Tag: Prasadam

  • Ezhur Pallakku Festival at Karanthai Karunaswamy Temple: Devotees worship in large numbers

    தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கரந்தை கருணாசாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஏழூர் பல்லக்கு திருவிழா இந்த ஆண்டு பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆனி மாதத்தில் நடைபெறும் இந்தத் திருவிழா, பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. கருணாசாமி பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோயில், இப்பகுதியில் முக்கியமான ஆன்மிகத் தலமாக விளங்குகிறது.

    திருவிழாவின் தொடக்கமாக, கருணாசாமி பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர், புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமான், அழகிய பல்லக்கில் எழுந்தருளினார். பாரம்பரிய இசை மற்றும் பக்தி முழக்கங்களுடன் பல்லக்கு ஊர்வலமாக கரந்தை வீதிகளில் பவனி வந்தது. இதில், அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த பக்தர்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டு, பூக்கள், தேங்காய், பழங்கள் போன்றவற்றை பக்தியுடன் காணிக்கையாக செலுத்தினர்.

    கோயில் நிர்வாகம் திருவிழாவிற்கு விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளூர் காவல்துறையினர், பெரும் கூட்டத்தை திறம்பட கையாண்டு, ஊர்வலம் சீராக நடைபெற உறுதி செய்தனர். பக்தியின் உணர்வு நிறைந்த இந்தத் திருவிழாவில், பக்தர்கள் தங்கள் அர்ப்பணிப்பை வேண்டுதல்களாகவும், காணிக்கைகளாகவும் வெளிப்படுத்தினர். திருவிழாவின் நிறைவாக, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்த ஏழூர் பல்லக்கு திருவிழா, கருணாசாமி பெருமானுடனான பக்தர்களின் ஆன்மிக பிணைப்பை வலுப்படுத்துவதோடு, பங்கேற்பாளர்களிடையே சமூக ஒற்றுமையையும் ஊக்குவிக்கிறது. தஞ்சாவூரில் உள்ள கரந்தை கருணாசாமி கோயில், பக்தி மற்றும் பாரம்பரியத்தின் ஒளிவிளக்காக தொடர்ந்து ஜொலிக்கிறது.

  • Thirupathy Perumal Padiyai Kadakkum Ore Prasadam

    திருப்பதி பெருமாளின் கருவறைப் படியைக் கடந்து தயிர்சாதம் நிறைந்த ஒரு மண்சட்டியைத் தவிர வேறு எந்தப் பிரசாதமும் செல்வதில்லை.  இந்தக் கருவறைப் படியும் சரி, மண்சட்டி தயிர்சாதமும் சரி இரண்டின் பின்னணியில் பக்திபூர்வமான வரலாறு உண்டு. 

    கருவறைப் படி குலசேகரப்படி என்றே அழைக்கப்படுகிறது.

     யார் இந்தக் குலசேகரன்? 

    சேரநாட்டு திருவஞ்சைக்களத்தில் சேரர் குலத்தில் தோன்றிய அரசர்தான் குலசேகரர்.  கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோ, மாதவன் மாமன் என்றெல்லாம் சிறப்பித்துப் போற்றப்பெறும் குலசேகரர் பரந்தாமனிடம் கொண்ட பக்தியால் ஆழ்வாராகப் போற்றப் பெறுகிறார். 

    பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான இவர், திருமாலின் கௌஸ்துப மாலையின் அம்சமாகத் தோன்றியவர்.  சிறுவயது முதற்கொண்டே ராமபிரானின் மீதும், கிருஷ்ணரின் மீதும் அளவு கடந்த பக்தியைக் கொண்டிருந்தார். 

    நல்லாட்சி புரிந்த இவருக்குப் பாண்டிய மன்னர் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். வெற்றித்திருமகளை தன்னருகே வைத்திருந்த குலசேகரர் திருமாலின் அடியார்கள் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார்.

    ஒருமுறை ராமாயணம் உபந்நியாசம் கேட்டுக் கொண்டிருந்த போது, ராமபிரான் முனிவர்களின் தவத்தைக் கெடுக்கும் அரக்கர்களை அழிக்கப் புறப்படுகிறார் என்ற செய்தியை அறிந்ததும், ராமபிரானுக்கு உதவ உடனே தனது படைகளை ஆயத்தமாகும்படி கட்டளையிட்டார். அந்த அளவுக்கு ராமபிரானிடம் பக்தி செலுத்தினார். 

    எப்போதும் திருமால் அடியார்களுடனே இருந்தால், நாட்டை நிர்வகிப்பது எப்படி? எனவே, இவரைச் சுற்றி இருந்த அடியவர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்த எண்ணி, இவரது அமைச்சர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர்.

     ஒருமுறை அரண்மனைக்கு வந்திருந்த அடியார்களுடன் குலசேகரர் பகவத் விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தபோது, அமைச்சர்கள் ஒரு நவரத்தின மாலையை ஒளித்து வைத்துவிட்டு, அந்த மாலையை அடியார்கள் திருடிக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள். 

    அடியார்கள்மீது பழிசுமத்தியது பொறுக்கமாட்டாத குலசேகரர்,  ஒரு பானையைக் கொண்டு வரச் செய்து அதில் கொடிய விஷமுள்ள கருநாகத்தை இடச் செய்தார். பிறகு 'ராமன்மீது ஆணையாக இந்தத் திருட்டை அடியார்கள் செய்திருக்கமாட்டார்கள்' என்று நான் சொல்வது உண்மையானால், இந்தக் கருநாகம் என்னைத் தீண்டாதிருக்கட்டும்' என்று சொல்லியபடி பானைக்குள் கையை விட்டார். கருநாகம் குலசேகரரை எதுவும் செய்யவில்லை. 

