Tag: Kulachirai

  • Kulachirai Nayanar puranam part 2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சைவத்தை வளர்ப்பதற்கும் 
    சமயத்தை அழிக்க நினைப்போரை 
    வேரொடு வேராய் 
    அழிக்க வல்லவருமான சமய ஞான வீரரை தரிசிக்க 
    ஆவல் கொண்டனர்
    மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும்.

    அன்னை உமையவளிடம் ஞானம் பெற்ற ஞானசம்பந்தரரை மதுரைக்கு 
    அழைத்து வந்தால் அஞ்ஞான இருளை அழித்துவிடலாம் என்பதில் 
    உறுதியாய் இருந்த குலச்சிறையார் 
    அரசியாரிடம் கலந்துரையாடி திருமறைக்காடு விரைந்தார்,
    ஞானசம்பந்தரைத் தரிசித்து 
    பாண்டிய நாட்டிற்கு அழைத்து வர.

    வழியில் எதிரே 
    ஒரு சிவிகை.
    சிவிகையைச் சுற்றி 
    'சிவ சிவ ' என
     ஒலித்தவாறு 
    அடியவர் கூட்டம்.

    சிவிகையினுள்
    அன்பொழுக 
    அருள் பெருக அமர்ந்திருந்தார் ஆளுடைய பிள்ளை.

    திருஞானசம்பந்தரைப் பற்றி நிறையக் 
    கேள்விப் பட்டிருந்த 
    குலச்சிறையார் குதிரையிலிருந்து அவ்விடத்திலேயே இறங்கி கைகூப்பியபடி
    நிலமிசை வீழ்ந்தார்.

    'யார் இவர் ?'
    என அருகிருந்தோரிடம் கேட்டறிந்த 
    சிவஞானச் செல்வர் சிவிகையில் இருந்து இறங்கி வந்து 
    குலச்சிறையாரை 
    தோள் தூக்கி
    ஆசி தந்து
    ஆரத் தழுவினார்.

    நலம் 
    விசாரிப்புக்குப் பின்பு
    நாடு பற்றி பேச்சு எழுந்தது.

    சமணத்தால் 
    நாடு படும் பாடு குறித்து குலச்சிறையார் விவரிக்க
    நிலைகுலைந்து போனார் ஞானசம்பந்தர் பெருமான்.

    சைவம் தழைக்கவே 
    தான் தேசசஞ்சாரம் செய்வதாகக் கூறிய ஞானசம்பந்தர் 
    பாண்டிய நாட்டிற்கு 
    வர ஆர்வம் காட்டினார். உடனே சம்மதித்தார்.

    விடைபெற்று  
    பரிமேலேறி
    காற்றை விட வேகமாக பாண்டியநாடு விரைந்து பட்டத்தரசியிடம் நடந்ததைக் கூறி
    வரவேற்பு ஏற்பாடுகளில் மனத் துள்ளலோடு ஈடுபடலானார்.

    பாண்டிய நாட்டின் பட்டத்தரசி மங்கையர்க்கரசியார்
    எல்லை வரை சிவிகையில் 
    வந்து 
    எல்லையில்லா பக்தியோடும் நம்பிக்கையோடும் ஞானசம்பந்தரரை
    வணங்கி வரவேற்றார்.

    முதல் அமைச்சர் குலச்சிறையார் முறைப்படி 
    அரசனிடம் சொல்லிவிட்டு
    மகாராணியோடு வந்து
    ஞானக் குழந்தையை
    முகமலர்ந்து வரவேற்றார். 

    ஞானசம்பந்தர் மதுரையிலேயே சிலகாலம் 
    தங்க ஏற்பாடாயிற்று.

    சமணர்களால் சம்பந்தருக்கு தீங்கேதும் நேர்ந்துவிடும் என்பதை யூகித்த
    முதலமைச்சர் குலச்சிறையாருக்கு 
    பலத்த காவலுக்கு
    ஏற்பாடு செய்திருந்தார்.

    ஞானசம்பந்தரை
    மதுரையம்பதி உறையும் சொக்கநாதரைத் 
    தரிசிக்க வைத்து 
    தானும் உடனிருந்து பெரும் பாக்கியம் பெற்றார்
    குலச்சிறையார்.

