Tag: part 1

  • Karaikaal ammayar puranam – Part 1

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சோழநாட்டில் 
    ஒளிரும் சங்குகள் ஒதுங்கும் 
    கடற்கரை நகரம் திருக்காரைக்கால்.

    அது ஒரு துறைமுகப்
    பட்டினமும் கூட.  எந்நேரமும் 
    ஏற்றுமதி இறக்குமதி 
    என நகரெங்கும் 
    ஏக பரபரப்பு இருக்கும்.

    காரைக்காலில் 
    அறநெறி தவறாத 
    வாய் நெறி மிக்க சிவநெறி வணிகர் 
    ஒருவர் வாழ்ந்து வந்தார்.

    அவர் தான் 
    அந்நகர 
    வணிகர்களின் தலைவர். பெயர் தனதத்தர்.

    வைசியர் குலத்
    தவப்பயன் காரணமாக அவருக்கு 
    ஒரு செல்ல மகள் பிறந்தாள்.

    அவளுக்கு 
    இறைவன் குறித்து வைத்திருந்த பெயர் இரண்டு.

    முதலாவது பெயர் புனிதவதி.

    குழந்தைப் பருவத்திலேயே 
    சிவபக்தி நிறைந்திருந்தது. 
    வளரும் பருவத்தில் 
    அவள் உச்சரிப்பில் 
    சிவம் நாமமே மிகுந்திருந்தது.

    மலரும் காலத்தில் 
    அழகிற் சிறந்த 
    அழகுக் கொழுந்தாய் மிளிர்ந்தாள்.

    தோழிகளுடன்
    விளையாடும்போது கூட சிவமயமாய் இருந்தாள். 

    தமிழ்ப் புலமையும் 
    தமிழ் இசையும் இறையருளால் 
    இயல்பாய் அவளோடு இணைந்திருந்தது.

    சிவனடியார்களைக் கண்டால் போதும் போட்டது போட்டபடி 
    விட்டு விட்டு 
    வாசலுக்கு ஓடிப்போய் பாதம் பணிந்து 
    வீட்டிற்குள் அழைப்பாள்.

    திருவமுது படைப்பாள். நெஞ்சுருக 
    நஞ்சுண்டவரின் 
    கதை கேட்பாள். கைநிறைய 
    பொன் பொருள் கொடுத்து மனம் நிறைவாள்.

    பருவ வயது 
    நெருங்கி வந்தது.
    உருவம் 
    ஊர் கண்படும்படி சாமுத்திரிகா லட்சணப்படி வனப்புமிகு ஆனது. பேரழகுப் பெட்டக்கமாய் புனிதவதி திகழ்ந்தாள்.

    சிவபெருமான் மீது தணியாத காதல் கொண்டிருந்த 
    புனிதவதிக்கு நாகப்பட்டினம் 
    நிதிபதி என்னும் 
    பெரு வணிகர்  வீட்டிலிருந்து மூதறிவாளர்கள் மூலம் கல்யாண 
    விசாரணை வந்தது.

    நிதிபதியின் மகன் பரமதத்தனே
    மணம் பேச வந்த
    தூதுவர்களின் மனமகன்.

    தனதத்தர் 
    குலம் 
    குடி 
    கோத்திரம் 
    குடும்பம்
    ஜோதிடம் 
    மணமகன் 
    என சகலமும் பார்த்து 
    சரி சொன்னார்.

    பண்டைய காலத்தில் பெண் வீட்டில்தான் திருமணம் என்பது மரபு.

    சீதைக்கும் திரௌபதிக்கும் தமயந்திக்கும் 
    தாய் வீட்டில் தானே திருமணம் நடந்தது !

    தந்தை திதிபதியும் மணமகன் பரமதத்தனும் உறவினர் புடை சூழ காரைக்கால் வந்தனர்.

    சிறப்பான செல்வச் செழிப்பான திருமணம் 
    காரைக்கால் 
    அதுவரை கண்டிராத வகையில் நடந்தேறியது.

    " 'மயில்' போன்ற 
    புனித வதிக்கு 
    'காளை' போன்ற பரமதத்தனுக்கும் ஒத்துவராதே….ஆகாதே ! "
    என்று கணித்த 
    மூத்த ஜோதிடர்களின் மெல்லிய குரல் ஒலிகள் 
    மங்கல வாத்தியத்தாலும் ஊர்மக்கள் வாழ்த்தொலிகளாலும் முற்றிலுமாய் யாருக்கும் கேட்காமல் போனது.

    இல்வாழ்க்கை 
    இனிதே தொடங்கியது.

    தனது ஒரே மகளை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்ப மனமில்லை 
    தனதத்தருக்கு.

    சம்பந்தி வீட்டோடு கலந்துபேசி அவர்களின் சம்மதத்தோடு 
    தன் வீட்டு அருகே 
    தனி வீடு பார்த்து 
    குடி அமர்த்தினார்.

    பரமதத்தனுக்கு காரைக்காலிலையே பணம் கொட்டும் 
    தொழில் அமைத்தார் மாமனார் தனதத்தர்.

    காதலும் 
    வணிகமும் கைகூட எக்குறையும் இன்றி புனிதவதி -பரமதத்தன் இல்வாழ்க்கை 
    நல் வாழ்க்கையாகத் தொடர்ந்தது.

