சிவன் கோயிலில் சங்காபிஷேகம்,
சார்வரி வருடம் – கார்த்திகை 8
சாய்பாபா பிறந்த நாள்
23-நவ-2020 திங்கள்
வாஸ்து நாள்(காலை 11.29 – 12.05)
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : நவமி
திதி நேரம் : நவமி அ.கா 4.23
நட்சத்திரம் : சதயம் மா 5.32
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Tag: Sai Baba
-
November 23 Sai Baba Birth day
-
Sai Baba Arpudhangal
எங்கும் நிறை பேரறிவான சத்குரு சாய்பாபா , தான் படைத்த அனைத்து ஜீவராசிகளிலும் தன்னை காண முடியும் என்பதை அவ்வப்போது உணர்த்திக் கொண்டே தான் இருக்கிறார் . மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் . அதேப்போல் தன அடியவர்களுக்கு செய்யும் தொண்டு தன்னை வந்தடையும் என்பதையும் பாபா பல தருணங்களில் நிரூபித்து இருக்கிறார் . அப்படியான ஒரு அற்புதத்தை இப்பதிவில் பார்ப்போம் .
ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்பவர் நாந்தேட் கிராமத்தில் வசித்தது வந்த பார்சி மில் காண்டிராக்டர் . இறைவன் அளவற்ற எல்லாச் செல்வங்களுடன் அவரை ஆசீர்வதித்து இருந்தாலும் , ஒரு செல்வத்தைத் மட்டும் அவருக்கு அருளவில்லை . மக்கட் செல்வம் தானே அனைத்திலும் சிறந்தது . வாடியாவிற்கும் தன் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லையே என்ற குறை அவர் மனத்தை வாட்டி வதைத்தது. அவர் கிராமத்தில் வசித்து வந்த மக்கள் அவரை பெரிதும் மதித்தனர். தர்மசீலரான அவர் ஏழை எளியவர்களுக்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். நாட்கள் செல்லச் செல்ல தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தியது. ஒரு சமயம் அவரின் துன்பத்தைக் கண்ட அவரது நெருங்கிய நண்பரான தாஸ்கணு,கவலைக்கான காரணத்தைக் கேட்டார் .
உற்ற நண்பரான தாஸ் கணுவிடம் எதையும் மறைக்காமல் , வாடியா தனக்கு ஒரு குழந்தை செல்வம் இல்லாத குறையை வெளிப்படுத்தினார் . பாபாவின் தீவிர பக்தரான தாஸ்கணு,தன் தெய்வம் பாபா நினைத்தால் எந்த அற்புதங்களையும் செய்வார் என்ற நம்பிக்கையுடன் , அவர் வாடியாவை பாபாவிடம் செல்லுமாறு கூறி தேற்றினார் . பாபாவிடம் வேண்டினால், கட்டாயம் குழந்தைப் பேறு கிட்டும் என்று வாடியாவிற்கு நம்பிக்கையூட்டினார் தாஸ்கணு. அலைக்கடலில் சிக்கித் தத்தளித்தவனுக்கு ஒரு பெரிய மரக்கலன் கிடைத்தது போன்று இருந்தது வாடியாவிற்கு .
ஷிர்டி செல்ல முடிவெடுத்த அவர் , சில நாள்களிலேயே பழங்களையும் பூமாலையையும் வாங்கிக் கொண்டு, பாபாவுக்கு தட்சிணையாக ஐந்து ரூபாயையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார். பாபாவைப் பார்த்த மறுகணமே அந்தக் கருணை நிறைந்த வடிவம் வாடியாவின் மனத்தைக் கரைத்தது. பரவசத்தோடு பூமாலையை பாபா கழுத்தில் அணிவித்து, பழக்கூடையை சமர்ப்பித்தார். பின் அவரது தாமரைப் பாதங்களைக் கீழே விழுந்து நமஸ்கரித்தார். மெல்ல எழுந்து அவர் அருகில் அமர்ந்து கொண்ட வாடியா . ஏராளமான அடியவர்கள் பாபாவைத் தேடி வருவதையும் அவரது பாதங்களில் சரணடைவதையும் பார்த்து வியந்தார்.
பாபாவை சரணடைந்த அந்த கணமே , தம் பிரார்த்தனை கட்டாயம் பலிக்கும் என்ற பூரண நம்பிக்கையோடு குழந்தைப்பேறு வேண்டி மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கலானார். திடீரென வாடியாவின் பக்கம் திரும்பிய பாபாவின் பார்வை. “எனக்கு ஐந்து ரூபாய் காணிக்கைப் பணம் கொண்டு வந்திருக்கிறாயே? எடு!” என்றார் உரிமையுடன். தாம் ஐந்து ரூபாய் எடுத்துவந்த விஷயம் இவருக்கு எப்படித் தெரியும் என வியந்தவாறே ரூபாயை எடுத்தார் வாடியா. அப்போது , “அந்த ஐந்து ரூபாயில் ஏற்கனவே மூன்று ரூபாய் பதினான்கு அணா நான் வாங்கிக் கொண்டுவிட்டேன். மீதியை எடு!”என்றார் பாபா சற்றே அதட்டலுடன்.