    ஞானசம்பந்தர் 
    தனது 
    இணையற்ற அருளாற்றலால் மன்னனின் மனதை மாற்றி 
    சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றிவிட்டால் 
    'தங்கள் கதி அதோ கதி'
    என அஞ்சிய சமணர்கள் கொடும் திட்டம் தீட்டினர்.

    பாண்டிய வீரர்களின் கட்டுக் காவலை மீறி ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு 
    தீ வைத்தனர் 
    தீய மனதோர்.

    சமணர்கள் வைத்த 
    பெரும் தீ 
    அனல் விழியனின் 
    அருள் புதல்வனை 
    என்ன செய்துவிடும் ?

    எம்பிரானை எண்ணி 
    ஒரு பதிகம் பாடி
    'தீ எய்தவரையே 
    சென்று சேரட்டும்' என கோபம் காட்டினார் ஞாலமும் அறிந்த ஞானசம்பந்தர்.

    அவர் வாக்கு சற்றும் பொய்க்காமல் 
    அப்பெருந்தீ 
    அரசனின் வயிற்றைச் சென்றடைந்தது.

    மன்னன் தீராத 
    வெம்மை 
    நோயில் வீழ்ந்தான். பெரும் நெருப்பு தீண்டிய புழுவாய் துடித்தான்.

     சமணர்கள் சமணத்துறவிகள் தாங்கள் அறிந்திருந்த அனைத்து மருந்துகளையும் மந்திரங்களையும் பிரயோகித்துப் பார்த்தனர்.

    வெம்மை
    கூடியதே தவிர குறைந்தபாடில்லை.
    கோபம் கொண்டு
    சமணர்களை நோக்கி மன்னன் வீசிய வார்த்தைகள் வெம்மையாய் சுட்டன.

    இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாதரசி மகராசியாரும் முதலமைச்சர் குலச்சிறையாரும் மன்னனிடம் திருஞானசம்பந்தரின் மகத்துவங்களை எடுத்துச்சொல்லி 
    அவரை அழைத்து வர அனுமதி கேட்டனர்.

    சமணமே 
    பெரிதெனக் கருதி 
    அதுகாறும் 
    சமணம் தழுவி 
    அரசாண்டு வந்த மன்னன் 
    வெம்மை நோயைக் கூட தீர்க்க முடியாத 
    பொய் மதம் 
    சமணம் 
    என வெறுத்து ஞானசம்பந்தரைத் தரிசிக்க 
    விருப்பம் தெரிவித்தான்.

    வந்தார் 
    ஆளுடைய பிள்ளை.

    கனிவாய் பார்த்து புன்னகையால் 
    ஆசி கூறி 
    வெண்ணீறைக் கையிலெடுத்து உடலெங்கும் பூசி விட்டார் சிவநாமம் அர்ச்சித்தபடி.

    என்ன மாயமோ அக்கணமே 
    பாண்டியனின் நோய் பறந்தோடிப் போனது.

    மன்னன்
    மனதில் இருந்த அஞ்ஞான இருளும் அகன்று போனது.

    தீரா நோய் 
    தீர்க்கப்பெற்ற அனுபவத்தால் சைவத்தின் 
    பெருமையை உணர்ந்த 
    பாண்டிய மன்னன் அடுத்தகணமே
    சைவம் தரித்தான்.

    ஞானசம்பந்தரின் திருவடிகளில் 
    தன் நெற்றி பதித்து கண்ணீர் வடித்தான்.

    அது நாள் வரை தன்னையும் 
    தன் குடிகளையும் 
    நம்பவைத்து 
    மதம் மாற்றிய சமணர்களுக்குத் 
    தக்க தண்டனை தர முடிவெடுத்தான்.

    அதற்குள்ளாகவே மன்னன்  ஞானசம்பந்தரால்
    குணமான செய்தி பாண்டிய நாடெங்கும் பரவிவிட்டது.

    பயந்துபோன 
    சமணத் துறவிகள் ஞானசம்பந்தரை வம்பிழுக்கும் நோக்கில் வாதப் போருக்கு அழைத்தனர்.

    மூன்று வகை வாதங்களான
    சுர வாதம் 
    அனல் வாதம் 
    புனல் வாதம் 
    அறிவு தெளிய நடந்தேறின.

