Tag: Pillayar

  • Pillayar suzhi

    எதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். எழுதுவது மட்டுமில்லாமல் எந்தக் காரியமானாலும் ஆரம்பிக்கிற போது அது விக்நமில்லாமல் பூர்த்தியாவதற்கு மஹாகணபதியைக் கொண்டு வந்துதான் ஆகணும். அவரைக் ஸ்மரிக்காமல் எந்தக் காரியமுமே இல்லையானாலும், இந்த எழுத்துக் காரியத்தில் அவரை ஸ்மரிக்கிறோம். பின்னாடி நாம் எழுதுகிற விஷயம் 'சுழித்து'ப் போகாமலிருப்பதற்காக முன்னாடி பிள்ளையார் சுழி போட்டு விடுகிறோம்.

    சுழி என்பது வளைசல்; 'வக்ரம்' என்பார்கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் 'வக்ரதுண்டர்'என்றே அவருக்கு ஒரு பேர். பிள்ளையார் சுழி போடுவதில் பாதியாக இருக்கிற வளைசல் பூர்ணமாகிவிட்டால் முழு வட்டம். பூலோகமும், பல லோகங்களும், நக்ஷத்ர மண்டலங்கள் அடங்கியுள்ள பிரம்மாண்டமும் எல்லாமே வட்டமானவைதான். 

    வளைசலான கொம்போடு ஆரம்பிக்கிற பிள்ளையார் சுழி, கொஞ்சம்கூட வளையாத நேர்கோட்டோடு முடிகிறது. பிள்ளையார் பூர்ணம், சூன்யம் இரண்மாக ஆனாற்போலவே வக்ரமானதும் அவர்தான், ஆர்ஜவமானதும் (நேரானதும்) அவர்தான் என்பது தாத்பரியம். 'உ' என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ-உ-ம என்ற மூன்றும் சேர்ந்தே 'ஓம்'காரமான ப்ரணவம். 'அ'என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. உ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ம ஸம்ஹாரம்; ஈஸ்வரன். த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. 

    அ-உ-மவில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது 'உ'அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது. ப்ரணவ ஸ்வரூபப் பிள்ளையார் 'அ'வும் 'ம'வும் சேராமல் இந்த 'உ'காரமாக மட்டுமே பிள்ளையார் சுழியில் இருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது. அதாவது அவர் ''தாயைப் போலப் பிள்ளை''மட்டுமில்லை;தாயாருக்கும் ஒரு படி மேலே என்று தோன்றுகிறது. எப்படி? அவளும் ரக்ஷிக்கிற 'உ'வுக்குப் பின்னாடியாவது ஸம்ஹார 'ம' ஸ்ருஷ்டி 'அ' இவற்றையும் வைத்தக் கொண்டிருக்கிறாள். ஆனால் பிள்ளையோ எப்போது பார்த்தாலும் எல்லாரையும் ரக்ஷிப்பது தவிர வேறு ஜோலியே வைத்துக்கொள்ளாத பூர்ண கருணாமூர்த்தியாக இருந்துகொண்டு 'உ'ஒன்றோடேயே நின்றுவிடுகிறார்.

    நாம் போடுகிற பிள்ளையார் சுழி ஒரு சின்ன எழுத்தின் மூலம் விக்நேஸ்வரரை ஸங்கேதமாகத்தான் காட்டுகிறது; வெளிப்படையாகப் பிள்ளையார் பேரைத் தெரிவிக்கவில்லை. ஆனால் பழங்காலச் சுவடிகளைப் பார்த்தால் அவற்றின் ஆரம்பத்தில் வெளிப்படையாகவே '' ஸ்ரீ கணாதிபதயேநம : '' என்று போட்டிருக்கும்.

