Tag: maasi

  • maasi magathin sirappugal

    மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.

    பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.

    தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகாமகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.

    முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரம்மஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவரைக் காப்பாற்றினார். அவரை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.

    முன்பு ஒருகாலத்தில் பார்வதி சமேதராகக் கயிலையில் எழுந்தருளி இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவநிலையைச் சாற்றியருளும் படி கேட்டார். அதற்குப் பரமசிவன் "தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்" என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான் தான் இன்றி ஏதும் ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார்.

    இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுகுக் கொடுத்த வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார். அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டுருந்தார்.

    ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று. இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் அக்குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது.
     

  • Mangalam tharum masi month

    மகத்துவம் நிறைந்தது மாசி மாதம் என்று போற்றுகிறார்கள். மாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதமாகச் சொல்லப்படுகிறது. மங்கல வாழ்வு தரும் மாசியின் மகிமைகள் வரிசைகட்டி நிற்கின்றன. 

    மாசி மாதம் மங்கல மாதம் என்றே அழைக்கப்படுகிறது. மாசி மாதம் மந்திர மாதம் என்றும் சொல்வார்கள். எனவே மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது சிறந்தது என்கிறார்கள்.  இந்தக் காரணங்களால்தான், உபநயனம் என்கிற பூணூல் கல்யாண வைபவத்தை, மாசி மாதத்தில் நடத்துகின்றனர். மாசி மாதத்தில்தான் என்று விவரிக்கிறது திருவிளையாடல் புராணம். 

    முழுமுதற்கடவுளான விநாயகரை, மாசி மாத சங்கடஹர சதுர்த்தியில் விசேஷமாக வழிபடுவதும் பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலனைத் தரும். 

    முருகக் கடவுளுக்கும் உகந்தது மாசி மாதம். மாசி மாத பூச நட்சத்திர தினத்தில்தான் முருகப்பெருமான் சுவாமிமலை திருத்தலத்தில், தந்தை சிவபெருமானாருக்கு பிரணவ உபதேசம் செய்து ஞானகுரு எனப் பெயரெடுத்தார்.

    மாசி மக நன்னாளில், தேவியை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுவது இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளும். சோகத்தையும் துக்கத்தையும் விரட்டியடிக்கும். 

    மாசி மாத சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மலர்களால் அலங்கரித்து வழிபடுவதால் கல்வியிலும் ஞானத்திலும் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள்.

    காரடையான் நோன்பும் சாவித்திரி விரதமும் இந்த மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மக நாளில்தான் காமதகன விழா விமரிசையாக பல ஆலயங்களில் நடைபெறுகிறது.

    மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழலாம் என்பது நம்பிக்கை. எனவே இந்த மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம். வாடகை வீடு மாறுவதற்கும் உகந்த உன்னதமான மாதம்