    சிவபக்தியும் 
    சிவனடியார் சேவையும் கிஞ்சிற்றும் பாதிக்காமல் முன்னைவிட சிறப்பாக செய்து வந்தாள்
    திருமதி புனிதவதி.

    நாடி வந்த சிவனடியார்களுக்கு நவமணிகள் தந்தாள்.
    உயர்ந்த 
    புத்தாடைகள் தந்தாள்.
    வேண்டுவன யாவும் பரிவோடு தந்தாள்.

    கவி பாடும் 
    தமிழ் புலவர்களுக்கு பெரும் பொருள் தந்து பேணிக் காத்து வந்தாள் புண்ணியவதி புனிதவதி.

    இல்லத்தில் 
    கணவன் 
    இல்லாத போதும் திருத்தொண்டர்கள் வராதிருந்த சமயத்திலும் பரம்பொருளின் திருவடிகளைத் தியானித்து 
    பேரன்பின் வெளிப்பாடாய் ஒளிர்ந்தாள் புனிதவதி.

    ஒருநாள் 
    பரமதத்தனிடம் 
    வணிகம் பேச வந்த வணிகன் ஒருவன் 
    இரு மாங்கனிகளை மரியாதை நிமித்தமாக வழங்கி 
    அக்கனிகளின் சுவையை பெருமைப்பட எடுத்துரைத்தான்.

    பரமதத்தன் 
    அவற்றை 
    அன்போடு வாங்கி 
    ஏவலனை அழைத்து வீட்டில் கனிவோடு காத்திருக்கும் கனிமொழியாளிடம் கொடுத்து 
    வரச் சொன்னான்.

    கனிகளை வாங்கிய புனிதவதி 
    கண்ணாளனுடன் 
    மதியம் உண்ணலாம் என பத்திரமாக ஓரிடம் வைத்தாள்.

    அப்போது 
    வாசலிலே 
    ஓர் அழைப்பு.

    சிவமணம் கமழ 
    சிவநாமம் ஒலித்தபடி 
    ஒரு சிவனடியார் நின்றிருந்தார்.

    மகிழ்ச்சியின் உச்சிக்கே போன புனிதவதி வாசலுக்கு விரைந்து சிவனடியார் 
    பாதம் பணிந்து 
    புனித நீரால்
    பாதம் கழுவி 
    வீட்டினுள் 
    அழைத்து வந்தாள்.

    ஆசனம் தந்து அமரச்சொல்லி 
    திருவமுது படைக்க
    உட்புறம்  சென்றாள்.

    வீட்டில் அப்போது 
    அமுது மட்டுமே 
    தயாராக இருந்தது. காய்கறிகள் ஏதும் போதுமானதாய் இல்லை.

    கவலை கொண்ட புனிதவதிக்கு கணவன் கொடுத்தனுப்பிய
    கனிகள் 
    ஞாபகத்திற்கு வந்தன.

    சமாளித்து விடலாம் 
    என துள்ளிக்குதித்து அமுது படைத்து 
    மாங்கனி ஒன்றை 
    நறுக்கி வைத்தாள்.

    வரும்போது 
    தளர்ந்து வந்த சிவனடியார்
    வயிறார உண்டார். மனதார வாழ்த்தினார். ஆசி கூறி 
    விடை பெற்றார்.

    புனிதவதி மனம் 
    நிறைந்து போனாள். அன்றைய 
    சிவ சேவையை 
    எண்ணி 
    பூரித்துப் போனாள்.

    மதிய உணவருந்த 
    'காளை' பரமதத்தன் வீட்டிற்கு வந்தான்.
    'மயில்'  புனிதவதி 
    தோகை விரித்துப் பரிமாறினாள். 

    மீதமிருந்த கனியைக் 
    கணவனுக்குத் தந்து 
    அவன் ருசிப்பதை ரசித்திருந்தாள்.

    "இப்படி ஒரு ருசியா…. தேவ அமுது போல் இருக்கிறதே….!"
    எச்சிலூற திளைத்தவன் இன்னொரு கனியையும் கேட்டான்.

    புனிதவதி 
    துடித்துப் போனாள்.

    'என்ன சொல்வது ?சிவனடியார் வந்த நிகழ்வை சொல்வதா ?அவருக்கு 
    மாங்கனியைத் தந்த கதையைச் சொல்வதா ?

    இரண்டில் ஒன்று தனக்குத்தான் என எண்ணி அவருக்கு கொடுத்து விட்டதாக நியாயப்படுத்துவதா ?

    உண்மையைச் சொல்வதா?
    ஏதேனும் சொல்லி சமாளிக்கலாமா?'

    குழப்பத்துடன் 
    'சரி' என்கிற மாதிரி தலையை 
    அசைத்துக் கொண்டே சமையலறைக்கு ஓடியவள் சதாகாலமும்
    வணங்கும் சங்கரனை வேண்டி நின்றாள்.

    'அடியவர் அல்லல் களையும் அருட்கடலே!' என்ற பக்தையின் 
    குரல் கேட்டு 
    பேரருளாளர் எம்பிரான் மாங்கனி ஒன்றை 
    அவளது இறைஞ்சிய கரங்களில் 
    மந்திரமாய் வைத்தார்.

    கண் திறந்த 
    புனிதவதி 
    கருணைக் கடலுக்கு நன்றி கூறி 
    உணவருந்திக் கொண்டிருந்த கனவனிடம் ஓடி மாங்கனியைத் தந்து முகம் பார்த்து நின்றாள்.

