை பாபாவுக்கு போட்டுவிட்டு, ஏற்கனவே சாத்தி இருக்கிற மாலைகளில் ஒன்றை உருவி பிரசாதமாக தருகிறார்கள்.

    கோயிலுக்குள் நடக்கும் சாயிபஜன், கோயில் முழுக்க ஒலிக்கும்  வண்ணம்  ஆங்காங்கே ஒலி பெருக்கிகள் வைத்து இருக்கிறார்கள்.

    விருப்பம் இருந்தால் வெளியே உண்டியலில் பணம் போடலாம். கோவிலுக்குள் யாரும் பணம் கொடுவென்று கேட்பதில்லை. சிறப்பு தரிசனமும் கிடையாது.

    ஆலயத்திற்குள் உண்டியல் தவிர பெரிய அளவில் ரொக்கம், தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்த வசதி உள்ளது.

     சீரடி தேவஸ்தானம் சார்பில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் அந்த திட்டத்திற்கு பணம் கொடுக்கலாம்.

    பக்தர்கள் உதி அக்னியில் போட தேங்காய் வாங்கி கொடுக்கலாம். அந்த தேங்காயைப் பெற்றுக் கொள்ள ஆலயத்திற்குள் தனி இடம் உள்ளது.

    கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில் (லென்டித் தோட்டம் அருகில்) புத்தக விற்பனை நிலையம் உள்ளது. தமிழ் உள்பட எல்லா மொழி புத்தகங்களும் இங்கு கிடைக்கும். வெளியில் வாங்குவதை விட மிக, மிக, குறைந்த விலையில் இங்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    சீரடியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை துவாரக மாயியில் இருந்து சாவடிக்கு பாபா படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. நாடெங்கும் உள்ள சாய்பாபா ஆலயங்களில் வியாழந்தோறும் இத்தகைய வழிபாட்டை கடைபிடிக்கிறார்கள்.

    சீரடியில் பொது மக்கள் கண் எதிரிலேயே தினமும் உண்டியல் பணம் எண்ணப்படுகிறது. உண்டியல் பணத்தை எண்ணி சேவை செய்ய விரும்பும் பொது மக்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

    கோவில் உள்பகுதியில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

    சீரடிக்கு நினைத்தவுடன் போய் விட முடியாது. சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் என்று மனம் சொல்லி, சொல்லி பக்குபவப்பட்டவர்களை பாபா உடனே அழைத்து தரிசனம் கொடுத்து விடுவார்.

    எனவே சர்வம் சாயி என்று சாயி நாமம் ஸ்மரிப்போம்….அவர் பாதம் பணிவோம் …

    ஓம் சாய்ராம்..!
     

  • Saibaba mandiram

    மதங்களை கடந்து அணைவராலும் வணங்கப்படுபவர் சாய் பாபா. கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதப்படும் சாய் பாபாவை எவர் ஒருவர் வணங்கினாலும், சாய் பாபா ஓடோடி வந்து அவர்களின் துன்பத்தை துடைப்பார் என்பது நம்பிக்கை. அந்த வகையில் சாய் பாபாவை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் உச்சரிப்பது மேலும் சிறப்பானதாக அமையப்பெறும்

    ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே..

    சச்சிதானந்தாய தீமஹி..

    தன்னோ சாய் ப்ரசோதயாத்.

    இந்த மந்திரத்தை தினசரி 11 முறை அல்லது 33 முறை அல்லது 108 முறை செபிப்பது உகந்தது. தினசரி ஜெபிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம். இதை ஜெபிப்பவர்களுக்கு சாய் பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கப்பெற்று வளமுடன் வாழ்வர்.
     

  • Sridi Saibaba Mahimai

     "ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பதற்காக, நான் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் செல்ல வேண்டியவனாக உள்ளேன். என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.  எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ தேவையில்லை.  என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன் "- இது பகவான்  சீரடி நாதனின் வாக்கு .

     ஒவ்வொரு  நொடிப்பொழுதும் இதை மெய்ப்பிக்கும் வகையில் தன்னுடைய பக்தர்கள் வாழ்வில் அற்புதங்கள் செய்து வருகிறார் பாபா.

