Tag: Noi Theerkum

  • Noi Theerkum Thirumanjanam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சயனி ஏகாதசியை முன்னிட்டு வருகிற 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லிப்பொடி திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

    ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட இந்துக் கால கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளை குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பௌர்ணமி நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும்.

    ஏகாதசி தோன்றிய புராண வரலாறு :
    தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

    அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, 'முரன்' பகவானை கொல்ல துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

    விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட ஸ்ரீமன்நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

    நெல்லிப்பொடியின் சிறப்பு :
    நெல்லிக்காய் பொடி உடல் உஷ்ணத்தை குறைத்து, மூளைக்கு குளிர்ச்சியையும், ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியைத் தருபவையாகும். கோடை காலங்களில் நமக்குப் பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் சஞ்சீவி போன்றதாகும். தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும். நீரிழிவை நீக்கும் இயல்பு உண்டு. மேலும் நெல்லியில் உடலுக்கு அவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. இரத்த விருத்தியையும் கொடுக்க கூடியவை.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த நெல்லிப்பொடி தீர்த்த திருமஞ்சனத்திலும், மஹா தன்வந்திரி ஹோமத்திலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தக்வலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை, தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

  • Theeradha Noi Theerkum viradham

    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.  இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

     தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடு களிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

    தைப்பூசத்தன்று முருகனுக்கு விரதமிருந்து காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு விரதமிருந்து காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று விரதமிருந்து காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.