    அக்கனியைச் சுவைத்த கணவன் பரமதத்தன்,

    "புனிதவதி….!

    முதலில் சாப்பிட்ட மாம்பழத்தின் சுவைக்கும் இப்பழத்தின் ருசிக்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

    இதுவரை 
    நான் சுவைத்திராத அதிமதுர ருசி….!

     ஆஹா…… என்ன ருசி…!

    இது நிச்சயம் 
    அந்த வணிகன் தந்த மாங்கனி அல்ல….

    சுவை மட்டுமல்ல… கனியின் நிறமும் கூட மாறுபட்டுள்ளது.

    மூவுலகிலும் 
    பெறுதற்கரிய இக்கனியை 
    எங்கிருந்து பெற்றாய் ?
    என்ன விசேஷம் ?
    ஏது நடந்தது ?

    இந்த மாங்கனி 
    ரகசியம் கூறு ?"

    ஊடலுக்காக
    விளையாட்டாகத்தான் கேட்டான்  
    கணவன் பரமதத்தன்.

    புனிதவதிக்குத் தான் வார்த்தைகள் 
    வர மறுத்தன.

    உண்மையைச் சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தத்தளித்தாள் தெய்வமகள்.

    'கட்டிய கணவனிடம் 
    கற்பு ஒழுக்கம் பேணும் பெண் எதையும் மறக்கக்கூடாது'
    மனது கூச்சலிட்டது.

    மாங்கனிக்காக 
    அண்ணன் வினாயகனுக்கும் 
    தம்பி முருகனுக்கும் சண்டை மூட்டி திருவிளையாடல் புரிந்த
    விளையாட்டு நாயகனை மனதினுள் வேண்டி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல்  ஒப்புவித்தாள் 
    கற்பரசி புனிதவதி.

    விளையாட்டாய் 
    கணவன் கேட்டதற்கு விந்தையாய் 
    மனைவி பதிலளித்ததை இப்போது 
    கணவன் ருசிக்கவில்லை.

    "புனிதவதியே…!
    உலகாளும் சிவன் 
    உன் பிரார்த்தனையை கேட்டு
    கனி தந்தார் என்பதை அவன்மீது அதீத
    நம்பிக்கை உள்ள 
    நான் மட்டுமல்ல….
    எவரும் நம்ப மாட்டார்.

    அது 
    உண்மையெனில் 
    எனக்கு இதே போல் 
    ஓர் அதிமதுரக் கனியை ஆதிநாதரிடம் வேண்டி வரவழைத்து தா….

    அப்போது நம்புகிறேன்."

    இயந்திரம் போல் 
    ஆனால் 
    கண்ணீருடன் 
    பூசை அறைக்கு விரைந்தாள் புனிதவதி.

    'உற்றவிடத்து உதவும் பெருமானே ..!' 
    என கண்ணீர் மல்க வேண்டி நின்றாள்.

    'தன்னிகரில்லாதானே..!நான் பொய் 
    உரைக்க வில்லை என்பதை 
    என் கணவரிடத்து உறுதிபட உணர்த்தி
    நம்பிக்கை ஏற்படுத்து'

    கைகூப்பி நின்றாள்.

    கனிந்துருகி
    கேட்பவர் குரலுக்கு ஓடோடி வந்து 
    விரைவில் அருளும் கைலாயன்
    கனி ஒன்றை உடனே மங்கையர்க்கரசியின்
    முன் வைத்து
    மாயமாய் 
    மறைந்து போனார்.

    மாங்கனியுடன் மங்கலகரமாய் 
    தேவதை போல் வரும் புனிதவதியைக் கண்ணுற்ற பரமதத்தன் வியந்துபோனான். பயந்தும் போனான்.

    புனிதவதி 
    பரமன் தந்த 
    புனிதக் கனியை பரமதத்தனிடம் கொடுத்தாள்.

    அனிச்சையாய் அச்சத்தோடு வாங்கியவன் 
    அதை 
    உற்று நோக்குவதற்குள் அந்த மாங்கனி திடுமென மறைந்து போனது.

    பரமதத்தனின் 
    மனோ பயம் 
    இன்னும் அதிகமானது.

    அவனது மனம் 
    பல கிளைகளாக 
    விரிந்து விரிந்து 
    சிந்திக்க சிந்திக்க 
    பல யோசனைகள் 
    வந்து போயின. அத்தனையும் 
    அச்சம் தந்தன.
    அவன் மனம் 
    அதிகம் தடுமாறியது.

    'புனிதவதியார் மானிடப் பிறவி அல்ல…..
    ஒரு தெய்வப்பிறவி.

    கடவுள் போல
    தொழத் தக்கவர்.
    கணவரென
    தொடத் தக்கவரல்ல.

    அவரோடு வாழ்தல் தெய்வக் குற்றம்.

    அவர் தனக்குப் பணிவிடை செய்வது 
    அதைவிடப் பாவம்.'

    பயபக்தி 
    பயத்தையும்
    பக்தியையும் கூட்டியது.

    வீட்டில் இருக்கும் தெய்வத்தை 
    வணங்கக் கூறியது 'அச்சம்'.

    விலகி இருக்க 
    எச்சரித்தது 'மனது'.

    அதுமுதல் 
    புனிதவதியாருக்கும் பரமதத்தனுக்கும் தாம்பத்தியம் 
    இடைவெளி கண்டது.