     மனித உருவில் பாபா வாழ்ந்த காலத்தில்  தனது பக்தர் ஒருவர்  வாழ்க்கையில் சாயி செய்த அற்புதத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம் .

     சீரடியில், காஷிராம் என்றொரு  அடியவர் இருந்தார் . துணி வியாபாரியான அவர்  பாபாவின் மிகத் தீவிர பக்தர். கண் விழித்த நேரம் முதல் , உண்ணும் போதும், உறங்கும்போதும், கடையில் துணி விற்கும்போதும் எந்த நேரமும் பாபாவின்  நினைவிலேயே  காலம் கழித்து வந்தார் . பாபாவை ஸ்மரித்தார்  என்பதை விட பாபாவை உயிர் மூச்சாகவே சுவாசித்தார் அந்த பக்தர். பாபா மனிதவடிவில் வந்துள்ள தெய்வம் என்பதை முழுமையாக நம்பிய அவர் கிடைத்த நேரத்தில் எல்லாம் பாபாவை  தரிசிப்பதில் சந்தோஷம் அடைந்தார் .

     அவரைப் பார்க்க செல்லும் போதெல்லாம் , அந்த கடவுளுக்கு நிவேதனப் பொருள் என எதையேனும் பக்தியோடு எடுத்துச்  செல்வது அவரின் வழக்கம் . அப்படித்தான் ஒருமுறை, பாபாவை தரிசிக்க  ஒரு சிறு துணிப்பையில், கொஞ்சம் சர்க்கரையை  எடுத்துக் கொண்டு, புறப்பட்டார்.

     

    வழக்கம் போல் பாபாவின்  நினைவையே தனக்கு  துணையாக கொண்டு அவர் நடந்தபோது, அவரை சில திருடர்கள் தொடர்ந்தார்கள் . துணி வியாபாரி என்பதால் அவர் கையில்இருந்த பையை  பார்த்த அவர்கள், அந்தப் பையில் அன்றைய துணி வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணம் அல்லது  வேறு எதோ விலை உயர்ந்த பொருள் ஒன்றை வைத்திருப்பதாக  நினைத்தார்கள். அந்தப் பையில் இருந்தது வெறும் சர்க்கரைதான் என்பதை  அந்தத் திருடர்கள் அறியவில்லை.

     

    வெறும் சர்க்கரைப் பையையா, இப்படி ஒருவன் மார்போடு சேர்த்து இறுகக் கையில் பிடித்துக் கொண்டு நடப்பான்?சந்தேகமில்லாமல் பையில்ஏதோ விலைமதிப்புள்ள பொருள் இருக்கிறது என்று திருடர்கள் தவறாக முடிவு கட்டினார்கள். காஷிராமை முற்றுகையிட்ட அவர்கள்., மிரட்டலுடன் கடுக்கன்களைக் கழற்றித் தரச் சொன்னார்கள்.பயந்துபோன, காஷிராம் உடனே கடுக்கன்களைக் கழற்றிக் கொடுத்து விட்டார். பின்னர்,கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியைக் கழற்றித் தரச்சொன்னார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கிலியையும் கொடுத்து விட்டார்.

     மிச்சம் இருந்த அந்தச் சிறுபையைத் தருமாறு அதட்டினார்கள் . தெய்வத்திற்கான நிவேதனப் பொருளை அவர்களிடம் கொடுக்க மனமில்லை  காஷிராமிற்கு அடுத்த கணம் முற்றிலும் எதிர்பாராத ஒரு  திருப்பம் நிகழ்ந்தது.

    அதே சமயத்தில்,சீரடி மசூதியில் பாபாவை தரிசித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஒரு   ஆச்சரியம் காத்திருந்தது . அத்தனை நேரம் கருணையே வடிவாக தங்களுடன் அமைந்திருந்த  திடீரென பாபா ஆவேசத்தோடு எழுந்து நின்றது அவர்களை ஆச்சரியப்படுத்தியது .  ஏன்  பாபா இப்படி திடீரென ஆவேசப்படுகிறார் என்று அவரை சுற்றியிருந்த பக்தர்களுக்கு புரியவில்லை. அவர்களின் ஆச்சர்யம் மேலும், அதிகமாகும் வகையில், பாபா தன் கைகளையும், கால்களையும்  காற்றில் யாருடனோ சண்டையிடுவது போல் வீசத்தொடங்கினார். இதெல்லாம் ஏன் , யாருக்காக நடக்கிறது  என்று பக்தர்கள் திகைப்போடு பாபாவையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் பாபாவோ மிக கோபத்துடன்  காற்றில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். விழிகள் கோபத்தில் செக்கசெவேலன  சிவக்க ,சீற்றத்தில் கொதித்துக் கொண்டிருந்தார் .

     அதே நேரம்  அங்கே  கத்தியுடன் இருக்கும் திருடர்கள் முன் நின்றுக் கொண்டிருந்த காஷிராமின் உடல் ஒரு கணம் ஆவேசம் வந்தது போல் குலுங்கியது . தன் ஒரு கையில் பற்றிக் கொண்டிருந்த சர்க்கரைப் பையை இன்னும் இறுகப்பிடித்துக் கொண்டு தன் இன்னொரு கை மற்றும்  கால்களாலும் திருடர்களை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கினார்.இயல்பிலேயே காஷிராம் ஒற்றைநாடி மனிதர் . அவர் ஒருவரே  பலசாலிகளான . நான்கைந்து திருடர்ககளை புரட்டிப் போட்டதில் திருடர்கள் விக்கித்துப் போனார்கள்.

     காஷிராமிடம் இருந்து பிடிங்கிய  கடுக்கன், சங்கிலி எல்லாவற்றையும்அங்கேயே போட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடலானார்கள்.  அப்படியும் காஷிராம் விடுவதாக இல்லை. மின்னலாக ஓடி, அவர்களை ஒரே  கொத்தாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

     பின் சங்கிலி, கடுக்கன் இவற்றோடு, அவரின் தெய்வத்திற்காக எடுத்துச் சென்ற  நிவேதனச் சர்க்கரையையும் எடுத்துக்கொண்டு மசூதி நோக்கி நடக்கலானார். திருடர்கள் அச்சத்தோடும், காவல்துறையினர் பிரமிப்போடும் அவரைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

     காஷிராம்  மசூதியில் நுழைந்து பாபாவின் பாதங்களில் விழுந்து பணிந்தார். நிவேதனச் சர்க்கரைப் பையை அவரிடம் கொடுத்து,  ஏற்குமாறு வேண்டினார்.அதன் பிறகு  தான் பாபாவின் ஆவேசம் தணிந்து சாந்தியடைந்தார் .

      “அன்பனே! திருடர்களைக் காவல் துறையினரிடம் ஒப்படைத்து விட்டாயல்லவா?” என்று அமைதியாக, அவர் கேட்டபோது தான் காஷிராமுக்கே, சண்டையிட்டது தான் அல்ல, பாபா என்பது புரிந்தது. பாபாவின் தாமரைப் பூ பாதங்களை நன்றிப் பெருக்கோடு தன்  கண்ணீரால் கழுவினார் . தம் அடியவர்களைக் காப்பாற்ற பாபா எந்த ரூபத்திலும் எந்த இடத்தில் இருந்தாலும் ஓடி வருவார் என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா ?
     

  • Saibaba viradham

    விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும், சாயிநாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயிபாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். 

    இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம். இந்த விரதம் அற்புதப் பலன்கள் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.

    காலை அல்லது மாலையில் சாயிபாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாயிவிரத கதையைப் படிக்கவும். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும்.

    இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள்உட்கொண்டு செய்யவும், அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது. வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாயிபாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.

    விரத நிறைவு விதிமுறைகள்

    9-வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப்பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும். சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, சாய்பாபாவின் விரதம் மற்றும் மகிமை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்யலாம்.

     9-வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதம், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயிபக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். 

  • Saibaba Arpudhangal

    சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய பலன்களை பாபா தருவார்.