    முதல் இரண்டு வாதங்களில் 
    தோல்வி கண்ட சமணர்கள் 
    'புனல் வாதத்தில் தோற்றால் வேந்தனே எங்களைக் கழுவேற்றலாம்' என 
    மார் தட்டினர்.

    ஆனால் அதிலும் ஞானசம்பந்தர் 
    வெற்றிக் கொடி நாட்டினார்.

    முதலமைச்சர் குலச்சிறையார் 
    வாதம் புரிந்து தோற்ற 
    சமண குருமார்களையும் ஓடி ஒளிந்த சமணர்களையும் ஒருவரைக் கூட 
    விடாமல் பிடித்து 
    கழுவேற்றினார்.

    அப்படி 
    கழுவேற்றப்பட்டு 
    மாண்ட சமணர்களின் எண்ணிக்கை 
    எட்டாயிரமாம்.

    அதன் பின்னர் 
    பாண்டிய மன்னன் அரசியாருடன் சேர்ந்து குலச்சிறையார் ஆலோசனையுடன் செய்த 
    சிவப் பணிகள் 
    பல்லாயிரம் இருக்கும்.

    அதனால் 
    பாண்டிய நாட்டில் 
    சமணம் பூண்டோடு அழிந்தது.
    சைவம் தழைத்தது.

    'வந்த வேலை 
    இறை விருப்பப்படி முடிந்துவிட்டது'
    எனக் கருதி
    சில நாட்களில் ஞானசம்பந்தர் 
    சோழநாடு புறப்பட்டார்.

    குலச்சிறையாருக்கு ஞானசம்பந்தருடனேயே சோழநாடு சென்று 
    சமயப் பணி தொடர 
    ஆசை மிகுந்தது.

    ஞானசம்பந்தர் 
    புறப்படும் தருணம் வரை 
    அவரது சம்மதத்திற்காக காத்திருந்தார். கண்ணசைவுக்காக
    முகம் பார்த்திருந்தார்.

    ஞானசம்பந்தரோ "இங்கிருந்தபடியே 
    சைவம் தழைக்க 
    சமயப் பணியாற்றுங்கள். சிவநெறி போற்றி இருங்கள்." எனக் கனிவோடு 
    உத்தரவிட்டு விட்டு மகிழ்வோடு விடைபெற்றார்.

    திருஞானசம்பந்தரின் திருவாக்கே
    இறைவாக்கு என உணர்ந்த 
    குலச்சிறையார் பல்லாண்டு 
    சிவப் பணிகள் செய்து ஒரு நன்நாளில் 
    மதுரையம்பதியிலேயே முக்தியடைந்தார்.

    சிவபுரியில் 
    சிவபிரான் அருகில் தேவகணங்களுடன் அவர்களில் ஒருவராய் 
    பேரருளோடு 
    திகழத் தொடங்கினார். இன்றும் 
    அருள் சுரந்து கொண்டிருக்கிறார்.

    குலச்சிறையாரை  'பெருநம்பி' எனப் போற்றுகின்றனர் தாங்கள் அருளிய பதிகங்களில் 
    நம்பியாரூராரும் ஒட்டக்கூத்தரும்.

    இது 
    குலச்சிறையாருக்கு கிடைத்த 
    இறையம்சம் கொண்ட
    நாயனார் விருது.

    நம்பி என்றால் 
    ஆண்களில் மேன்மையானவர் 
    என்று பொருள்.

    'குணம் கொடு 
    பணியுங் குலச்சிறை' எனப் போற்றுகிறார் மாணிக்கவாசகர்.

    'பாண்டிய நாடு முழுதும் சமண இருள் 
    கவிழ்ந்த போது 
    ஆணில் ஒருவரும் பெண்ணில் ஒருத்தியுமே சைவத்தில் நிலைத்து நின்று காத்தவர்கள்.

    ஆணில் 
    குலச்சிறை நாயனார்.
    பெண்ணில் மங்கையர்க்கரசியார் ' என்று நன்றியோடு புகழ்மாலை சூட்டுகிறார்   வாரியார் சுவாமிகள்.

    'பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன் ' 
    – சுந்தரமூர்த்தி நாயனார்.

  • Kulachirai nayanar puranam part 1

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    பழம் பெருமை  
    பல கொண்ட 
    புகழ்மிகு நாடு 
    பாண்டிய நாடு.

    பாண்டிய நாட்டிற்கு ஆன்மீகச் சிறப்பு சேர்க்கும் சிவ தலங்கள் பல உண்டு.

    அதில் ஒன்று மணமேற்குடி.

    நெற்பயிர் நிறைந்த வயல்கள்.
    கரும்புப் பயிர் 
    சூழ்ந்த தோட்டங்கள். 
    கமுக மரங்கள் 
    பரந்த புறம்புகள்
    என பசுமை மிளிர் 
    நகரே மணமேற்குடி.

    மணமேற்குடியில் அவதரித்து 
    சிவனடியார் 
    சேவை புரிந்து 
    உரிய காலத்தில் 
    சைவம் காத்த பெருமை கொண்டவர் 
    குலச்சிறை நாயனார்.

    மணமேற்குடியில் குடிகொண்டிருக்கும் ஜகதீஸ்வரனாரைத் தரிசிக்க நாள்தோறும்
    சிவனடியார்கள் 
    வந்த வண்ணம் இருப்பர்.

    அதற்கான 
    அருள் ஆற்றல் கொண்ட
    ஆன்மீகச் சிறப்பு அக்கோயிலுக்கு இருக்கிறது.

    அக் கோயிலை
    நிர்மாணித்து
    அர்ப்பணித்தவர் 
    யார் தெரியுமா ?

    திருவாசகம் அருளிய மாணிக்கவாசகப் 
    பெருமானார். 

    அதனாலேயே சிவனடியார்கள்       பிறவிப் பிணி தீர்க்க
    மாணிக்கவாசகரைத் 
    தேடி வந்து விடுவார்கள்.

    ஜகதீஸ்வரர் கோயிலுக்குத்
    தினந்தோறும் சென்று 
    சிவ பாதங்களைத் தொழும் வழக்கம் உடையவர் குலச்சிறையார்.

    சிவ பாதங்களை மட்டுமல்ல சிவனடியார்களை கண்டாலும் 
    அவர்தம்
    காலடி விழுந்து 
    கொண்டாடி மகிழ்வார்.

    சிவனடியார்களைக்
    கண்ட மாத்திரத்திலேயே கூப்பிய கரங்களோடு வணங்கி வரவேற்று தாள்பணிந்து 
    ஆசி பெற்று 
    அவர்கள் அகமகிழ உபசரித்து வழியனுப்புவது குலச்சிறையாரின் சிவதொண்டு.

    நெற்றியில் திருநீறு கழுத்தில் உருத்திராட்சம் நாவினில் பஞ்சாட்சரம் என்று வருகை தரும் சிவநேசர்களைக் 
    கண்டால் போதும் 
    பிறவிப் பயன் 
    அடைந்த மாதிரி உபசரித்து உளமகிழ்ந்து
    அருள் பெறுவார்.

    சிவனடியார் வழிபாடே சிவ வழிபாடு என்பது அவரது வாழ்வியல். சிவனடியார்களைச் சிவனாக பார்ப்பதே அவரது பண்பியல்.

    வரும் சிவனடியார் 
    உயர் குலமா 
    பிற குலமா நற்குணத்தவரா
    தீங்குணத்தவரா என்றெல்லாம் 
    ஆராய மாட்டார்.

    வேறுபாடு 
    பார்க்க மாட்டார்.
    வேறுபாடும்
    காட்ட மாட்டார்.

    தனித்து வந்தாலும் கூட்டமாக வந்தாலும் துதித்து வணங்குவார். முகம் மலர்ந்து
    உபசரித்து மகிழ்வார்.  

    அனுதினமும் சிவனடியார்களைத் தரிசிப்பதை 
    வழக்கமாகக் கொண்டிருந்ததால் 
    அவர் இருக்குமிடம் ஆண்டு முழுதும் 
    சிவ மணம் கமழ்ந்த வண்ணம் இருக்கும்.

    இத்தனைக்கும் குலச்சிறையார் 
    சாதாரண பிரஜை அல்ல.

