Tag: pooja

  • Worship of the ancestral deity: On which days does worshiping yield the best results?

    சில குடும்பங்கள் தொடர்ச்சியான சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றன. இவர்கள் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று முறையாக வழிபாடு செய்யும்போது, அவர்களின் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை உணரலாம்.

    எனவே, முடிந்தவரை மாதம் ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. ஆனால், சிலரால் கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலைகள் இருக்கலாம். இவர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டில் குலதெய்வத்தை மனதில் நினைத்து, நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

    எல்லா நாட்களும் குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்றவை என்றாலும், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் மிகவும் உகந்தவை என ஆன்மிக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த நாட்களில் கோயிலுக்கு சென்று, குலதெய்வத்திற்கு பிடித்த நைவேத்தியங்களைப் படைத்து வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.

    அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் செல்ல முடியாதவர்கள், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனை அளிக்கும்.

    குலதெய்வத்தின் தன்மைக்கு ஏற்பவும் குறிப்பிட்ட நாட்கள் சிறப்பு வாய்ந்தவை:

    • சிவபெருமான் அல்லது முனீஸ்வரர் போன்ற சிவனுடன் தொடர்புடைய தெய்வங்கள் குலதெய்வமாக இருந்தால், திங்கட்கிழமை வழிபாடு மிகவும் பொருத்தமானது.

    • முருகன் தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால், செவ்வாய்க்கிழமை வழிபடுவது சிறந்தது.

    • பெருமாள் தொடர்புடைய குலதெய்வங்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகள் உகந்தவை.

    • அம்பாள் போன்ற தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை வழிபாடு மிகுந்த ஆன்மிக அருளை வழங்கும்.

    குலதெய்வ வழிபாட்டின் மூலம் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் தடைகளைத் தாண்டுவதற்கான ஆற்றல் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

     

  • Maha siva rathiri pooja in home

    சிவராத்திரி அன்று சிவன் கோயிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    முதல் கால பூஜை – மாலை 6 முதல் 9 மணி வரை: 
    ஸ்வாமிக்குப் பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பசும் பால், பசுந் தயிர், பசு நெய், பசுவின் சிறுநீர், பசுஞ்சாணம்- இந்த ஐந்தும் கலந்தது, பஞ்சகவ்யம் , அகில் குழம்பும், வில்வமும் சாற்ற வேண்டும். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் செய்து, ரிக் வேதம் சொல்ல வேண்டும்.

    இரண்டாம் கால பூஜை – இரவு 9 முதல் 12 மணி வரை : 
    பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் ஆகிய ஐந்தும் கலந்தது பஞ்சாமிர்தம். இதில் தயிரை நீக்கி வாழைப்பழத்தைச் சேர்ப்பதும் உண்டு. சந்தனமும், தாமரைப் பூவும் சாற்ற வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து பாயசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேதம் சொல்ல வேண்டும்.

    மூன்றாம் கால பூஜை – இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை: 
    தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும்.

    நான்காம் கால பூஜை – அதிகாலை 3 முதல் 6 மணி வரை: 
    கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்து சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் சொல்ல வேண்டும்.