    தரிசன வழிபாட்டுக்கே இத்தகைய மகத்துவம் இருக்கும் போது, ஏழேழு உலகங்களையும் ஆட்சி செய்யும் பாபாவிடம் நேரில் பேசி, பழகி, பணிவிடைகள் செய்து, அருள் பெற்றவர்கள் எந்த அளவுக்கு பாக்கியம் செய்தவர்களாக இருந்திருப்பார்கள்? துவாரகமாயி மசூதியில் இருந்து பாபா, இந்த உலகை ஆட்சி செய்த போது, ஏழைகள் பணக்காரர்கள் வித்தியாசமின்றி பலரும் பாபாவிடம் சரண் அடைந்து தங்களை ஒப்படைத்திருந்தனர். பாபாவிடம் உண்மையான பக்தியுடன் இருந்தனர்.

    அவர்களில் லட்சுமிபாயும் ஒருவர். இவர் நல்ல வசதி படைத்தவர். பாபாவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவர் இரவில் மசூதியில் தூங்குவதற்கு பாபா அனுமதி அளித்திருந்தார். மசூதியில் பாபாவுக்கு தேவையானவைகளை செய்து கொடுக்கும் சேவையை லட்சுமிபாய் செய்து வந்தார். ஒரு தடவை லட்சுமிபாய் சமைத்து எடுத்து வந்திருந்த உணவை, ஒரு நாய்க்கு எடுத்து பாபா போட்டார்.

    அதைக் கண்டு வேதனை அடைந்த லட்சுமிபாய், ‘‘என்ன பாபா இப்படி செய்து விட்டீர்கள்?’’ என்றார். அதற்கு பாபா, ‘‘என் பசியைப் போன்றதுதான் நாயின் பசியும். எந்த ஒரு உயிரினத்தின் பசியைத் தீர்த்து வைத்தாலும், அது என் பசியைத் தீர்த்து வைத்த மாதிரியாகும். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

    பாபா மகாசமாதி அடைவதற்கு சில தினங்களுக்கு முன்பு லட்சுமி பாயை அழைத்தார். தன் கப்னி உடைக்குள் கையை விட்டு 2 தடவை நாணயங்களை எடுத்துக் கொடுத்தார். ஒரு தடவை ஐந்து நாணயங்கள் வந்தது. அடுத்த முறை 4 நாணயங்கள் வந்தது. அந்த 9 நாணயங்களையும் அவர் லட்சுமிபாயிடம் கொடுத்தார்.

    பாபாவின் இந்த செய்கை ஒன்பதின் மகத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது. இதனால் அந்த 9 நாணயங்களையும் அவர் பொக்கி‌ஷமாகக் கருதினார். சீரடியில் உள்ள லட்சுமிபாயின் வீட்டில் அந்த 9 நாணயங்களை அவரது வாரிசுகள் பாதுகாத்து வருகிறார்கள். சீரடி செல்லும் பக்தர்களில் பலரும் லட்சுமிபாய் வீட்டுக்கு சென்று அந்த நாணயங்களை பார்த்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    லட்சுமிபாய் போல இன்னொரு பக்தரான ஷாமாவுக்கும் ஒரு தடவை சாய்பாபா, மிகவும் அபூர்வமான செப்பு நாணயம் ஒன்றை பரிசாகக் கொடுத்தார். அது சாதாரண நாணயமல்ல. நாணயத்தின் ஒரு பக்கம் ராமர், சீதை, லட்சுமணர் உருவங்கள் உள்ளது. மற்றொரு பக்கத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டிருப்பது போன்ற உருவம் உள்ளது.

    தான் உடுத்திருந்த கப்னி உடை மட்டுமே தனக்குரியதாகக் கொண்டு வாழ்ந்த பாபா, தினமும் தனக்கு கிடைக்கும் நாணயங்கள், பொருட்களை அன்றே பக்தர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவார். ஆனால் அந்த அபூர்வ செப்பு நாணயத்தை மட்டும் அவர் யாருக்கும் கொடுக்காமல் நீண்ட நாட்களாக தம்முடனே வைத்திருந்தார்.
    அதை பெறும் பாக்கியம் ஷாமாவுக்கு கிடைத்தது.