    பேச்சு குறைந்தது.
    மரியாதை மிகுந்தது.

    இவ்விஷயம் 
    எவருக்கும் தெரியாது ரகசியமாயும் இருந்தது.

    (காரைக்கால் அம்மையார் புராணம்- தொடரும்)
     

  • Amr needhi nayanar part 1

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    காவிரி பாயும் 
    சோழ நாட்டில் 
    தேரோடும்  திருவீதிகளைக் கொண்ட பழமையான தொன்மையான ஊர் பழையாறை.

    பழையாறைக்குப் பெருமை சேர்க்க 
    ஆனி மாதம் 
    பூச நட்சத்திரத்தில் அவதரித்தார் 
    வணிகர் குலச் செம்மல் அமர் நீதி நாயனார்.

    பொன், முத்து நவரத்தினங்கள் 
    சிறந்த பட்டு 
    பருத்தி ஆடைகள் 
    எந்த தேசத்தில் 
    சிறப்பாக விளையுமோ அங்கிருந்து தருவித்து நிறைந்த தரத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நல்வணிகர் 
    அமர் நீதியார்.

    வணிகத்தை விட்டால் அவர் உலகம் 
    சிவலோகம் தான்.

    சிவனடி தவிர 
    வேறொன்றையும் சிந்தனை செய்ய மாட்டார்.

    'செம்மேனி கொண்டோன்'
    சிவபெருமானின் திருத்தொண்டர்களைக்
    கண்டால் போதும் மனமகிழ்ந்து 
    அவர்களை அழைத்து வணங்கி, உபசரித்து உணவளித்து அவர்களுக்கு 
    கந்தை,
    துறவிகள் 
    அரை நாணுக்குப் 
    பதிலாக அணியும்  கீளாடை, கோவணம் 
    முதலான ஆடைகளை அளித்து 
    அறக்குணம் காட்டுவார்.

    ஆலாலகண்டருக்குத் திருவிழா என்றால் 
    முதல் ஆளாய்
    முந்திப் போய் 
    முன்னின்று 
    சிவ பணியும் அறப்பணியும் 
    தவறாது செய்வார்.

    ஒருமுறை 
    திருநல்லூரில் பஞ்சவர்ணேஸ்வரர்
    திருவிழாவுக்குச் சென்றவர் 
    இறைவன்பால் 
    மனம் லயித்து 
    சிவநாமம் ஓதினார்.
    அவன் வசம் ஆனார்.

    சிவன்
    வசம் ஆனவர்
    அங்கு 
    அன்னதானத்திற்கு 
    என்றே ஒரு 
    திருமடம் கட்டினார்.

    காலப்போக்கில் 
    மனைவி, மகன் 
    உற்றார், உறவினர் சூழ அங்கேயே தங்கி அடியாருக்குச் சேவையோடு 
    தானே
    அமுது படைக்கத் தொடங்கினார்.

    ஏகாந்தமாய் 
    ஏக இறைவனுக்குப்
    பணி செய்து வந்த 
    அமர் நீதி நாயனாருக்கு ஒரு நாள் சோதனை வந்தது 
    எல்லாம் உணர்ந்தவனாலேயே.

    ஆம்….
    அடியார்களைச் சோதித்து அருள்புரிந்து ஆட்கொள்ளும் 
    அருளாளர் 
    சிவபெருமான் தான் 
    அமர் நீதியாருக்குப் பெரும் சோதனை தர திருவுளம் கொண்டார்.

    ஆதி சிவனார் 
    பழுத்த அந்தணர் 
    வடிவம் எடுத்தார்.
    பார்த்தாலே பரவசமாக்கும் பிரம்மச்சாரி வேடம்.

    அழகிய சிகை 
    சிரத்தில்.
    மூன்று வரித் திருநீறு நெற்றியில். 
    தர்ப்பப்பை மோதிரம் கைவிரலில்.
    முப்புரி நூல் மார்பில்.
    முறுக்கிய அரைநாண் இடுப்பில்.
    அறிவுக் கதிர் வீச்சு திருமுகத்தில்.
    அருள் பொங்கும் பார்வை கண்களில்.
    எனக் காட்சியளித்தார் அந்தணர் வடிவில் வந்த ஆதி சிவனார்.

    அம்மட்டுமா ?

    இரு கோவணங்களும் திருநீறுப் பையும் தருப்பையும் முடிந்த தண்டினை ஏந்தியபடி வந்தார் அந்தணர்.

    அவரைப் பார்த்ததும் பரவசமான அமர் நீதியார் ஓடி வந்து வணங்கி 
    அடிமண் மீது 
    முடிபடப் பணிந்தார்.

    அவரை அன்போடு எழுப்பிய அந்தணர்,
    "அன்பரே…!  
    உன்னுடைய 
    வள்ளல் தன்மையை அறிந்தே வந்திருக்கிறேன்.

    நீ தரும் அன்னம்
    கந்தை 
    கீளாடை 
    வெண்மையான கோவணம் 
    வழங்கும் பண்பு 
    இவற்றைப் பற்றி சிவனடியார்கள் 
    பேச்சில் இருந்த பிரமிப்பைக் கேட்டே நானும் வந்துள்ளேன்."

    அமர் நீதியாருக்கு அந்தணர் வார்த்தைகளால் தலைகால் புரியவில்லை.

    "ஐயன்மீர்….!
    இப்போதே
    அமுது தயார்.