    அவரைச் சொல்லும்போதும் விநாயகர், விக்னேஸ்வரர், வக்ரதுண்டர், ஹேரம்பர் முதலான மற்ற எந்தப் பெயரையும் போடாமல் "கணாதிபதி" என்றே எந்தச் சுவடியிலும் போட்டிருப்பது ஏன் என்று யோசித்தேன். வித்வான்களுடன் டிஸ்கஸ் பண்ணினதில் ஒரு மாதிரி புரிந்தது. கண என்ற வார்த்தைக்கு உள்ளே அநேக அர்த்தங்களில் பாஷா ஸம்பந்தமாகவே ஒன்று இருக்கிறது. ஒரே வித்க்குக் கீழே வருகிற எல்லா தாதுக்கள் அல்லது வார்த்தைகளை ஒரு கணம் என்று தொகுத்து வியாகரணத்தில் கொடுத்திருக்கிறது. இந்த கணங்களுக்கெல்லாம் அதிபதிதான் கணாதிபதி. பரமேஸ்வரனுடைய பூத கணங்களுக்குத் தலைவரானதால் கணபதி, கணாதிபதி, கணேசர், கணநாதர் என்றெல்லாம் அவருக்குப் பெயர் இருப்பதோடு, பத ஸமூஹங்களுக்கெல்லாம் தலைவர் என்ற அர்த்தத்திலும் இப்படிப் பெயர் பெற்றிருப்பதால்தான் கணாதிபதயே நம : என்று போட்டு எழுத ஆரம்பித்துருக்கிறார்கள்.

    விநாயகர் ப்ரணவ ஸ்வரூபம் என்றால், அந்த ப்ரணவம்தானே ஸகல சப்தங்களுக்கும் வார்த்தைகளுக்கும் ஆதாரம்? அதனால் அவரைப் பத ஸமூஹங்களின் அதிபதியாகக் கொண்டு, எழுத ஆரம்பிக்கும்போது முதலில் நமஸ்காரம் தெரிவிப்பது பொருத்தந்தான்.

    பிள்ளையாருக்கே கொஞ்சம் புதிராக வியாஸர் பண்ணின ஸ்லோகங்களுக்குத்தான் ''பாரத குட்டு''என்று பேர். ஆனாலும் அவர் ஞான ஸ்வரூபமானதால் அடுத்த க்ஷணமே அவருக்கு ''குட்டு உடைஞ்சுடும்!'' மறுபடி எழுத ஆரம்பித்துவிடுவார்*. அப்படிப்பட்டவரை ஸ்மரித்து விட்டு எழுதத் தொடங்கினால், எந்தச் சிக்கலான விஷயமும் நொடியில் தெளிவாகி, மேற்கொண்டு எழுதிக் கொண்டு போக முடியும் என்ற நம்பிக்கை 'ஸ்ரீ கணாதிபதயே நம:' என்று ஆரம்பித்தால் உண்டாகும். ​பிள்ளையார் சுழியும் இதை மனிதில் கொண்டே, ஆரம்பத்தில் போடும் வழக்கம் ஏற்பட்டது.

  • Kaliman Pillayar Thathuvam

    விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.

    அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.

    பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.

    பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.

    அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.

    அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.

    உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.

    பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.

    பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

    இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

    இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம்.

    பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.

    இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.
     

  • Ucchi Pillayar Vazhipadu

    கர்பப்பை புற்றுநோய், கர்ப்பம் நழுவுதல் போன்ற கோளாறுகளால் வருந்தும் பெண்களுக்கு உதவும் ஓர் உத்தம வழிபாடு இதோ.

     திருச்சி மலைக்கோட்டை திருக்கோயில் படிக்கட்டுகளில்  ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒரு கொழுக்கட்டையை வைத்து வணங்கி மலை ஏறிச் செல்லவும்.  மடியில் அரிசி சாதத்தை கட்டிக் கொள்ளவும். உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்தவுடன் அங்கிருந்தே ஸ்ரீரெங்கநாதரையும்  தரிசனம் செய்யவும். 

    பின் மடியில் உள்ள சாதத்தை மலை மேல் உள்ள காக்கை, குருவி போன்ற பறவைகளுக்கு தானமாக அளித்து விடவும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நோய்கள், அடி வயிற்றில் உருவாகும் கட்டி போன்ற பலவிதமான நோய்களுக்கும் நிவர்த்தி தருவதே மேற்கண்ட முறையில் அமையும் உச்சிப் பிள்ளையார் வழிபாடாகும். 

    சதுர்த்தி, சதுர்த்தசி, மூல நட்சத்திர நாட்களில் இத்தகைய வழிபாட்டை இயற்றுவது சிறப்பு.