தாம் ஷிர்டிக்கு வருவதே முதல்முறையாக இப்போதுதான். அப்படியிருக்க இந்த மூன்று ரூபாய் பதினான்கு அணா விஷயம் என்னவென்று தெரியவில்லையே? என்று வாடியாவுக்கு ஒன்றும் புரியவில்லை.ஆனால், பாபா எதுசொன்னாலும் அதில் ஒரு காரணம் இருக்கும் ஆதலால் , அவர் சொன்னபடி எந்தப் பிசகும் இல்லாமல் அப்படியே செய்ய வேண்டும் என ஏற்கனவே அவருக்கு தாஸ்கணு அறிவுறுத்தியிருந்தார் . ஆகையால், மறுபேச்சுப் பேசாமல், மீதி ஒரு ரூபாய் இரண்டணா காணிக்கையை பாபாவின் பாதத்தில் சமர்ப்பித்தார். தமக்குக் குழந்தைப் பேறு கிட்ட அருளவேண்டும் என பாபாவிடம் விண்ணப்பித்தார். அவரது தலையை அன்போடு வருடிய பாபா, அவரின் கஷ்ட காலமெல்லாம் நீங்கிவிட்டதென்று ஆறுதல் கூறினார். மகிழ்ச்சியோடு ஷிர்டியிலிருந்து மீண்டும் நாந்தேட் கிராமத்திற்கு வந்தார் வாடியா.
நண்பர் தாஸ்கணுவிடம் சீரடியில் நடந்த அனைத்தையும் ஒரு வரிவிடாமல் சொன்னார். மூன்று ரூபாய் பதினான்கு அணா விஷயம் மட்டும் புரியவில்லை என்றும் அதன் பின்னணிச் சூட்சுமம் என்னவாக இருக்குமென்றும் கேட்டார். தாஸ்கணுவின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. திடீரென்று அவர் மனத்தில் மின்னல் வெட்டியது. “சில நாட்கள் முன்னால், மவுலா சாஹேப் என்ற இஸ்லாமிய அன்பரை வரவேற்றோமே? அவருக்கு நீங்கள்தானே வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தீர்கள்? அதற்கான செலவுக் கணக்கைக் கொண்டு வாருங்கள்! ”என்றார் தாஸ்கணு.
வாடியாவுக்கும் சடாரென்று அது நினைவு வந்தது. அந்த இஸ்லாமிய அன்பர், வாடியா ஷிர்டி செல்ல நினைத்துக் கொண்டிருக்கும்போது வருகை புரிந்தவர். சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து, பின் ஆன்மிக நாட்டம் கொண்டு துறவியானவர். அவரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆன செலவைத் தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்திருந்தார் வாடியா. ஓடிப்போய் அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துவந்து செலவுக் கணக்கைக் கூட்டிப் பார்த்தபோது என்ன ஆச்சரியம்! அது மிகச் சரியாக மூன்று ரூபாய் பதினான்கு அணா இருந்தது! ஓர் அணா கூடக் குறையவுமில்லை. கூடவுமில்லை! மவுலா சாஹேப் என்ற அந்த அன்பருக்கு செய்த உபசாரமெல்லாம் தமக்குச் செய்த மாதிரிதான் என்பதை பாபா அழகாக அறிவித்துவிட்டார் .
வாடியாவின் கரங்களும் தாஸ்கணுவின் கரங்களும் பக்திப் பெருக்கால் பாபாவை நினைத்துக் குவிந்தன. பின் உரிய காலத்தில் வாடியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பாபாவின் பாதங்களை உண்மையில் நம்பிக்கையுடன் சரணடைந்தவர்களுக்கு குறையொன்றும் இல்லை .
-
Sai Baba Viradham
ஆன்மீகத்தோடு ஒன்று கலந்தது பிராத்தனைகளும்,விரதங்களும். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான பிரத்தனைகளை, பக்தர்கள் அவர்தம் வசதிக்கேற்ப செலுத்துவதுண்டு. ஆனால் அதனை முறைப்படி பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டு,அர்ப்பணிப்போடு செய்யும் போது அதன் பலன்கள் அனேகம்.
நமது சீரடி மகானிடமும், பக்தர்கள் தங்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள பல விதமான விரதங்களை கடைப்பிடிப்பதுண்டு . சீரடி பாபா விரத முறைகளில் எல்லோருக்கும் நன்றாக தெரிந்தது வியாழக்கிழமை விரதம் தான். ஆனால் அது போல் இன்னும் பல வகையான விரதங்களும் உள்ளன. அவற்றில் சிலவற்றை இப்பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
சாய் சத்யவிரத பூஜையில்,வழக்கமான சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம். பாபாவிற்குப் பிடித்த செண்பகப்பூ சாத்தி உள்ளன்புடன் அவரை வணங்க வேண்டும் .