    உங்களைப் போன்ற அந்தணர்களுக்காகவே வேதியர்களைக் கொண்டு 
    தூய்மையான 
    சமையல் செய்கிறோம்."

    உணவு வழங்க ஆயத்தமானார் 
    அமர் நீதியார்.

    அதற்காக உணவுக்கூடம் திரும்பியவரைத் தடுத்து,
    "மெய்யன்பரே…!
    நான் முதலில் 
    காவிரி சென்று 
    நீராடி வருகிறேன்.
    அதன் பின்னர் 
    உன் திருக்கரங்கள் வழங்கும் 
    அடியார் போற்றும் 
    அமுது உண்கிறேன்."
    என்றபடி 
    வான் நோக்கினார்.

    "ஒருவேளை 
    மழை வந்துவிட்டால் கோவணம் 
    நனைந்து விடும்.
    ஈரத்தால் 
    அணிய முடியாமல் போய்விடும்." என்று கூறியபடியே 
    தண்டில் இருந்த 
    இரு கோவணங்களில் ஒன்றை 
    அமர்நீதியாரிடம் கொடுத்தார் அந்தணர்.

    "இதைப் பத்திரமாக 
    நீ வைத்திரு.
    இதன் சிறப்பு 
    சொல்லி மாளாது.
    பத்திரம்…  பத்திரம்"
    என்றவாறே 
    புறப்பட்டார் 
    புனித நீராட.

    அக்கோவணத்தைப் 
    பயபக்தியோடும் பணிவோடும் வாங்கிய அமர் நீதியார் 
    உள்ளே சென்று 
    எவர் துணிமணிகளும் படாதவாறு 
    தனி ஓர் இடத்தில் பாதுகாப்பாக வைத்தார்.

    பின் 
    அந்தணரின் வரவுக்காக அவர் வரும் திசை நோக்கி காத்திருக்க ஆரம்பித்தார்.

    அந்தணர் 
    காவிரிக்குச் சென்று
    புரண்டோடும் காவிரியில் மூழ்கிக் குளித்தார்.

    குளித்துவிட்டு 
    கரைக்கு வந்து 
    வானத்தை நோக்கினார் 
    அந்தி வண்ணர்.

    இறைவனின் உள்ளத்தை ஆழ அறிந்த வருணபகவான்
    விடாது மழை பொழிந்தார் திருநல்லூரே மிதக்கும்படி.

    திருமடம் 
    இருந்த 
    திசை நோக்கினார்.
    அதே.
    அமர்நீதியார் பாதுகாப்பாக வைத்திருந்த கோவணம் மாயமாய் மறைந்து போயிற்று.

    காவிரியில் நீராடிய
    அந்தணர் வடிவ அருளாளர்
    அணுக்கத் தொண்டரின் அன்பெனும் 
    தூய நீராடுதல் வேண்டி திருமடம் வந்து சேர்ந்தார்
    உடல் முழுக்க நீரோடும் பெய்யும் மழைநீர் சொட்டோடுகளோடும்.

    "வணிகர் குல வள்ளலே…!
    சொன்ன மாதிரியே மழை. நானும் நனைந்துவிட்டேன். தண்டில் இருந்த கோவணமும் நனைந்துவிட்டது.

    நான் தந்த 
    கோவணத்தை 
    எடுத்து வா.

    நீராடியதால் 
    எழுந்துள்ளது 
    அகோரப்பசி.

    சீக்கிரம் எடுத்து வா."

    அமர்நீதியார் அவசரகதியில் 
    அறைக்குச் சென்று வைத்த இடத்தில் பார்த்தார். 
    கோவணம் 
    அங்கில்லை.

    அறை முழுக்கத் தேடினார். மடம் முழுக்கத் தேடினார். மனைவியை அழைத்து தேடச் சொன்னார் .
    அவர்களது 
    குட்டிப் பையனும் 
    சந்து பொந்துகளிலும் இண்டு இடுக்குகளிலும் கை நுழைத்துத் தேடினான்.

    கோவணம் தென்படவில்லை.

    "தேவ தேவா…! 
    வந்தோர்க்கெல்லாம் கோவணம் 
    வழங்கிவரும் 
    எனக்கு இது 
    என்ன சோதனை?"
    என இறையடியை நினைத்து
    நெஞ்சுருகிக் கெஞ்சினார் அமர்நீதியார்.

    "முற்பிறப்பு  
    கர்ம வினை 
    இப்படி பழி வாங்குகிறதோ!

    கருணைக் கடலே !அந்தணருக்கு என்ன பதில் சொல்வேன் ?"

    அரற்றினார்.
    கதறினார்.

    அன்றாடம் வணங்கும் அஞ்செழுத்தானே 
    கண்டு கொள்ளாததால் வேறுவழியின்றி 
    வந்தவரிடமே சரணடைந்தார்.

    ஆனால் வந்தவர் சினத்துடன் இருந்தார்.
    சீற்றமுடன் ஏசினார்.

    (அமர் நீதி நாயனார் -தொடரும்)
     

  • Meiporul Nayanar part 1

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    பண்டைய 
    சேதி நாட்டில் திருக்கோவலூரைத் தலைநகராகக்கொண்டு நீதி தவறாமல் 
    நாடாண்டு வந்தார் மலையான் குல மன்னர் மலாடர்.

    அவரது மரபில் 
    வாராது வந்த 
    மாமணியாய் 
    உதித்தவர் தான்  மெய்ப்பொருள் நாயனார்.

    சிவபக்தி மிகுந்த 
    குறுநில மன்னர்.
    சைவமும் பக்தியுமே அவரது அருள்நிறை 
    இரு கண்கள்.

    அற நெறி தவறாதவர்.
    சிறு எறும்புக்கும் தீங்கிழைக்காதவர்.
    ஆயினும் பகைவன் 
    என்று வந்துவிட்டால் 
    தன் நாட்டைக் காக்க
    போர் தொடுக்கத் தயங்காதவர்.

    அப்படி பல 
    போர் கண்டவர்.
    தோல்வியே காணாதவர் என புகழ் கொண்டவர்.

    வீரமும் தீரமும் 
    அவரில் ஒரு பாதி.
    மறுபாதி 
    அன்பும் அமைதியும்.

    ஆகமங்களைக்
    கசடறக் கற்றவர்.
    எப்போதும் ஐந்தெழுத்தை ஓதும் பெருந்தகை.

    விரிசடை உடையராய் உருத்ராட்சம் அணிந்தவராய்
    புனித நீறு பூசியவராய் விளங்கும் சிவபெருமானும்
    சிவனடியார்களும் 
    ஒன்று எனக் கருதி அவர்களே 
    மெய்ப்பொருள் எனப் போற்றி வணங்கி  
    வேண்டுவன தந்து 
    சிவசேவை 
    செய்து வந்தார்
    சிவநேசர் மெய்ப்பொருளார்.

    அதனால் 
    சேதி நாட்டில் 
    அரசனை ஒத்த செல்வாக்கு 
    அடியார்க்கு இருந்தது.
    சிவனடியார்களை 
    இறையை ஒத்தவராகவே மக்களும் போற்றினர்.

    மெய்ஞான மன்னரை மக்கள் 
    மெய்யான கண்கண்ட தெய்வமெனத் தொழுதனர்.

    உண்மையான 
    நிலைத்த 
    மெய்ப் பொருளாய் உண்மைப் பொருளாய் சிவனையும் சிவனடியார்களையும் போற்றி வந்ததாலேயே கால ஓட்டத்தில் 
    மன்னரின் 
    இயற்பெயர் மறைந்து இன்றுவரை மெய்ப்பொருள் நாயனார் என்று வணங்கப்படுகிறார்.

    மெய்ப்பொருளை 
    அறிந்து கொண்டதால் 
    எஞ்சிய உலகனைத்தும் பயனற்ற 
    பொய்ப் பொருள் 
    என்றுணர்ந்து
    எப்போதும் 
    சிவ சிந்தனையிலேயே
    நல்லாட்சி புரிந்து வந்தார்.

    அவர் ஆட்சி 
    இறையாட்சி என்பதாலே
    நாள்தோறும்
    சிவன் 
    ஆலயங்கள் தோறும்
    ஐந்து வேளை பூஜை சீரான சிறப்பு வழிபாடு
    ஆடல் பாடலோடு 
    சிவ வழிபாடு
    உரிய காலத்தில் பண்டிகை விழா என
    சேதிநாடும் 
    சிவமயமாகவே 
    சிறந்தோங்கியது.

    ஒருவர் நல்லவர் 
    என்றால் 
    அல்லவர் கண்பட்டு பொறாமைத் தீ 
    பெரும் தீயாய் 
    பேயாட்டம் ஆடுமே ?

    ஆடியது.

    பக்கத்து நாட்டில் 
    ஒரு பேராசை கொண்ட பொறாமையாளன் ஆட்சிபுரிந்தான்.

    அவன் பெயர் 
    முத்தநாதன்.

    மண்ணாசை கொண்ட முத்தநாதன் 
    பலமுறை 
    யானைப்படை குதிரைப்படை
    தேர்ப்படை
    காலாட்படை என
    நாற்படை சகிதம் 
    ஒரு பெரும் படையோடு
    சிவனாட்சி நடந்துகொண்டிருந்த 
    சேதி நாட்டின் மீது
    போர் தொடுத்தான்.

    புரமெரித்த அரனார் திருவருளால்
    அத்தனை போரிலும் அவன் புறமுதுகிட்டுத்  தோற்றோடினான்.

    அடைந்த தோல்வி 
    பெற்ற அவமானம் அவனை
    முழு மூர்க்கன் ஆக்கியது.

    நல்லாட்சி புரிந்த  மெய்ப்பொருளாரோ 
    போர் வெற்றிகளை லட்சியம் செய்யாது 
    பாராளும் பரமசிவத்தை எந்நாளும் 
    சிந்தித்தவாறே 
    ஆட்சி தொடர்ந்தார். 

    மூளை சிறுத்து
    கறுத்த மனத்தவனான
    முத்தநாதனுக்கு
    நிலத்தாசை முற்றிப்போய் போரில் நேரில் போனால் தோற்பது உறுதி என்பதால் 
    வெவ்வேறு யுக்தியில் புத்தியைத் திணித்தான்.

    'வஞ்சகத்தால் 
    வென்றால் என்ன ?'

    தோல்வி அவமானம்
    பேராசை ஆத்திரம் அவனை
    வஞ்சகத்திற்கான
    சூத்திரத்தை
    யோசிக்க வைத்தது.

    திட்டமிட்டுத் தீட்டினான்.

    மெய்ப்பொருளாளர் மெய்ப்பொருளென கருதும் 
    சிவனடியார்களை போற்றும் விதத்தை 
    பிற நாட்டார் புகழ ஏற்கனவே தெரிந்திருந்தான்.

    எத்தடையும் இல்லாது எந்நேரமும் 
    திருக்கோவலூர் அரண்மனை
    சிவனடியார்களுக்காக திறந்திருக்கும் என்பதையும் 
    அறிந்து கொண்டான்.

    மெய்ப்பொருளார்
    அடியார்களைத் தரிசிப்பதில் 
    காலம் நேரம் பார்ப்பதில்லை…. 
    போன்ற செய்திகள்
    தேனாய்ப் பாய்ந்தது 
    தேள் மனத்தான் செவிகளில்.

    வஞ்சகன் 
    வஞ்சக வலை 
    விரிக்கத் தயாரானான்.

    முதலில்
    முத்தநாதன் 
    முத்தி நாதன் ஆனான்.
    ஆம்… முத்திப்பேறு அடையும் சிவனடியார் வேடம் தரித்தான்.

    மெய்யான சிவனடியார்களே
    தோற்கும் வண்ணம்
    பொய்த் தோற்றம்
    புனைந்து
    தவயோகி போல்
    உடல் முழுக்க திருநீறு பூசி,
    கனத்த உருத்திராட்ச மாலைகள் கழுத்தில் சூடி, 
    கையில் ஒரு 
    பெரிய புத்தகம்,  
    மானம் மறைக்கும் 
    காவி உடை சகிதம்
    அந்த பாவி உருமாறினான்.

    அவ்வுருவில்
    சிவன் ஆளும் 
    சேதிநாடு அடைந்து
    நாயனாரை நெருங்கி சமயம் பார்த்து 
    தீர்த்துக் கட்ட முடிவெடுத்தான்.

    கள்வர்களுக்கும்  வஞ்சகர்களுக்கும் உரித்தான 
    இரவு நேரத்தில் 
    சேதிநாடு வந்தடைந்தான்.

    அந்நேரத்திலும்  எதிர்கொண்ட 
    நன்மக்கள் அவனை வணங்கி 
    ஒதுங்கி நின்று 
    மரியாதை செலுத்தி வரவேற்றது
    தனது 
    போலி வேடத்திற்கு கிடைத்த நற்சான்றிதழ் 
    என பெருமிதம் கொண்டான்.

    இடையில் 
    எந்தவித தடையும் இன்றி கோவலூர் அரண்மனையை அடைந்தான்.

    அரண்மனை வாசலில் காவலுக்கு இருந்த கம்பீரமான காவலர்கள்
    போலிச் சிவனடியாரான முத்தநாதனை
    எதுவும் கேட்காது 
    எதுவும் மறுக்காது வணங்கி வழிவிட்டனர்.

    இப்படியே வந்துவிட்டான்
    போலி வேடதாரி அரசன் பள்ளியறைக்கு அருகே,

    நல்ல வேளை. 
    அன்று 
    பள்ளியறைக்கு 
    காவலில் இருந்த 
    வாயிற்காப்போன் 
    அதி புத்திசாலி.

    அவன் பெயர் தத்தன்.

    "ஐயன்மீர்…!
    தங்கள் வரவு நல்வரவாகுக!

    இது எம் வேந்தர் 
    உறங்கும் நேரம்.
    அரசியாரும் 
    உடன் உள்ளார்.

    எனவே இது 
    தக்க சமயம் அன்று.

    இதோ இந்த 
    விருந்தினர் மாளிகையில் அறுசுவை உணவு அருந்தி ஓய்வெடுங்கள்.

    நாளை காலையில்
    அரசருக்குத் தரிசனம் தாருங்கள் "

    நாசுக்காகத் 
    தடை போட்டான்.
     
    அதைக் கூட.
    வேண்டுகோளாகவே
    வைத்தான் தத்தன்.

    கொலை வெறியோடு வந்திருந்த முத்தநாதன்
    கண்கள் சிவக்க கையிலிருந்த  
    நூலைத் 
    தத்தனிடம் காட்டி
    சினந்தான்.

    "நான் ஒன்றும் 
    சும்மா வரவில்லை.

    இறைவன் படைத்த இரகசியமான சாத்திரம் ஒன்றைப் போதிக்கவே வந்துள்ளேன்.

    இது மண்ணில் 
    யாரிடமும் இல்லாத சிவாகம நூல்.

    என் போன்றோருக்கு நேரம் காலம் இல்லை.
    உரிய நேரம் நாம் அறிவோம் "
    என்றவாறு 
    கோபத்தோடு
    உற்று நோக்க 
    தத்தன் சற்று தள்ளி நின்று வழி விட்டான்
    சிறிதும் விருப்பம் இன்றி.

    பாவம் 
    அவன் ஓர் 
    இருதலைக் கொள்ளி.

    தத்தநாதனை
    உள்ளே விட்டால் 
    வேந்தன் உறக்கம் கெடும் என அவனது 
    மனமே சூடும்.
    விடாவிட்டால் 
    தத்தன் குடும்பம் கெடும்
    சிவயோகியின் சாபத்தால்.

    பள்ளியறைக்குள்ளேயே சென்றுவிட்டான் 
    தவ வேடம் பூண்ட 
    பாதகன்
    அவ வேடதாரி.

    சிவநேச மன்னர்  நித்திரையில் ஆழ்ந்திருந்தார்.
    கனவிலும் 
    சிவ சிந்தனையே
    நிறைந்திருந்தது.

    அடிக்கடி தூக்கத்திலும்
    'சிவசிவா' என முணுமுணுத்தார்.

    தலைநிறைய
    பூச்சூடி
    திருமகள் போலிருந்த பட்டத்தரசி
    அரசன் படுக்கை அருகில்
    திண்டில் சாய்ந்திருந்தாள்.

    சிவனடியார் போல் 
    யாரோ வருவதை 
    நிழல் காட்ட
    நித்திரையில் இருந்த மன்னரை 
    கூந்தல் மலரொன்றை எடுத்து லேசாகத் தட்டி எழுப்பினாள்
    கண் துஞ்சாக் காரிகை.

    திடுக்கிட்டு எழுந்தவர் கண்களில்
    திருவிளையாடல் 
    நாயகர் போல்
    வஞ்சகன் முத்தநாதன் காட்சியளித்தான்.

    கனவில் கண்ட சிவபெருமானே அவ்விரவில் வந்ததாக மெய்ப்பொருளார் மெய்சிலிர்த்தார்.

    இப்போது 
    முத்தநாதனுக்கு இருந்த ஒரே இடைஞ்சல் 
    இடையில் இருந்த 
    இளைய பட்டத்தரசியே.

    "மன்னர் பிரானே!

    என்னிடம் ஒரு 
    சிவாகம நூல் உள்ளது.

    அது
    'உங்கள் நாயகன்' 
    முன்னம் உரைத்தது.

    அது 
    நீவீர் மட்டும் கேட்டு உணரத்தக்கது.

    எனவே…. "

    "சொல்லுங்கள் 
    சிவனடியே.
    அடுத்து இந்த 
    சிவனடிமை 
    என்ன செய்ய வேண்டும் ?"

    "நீர் தனித்திருக்க வேண்டும்.
    பூச்சூடி அருகிருக்கும் அரசியார் 
    நம்மைத் தனித்து விட்டு
    வேறிடம் செல்ல வேண்டும்."

    'அவ்வளவுதானே ?'
    என்கிற மாதிரி மெய்ப்பொருள் நாயனார் அரசியைப் பார்க்க பொருள் உணர்ந்த 
    மாதரசி –
    இன்னும் 
    சில நொடிகளில்  
    பூ விழக்கப்போகும் 
    பூவரசி –
    மன்னவரின் கண்ணசைவுக்கு ஏற்ப அந்தப்புரம் சென்றாள்.

    எதற்கு சிவனடியார் 
    'நம் நாயகர்' என்று சொல்லாமல் 
    'உம் நாயகர்' என்று
    எகத்தாளமாய்ச் சொன்னார் என்று யோசித்தபடியே அவள் அந்தப்புரத்தில் 
    உறங்கிப் போனாள்.

    "இனி அரசனைக் 
    கொள்வது எளிது. 
    இதுவே தருணம்"
    முத்தநாதனின்
    வஞ்சக மனது கூச்சலிட்டது.

    பொய் வேடதாரி முத்தநாதனின்
    வஞ்சகத் திட்டத்தை
    அறியாத அரசர்
    மெய்ப்பொருளார்
    அவரை
    ஓர் ஆசனத்தில் 
    அமர வைத்து
    அருகில் 
    தரை அமர்ந்து
    தாழ் பணிந்து
    தலைவணங்கி
    உபதேசம் கேட்கத் தயாரானார்.

    மடியில் வைத்திருந்த மறை நூலில் 
    மறைத்து வைத்திருந்த சிறு குறுவாளை எடுத்து கண்மூடித்
    தலைவணங்கி 
    செவி திறந்து 
    கேட்கத் தயாராக இருந்த மெய்ப்பொருள் நாயனாரை 
    கூர்நிறை
    கொடுவாளால்
    உயிர் போகும் வண்ணம் போட்டான் ஒரு போடு 
    நடுமுதுகில் நயவஞ்சகன்.

    இரத்த வெள்ளத்தில் 
    வீழ்ந்த
    மெய்ப்பொருள் நாயனார்
    அப்போதும் 
    'சிவ.. சிவ'என்றபடி
    'சிவ வேடமே மெய்ப்பொருள்'
    என முணுமுணுத்தபடி
    இருந்தார்.

    வெளியே 
    தத்தனின் மனம் 
    வேடதாரியின் 
    நடவடிக்கையில் 
    ஐயம் கொண்டு
    தத்தளித்துக் 
    கொண்டே இருந்தது.

    ஒரு கட்டத்தில் பள்ளியறையில் வினோதமான சத்தம் கேட்பது போல் தோன்றவே
    திடுமென 
    பள்ளி அறைக்குள் நுழைந்தான்.

    அங்கே….? 
    இரத்த வெள்ளத்தில் 
    தத்தளித்தபடி 
    தத்தனின்
    மனம் கவர் மன்னன்.

    அருகில் 
    'நான் தான் கொன்றேன்' என இறுமாப்புடன் நின்றிருந்த அரசனின் உயிர் கவர்ந்த வஞ்சகன்.

    நிலைமை உணர்ந்த அக்கணமே
    தனது கூர்வாளினை எடுத்தான்
    கூர்த்த மதி தத்தன்.

    (மெய்ப்பொருள் நாயனார் புராணம்- தொடரும்)