Tag: Pazhani

  • Pazhani Malai Murugan

    தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. 

    நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி மட்டும் உபயோகப்படுத்தப்படும். 

    மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது. 

    சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. 

    அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

    ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

    அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

    இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.

    விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

    தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது,  பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

    தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.

    அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும்.

    இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.

    அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார். 

    இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். 

    அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.

    போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

    கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.

    பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு
     

  • Pazhani Panguni Uthira Thiruvizha

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற மார்ச் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, மலைக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைப்பதால், தீர்த்த காவடியுடன் பக்தர்கள் அமர பந்தல் அமைக்கப்பட உள்ளது. 

    கட்டண தரிசனம், கட்டளை தரிசனம், இலவச தரிசனம் ஆகியவற்றுக்கு தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 10 நாட்களும் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சிறப்பு சமய சொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
     

  • Pazhani Murugan Koil Therottam

    பழநி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நேற்று காலை 10.30 மணிக்கு மணிக்கு மீன லக்னத்தில் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 

    கொடியேற்றத்தையொட்டி விநாயகர், வள்ளி-தெய்வானை சமேதரரான முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. கொடிக்கம்பம் முன்பு மத்தளம் போன்ற வாத்திய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வளர்பிறை நிலவு, சூரியன், சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் உட்பிரகாரத்தில் கொடி சுற்றி வரப்பட்டது. 

    இதனைத்தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றப்பட்டது.  திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

    முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 20ம் தேதி இரவு 7.45 மணிக்கு மேல் சிம்ம லக்னத்தில் நடக்க உள்ளது. தைப்பூச தேரோட்டம் 21ம் தேதி நடக்க உள்ளது. தைப்பூச திருவிழா காரணமாக 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. 24ம் தேதி வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது.