Tag: Puratasi

  • Puratasi Saturday Poojai Murai

    திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம்.

    புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

    மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு. சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான "நவநீதமும் படைப்பதுண்டு. "அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது. பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைப்பது மரபு. எல்லோரும் பக்திப் பெருக்குடன், ""கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.

    புரட்டாசி சனிக்கிழமை திருப்பதி வெங்கடேசப்பெருமாளை நினைத்து வழிபடும் விழாவானதால், அன்று வீட்டிலுள்ள பிள்ளைகளின் நெற்றியில் நாமம் இடுவர். அவர்கள் கையில் நாமமிட்ட பாத்திரம் ஒன்றை அளித்து, நாலைந்து வீடுகளுக்குச் சென்று பிக்ஷை எடுத்து வரச் சொல்லுவர்.

    பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர். பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர். இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே "கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.
     

  • Selvam kozhika puratasi vazhipadu

    தமிழ் மாதங்களில் 6–வது மாதமாக புரட்டாசி வருகிறது. இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது வழக்கம். ‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    புரட்டாசி மாதம் மகாளய பட்சம் வருகிறது. மகாளய பட்சத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுக் கிறோம். புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார். ஏழுமலையான் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கு வந்த கதை தெய்வாம்சம் மிக்கது.

    சனிக்கிழமை விரதம்
    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியனவற்றை சேகரித்து வைத்து, ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

    ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். 

    அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.

    இந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து உயிர்களிடத்தும் கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
     

  • Puratasi month mahimaigal

    தமிழ் மாதங்களில்  6 வது மாதமாக வருவது புரட்டாசி. சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார்.

    அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

    இந்த பட்சத்தில் வரும் பரணி, "மகாபரணி' என்றும், அஷ்டமியை, "மத்யாஷ்டமி' என்றும், திரயோ தசியை "கஜச்சாயை' என்றும் சொல்வர். இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும்.

    மஹாலய விதிப்படி அந்தப் பதினாறு நாள்களும் பித்ருக் களுக்காக அன்ன சிராத்தம் செய்ய வேண்டும், இயன்றவர்கள் பொன் முதலிய பொருள்களைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கலாம். புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும்.

  • Puratasi viradhangal

    ஸித்தி விநாயக விரதம் – இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும்.

    துர்வாஷ்டமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.

    மகாலட்சுமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

    அமுக்தாபரண விரதம் – புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும்.

    ஜேஷ்டா விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.

    சஷ்டி-லலிதா விரதம் – புரட்டாவி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருளும்.

    கபிலா சஷ்டி விரதம் – புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும்.

    மகாளயபட்சம் – புரட்டாசி பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாள்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இந்தக் காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகும்.