பாபாவின் வழிபாட்டு முறையில் ,சர்க்கரையில் அக்கறை இல்லா லீலையும் ஒன்று. ஒரு வியாழக்கிழமை சின்ன டப்பாவில் சர்க்கரையை எடுத்து வைக்க வேண்டும். 21 நாட்களுக்கு எந்த இனிப்பையும் எந்த வகையிலும் சாப்பிடக் கூடாது. எந்நேரமும் பாபாவை மனதார துதித்தபடி இருந்தால் ,மிகச் சரியாக 21ம் நாள் நாம் எதிர்பார்க்கிற இனிப்பான செய்தி நம்மைத் தேடி வரும்.
பாபா சத்சரித்திரத்தில், ‘டெண்டுல்கர் அத்தியாயம்’ என்று ஒரு பகுதி உள்ளது. அந்த அத்தியாயத்தை படித்து விட்டு கல்கண்டு நைவேத்யம் செய்து பரீட்சை எழுதும் மாணவ மாணவியருக்கு அதை பிரசாதமாக அளித்தால், அவர்கள் தேர்வுகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள் என்பது சாய் அடியார்களின் நம்பிக்கை.
திருமணத் தடை உள்ளவர்கள் தாமரை மாலையை அவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாபாவிற்கு சாத்தி 108 நெல் பொரி உருண்டைகளை 108 எளியவர்களுக்கு தானமாக அளித்தால் பாபாவின் திருவருளால் அவர்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகிறது என்பது பலனடைந்தவர்களின் வாக்குமூலம்.
கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 மட்டைத் தேங்காய்களை எடுத்துக் கொண்டு பாபா ஆலயத்திற்குச் சென்று, அவற்றில் 10 தேங்காய்களை ‘துனி’ என்னும் அணையா நெருப்பு முன் வைத்துப் பிரார்த்திக்க வேண்டும். மீதி ஒரு தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதிலிருந்து தமக்குத் தெரிந்த ஏதேனும் இனிப்பைச் செய்து பாபாவிற்கு படைக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சிறிதளவு பிரசாதமாக உண்டு, மீதியை தானம் செய்தால் அந்த நோயின் கடுமை நிச்சயம் குறைந்து விடும்.
நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய் உடையவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று துனி விரத பூஜையை ஆரம்பிக்கலாம். பாபா உருவாக்கிய அணையா துனி நெருப்பை 21, 48, 54 அல்லது 108 முறை என அவரவர் சௌகரியம் போல் செய்யலாம். பூஜையறையை துடைத்து கோலம் போட்டு மஞ்சள் துணியை பலகையில் விரித்து பாபா படத்தை அதன்மீது வைத்து ஊதுவத்தி ஏற்றி, ஒரு மட்டைத் தேங்காயை வைத்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் அவர் முன் வைக்க வேண்டும். ‘புக்கே’ எனும் தேங்காய் துருவல், அவல், சர்க்கரை கலந்த இனிப்பை நைவேத்தியமாக படைக்க வேண்டும். 9 வாரம் இந்த பூஜையை தொடர்ந்து செய்யவேண்டும். முதல் வாரம் மட்டைத் தேங்காயை துனியில் போடவேண்டும். அந்த ஒன்பது வியாழக்கிழமைகளும் அரிசி உணவை தவிர்த்தல் நலம். 9ம் வாரம் மஞ்சள் நிற இனிப்பைத் தயாரித்து எளியோர்க்கு விநியோகம் செய்யவேண்டும்.
இந்த வழிபாட்டு முறைகளில் யாருக்கு எந்த வேண்டுதல் உண்டோ, அதற்கேற்ப அவரவர் விருப்பப்படி முடிந்த பூஜையினை, இன்ன தேதிக்குள் முடிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், அவர் மீது முழு நம்பிக்கை வைத்து செய்தால் அவர் நமக்கு எல்லா செல்வங்களையும் அருள்வார்.
சாய் பிராத்தனை இருளகற்றி நம் வாழ்வில் ஒளியேற்றும் . ஜெய் சாய்ராம்
-
Sai Baba Viradhaam Irundhal
எண்ணிய காரியம் நிறைவேற ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார். இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம்.
எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிராதித்துக் கொள்ள வேண்டும் காலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த விரதத்தை பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது
பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிறமலர்கள் மாலை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நெய்வேத்தியம் வைத்து, விநியோகம் செய்து சாய்பாபாவை வணங்கவும்.
முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாய் பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும் சாய் விரத கதை, சாய் பாமாலை, சாய் பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.
விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும் ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும்.
சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9-வது வியாழக்கிழமை இந்த சாய் விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும்.விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும் மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.