    எனவே நடந்தது அமைச்சர்களின் சூழ்ச்சி தான் என்பதைப் புரிந்துகொண்டு, மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு, அரசப் பதவியைத் துறந்து திவ்வியதேச யாத்திரையை மேற்கொண்டார். 

    முதலில் திருவரங்கம் சென்றார். அங்கு பவித்ரோற்சவ மண்டபம், மூன்றாம் மதில் உள்ளிட்ட  பல்வேறு ஆலய திருப்பணிகளைச் செய்தார். 

    திருவரங்கத்தில்தான் தனது அருமை மகளை ரங்கநாதருக்குத் திருமணம் செய்து மகிழ்ந்தார். இன்றும் சேரகுலவல்லியோடு ரங்கநாதர் காட்சி தருவதைக் காணலாம். பெரியாழ்வார் போலவே தனது மகளை அரங்கனுக்குத் திருமணம் செய்ததால் இவரும் 'மாதவன் மாமன்' எனும் பெருமை பெற்றார். 

    திருமாலின் மீது பக்தி கொண்டு 105 பாசுரங்களைக் கொண்ட 'பெருமாள் திருமொழி' என்னும் பிரபந்தத்தை இயற்றினார்.  தலம்தோறும் சென்று திருமாலை வணங்கி பேறு பெற்றார். 8 வைணவத் தலங்களைத் தரிசித்துப் பாடி மங்களாசாசனம் செய்தார். 

    திருமலை திருப்பதிக்குச் சென்ற குலசேகர ஆழ்வார் வெங்கடேசப்பெருமாளின் அழகில் மயங்கி பாடல்களைப் பாடினார். எனக்கு தேவ பதவி போன்ற உயர்ந்த பதவிகள் எதுவும் தேவையில்லை. 

    திருவேங்கடத்துப் பொய்கையில் ஒரு மீனாகவோ, அல்லது ஏதேனும் ஒரு தாவரமாகவோ பிறக்கமாட்டேனா என்றெல்லாம் ஏங்கிப் பாடியவர், எப்போதும் திருவேங்கடவன் கருவறைப் படியாக இருந்து தினமும் பெருமாளின் பவள வாய் அழகை தரிசிக்கும் பேறு கிடைக்காதா என்றும் ஏங்கிப் பாடினார். 

    'செடியாய வல்வினைகள் தீர்க்குந்திருமாலே நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.' என்றெல்லாம் பாடினார். 

    இவரது வேண்டுதல் பெருமாளை உருக்கியது. அதன் காரணமாகவே, குலசேகரரின் பெயரால் அந்தப் படி அழைக்கப்படும் பேறுபெற்றார். ஆம், இன்றும் திருமலையின் வாயிற்படி இவர் பெயராலேயே குலசேகரப்படி என்றே  அழைக்கப்படுகிறது. 

    இந்தக் குலசேகரப் படியைக் கடந்து தயிர்சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டியைத் தவிர வேறு எந்த வைர,வைடூரிய, தங்க, வெள்ளி பாத்திரங்கள்கூட செல்வதில்லை

    தயிர் சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டி மட்டுமே குலசேகரப் படியை தாண்டி பெருமாளிடம் செல்வதன் பின்னணியில், ஒரு ஏழை மண்பாண்டத் தொழிலாளி, பெருமாளிடம் கொண்டிருந்த பக்தியின் மகத்துவம் அடங்கியுள்ளது.

     பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி திருமலை பெருமாளின் மீது தீராத பக்தி கொண்டவன். இவன் செய்து தரும் மண்பாண்டங்கள் பெருமாளின் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டது. பாண்டங்கள் செய்தது போக மீதமிருக்கும் மண்ணில் இவன் செய்து சூட்டும் மண் மலர்களை ஏற்றுக்கொண்ட பெருமாள், 

    தொண்டைமான் அரசரின் தங்க மாலைகளைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லையாம். அத்தனை பேறு பெற்ற பீமனின் நினைவாகவே இன்றும் பெருமாளுக்கு மண்சட்டியிலேயே நைவேத்தியமாக தயிர் சாதம் அளிக்கப்படுகிறது.

    ஆலயங்கள் பலவற்றை தரிசித்து மனம் மகிழ்ந்த குலசேகர ஆழ்வார்,  இறுதியாக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோயில் திருத்தலம் வந்து அங்குள்ள பெருமானை தரிசித்து வைகுந்தலோகம் சென்றார். 

    அரச போகங்களை எல்லாம் துறந்து அரங்கனின் சேவடிக்கே தன்னை ஒப்படைத்த குலசேகர ஆழ்வார்,  வைணவ அடியார்களுக்கு எல்லாம் ஓர் ஒப்பற்ற உதாரணப் புருஷர்.

  • Madurai Meenatchi Amman Koil Laddu Prasadam

    மதுரை மீனாட்சி கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வரும் தீபாவளி முதல் தினந்தோறும் லட்டு இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில்.  ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு,  உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

    அவ்வாறு மீனாட்சி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவருக்கும், தலா ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் தீபாவளி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார். 

    திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்று வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    இதற்காக ரூ.5 லட்சம் செலவில் லட்டு தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கி இருப்பதாகவும், இதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 500 லட்டுகள் தயாரிக்கப்படும், என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    மதுரையில் மிகப் பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,  அண்மையில் தூய்மைக்கான இந்திய அரசின் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.