    பாண்டிய நாட்டின் 
    பெரும் செல்வந்தர். ஆனால் 
    செல்வம் அவருக்கு வெறும் தூசு.
    சொத்தெல்லாம் 
    சிவன் சொத்து 
    என்று கூறி புன்னகைப்பார்.

    அவர் ஒரு போர்வீரர்.
    வெறும் வாய்ச்சொல் 
    வீரர் அல்ல.
    நாடு காக்கும் 
    நற்படைக் காவல்தலைவர்.
    சிவப் படையின் 
    தளபதி தானென்று நினைத்து மிடுக்கோடு வலம் வருவார்.

    எப்போதும் 
    தன்னைச் சிவனடியார்களின் 
    அடித்தொண்டர்களின் ஒருவராகவே
    கருதிப் பணி செய்வார்.

    பின்னாளில் 
    பாண்டிய நாட்டின் முதலமைச்சராக 
    பாண்டி மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கபரிபாலனம் மேற்கொண்டபோதும் தன்னை 
    முதலமைச்சராக கருதாமல் சிவனடியார்களின் அடிமையாகவே 
    எண்ணி வாழ்ந்தார்.

    திருநீறு 
    உருத்திர மாலை பஞ்சாட்சரம் 
    கோவணம் என 
    சிவக் கோலமே முதலமைச்சரின் அடையாளமாய் இருந்தது.

    அப்போது 
    பாண்டிய நாட்டின் அரசனாக இருந்தவன் 
    நின்றசீர் நெடுமாறனார் என்பவன்.
    அவனது இயற்பெயர் மாறவர்மன் அரிகேசரி.

    பின்னாளில் 
    அவன்தான் 
    கூன் பாண்டியன் என அழைக்கப்பட்டான்.

    அவனுக்கு ஏனோ 
    சமண மதத்தின் மீது 
    ஓர் ஈர்ப்பு.
    அதனால்
    சமண மதத்தைத்
    தூக்கிப் பிடித்தான். அவனையொட்டி குடிமக்களும் 
    சமணம் சாய்ந்தனர்.

    குல பேதம் பார்க்காத குணக்குன்றே 
    தனது முதலமைச்சராக இருக்க வேண்டுமென குலச்சிறையாரை முதலமைச்சராக நியமித்தான்.

    குலத்தைக் காப்பவர் என்னும் பொருளில் தான்
    அவருக்கு குலச்சிறையார் என்ற பெயரே வந்தது.

    ஆம்…
    குல பேதம் காணும்
    இழி குணத்திற்குச் சிறையிட்டவர்
    குலச்சிறையார்.

    முதலமைச்சரான குலச்சிறையாருக்கு சமணம் ஏற்புடையதல்ல. என்றாலும் 
    தம் உயிர்க் கொள்கையான
    சைவம் போற்றினார். சைவம் தழைக்க விரும்பினார்.

    செந்தமிழ் பாடல்களால்
    செஞ்சடையனைத் துதித்தபடி 
    நல்ல காலத்திற்காகக் காத்திருந்தார்.

    பாண்டிய மண்ணில் சைவம் அழியாதிருக்க சைவத்தின் வழிநின்று நல் முயற்சிகள் பல மேற்கொண்டார்.

    நல்ல வேளையாக 
    சைவத் திருத்தொண்டை 
    தன் பிறவிப் பயனாக கருதி வாழ்ந்து வந்த பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் 
    சிவ பணிகளை இடைவிடாது மேற்கொண்டிருந்தார்.

    மங்கையர்கரசியார் செய்து வந்த திருத்தொண்டுகளால் குதூகலித்த குலச்சிறையார் 
    அரசமாதேவிக்கு
    மெய்த் தொண்டராய் துணை நின்றார். 

    'பயிரை வளர்த்தால் 
    மட்டும் போதாது 
    பயிரை அழிக்க முயலும் கோரைப்புல் போன்ற களைகளைக் களைந்தெறிய வேண்டும்' என்பது குலச்சிறையாரின் கருத்தாய் இருந்தது.

    'ஆண்டவனுக்குச் செய்வது ஆராதனை.
    அடியவருக்குச்
    செய்யும் வழிபாடு சமராதனை.

    'சம' என்பதற்கு 'நல்ல' என்று பொருள்.
    அடியவருக்குச் செய்யும் வழிபாடு 
    செய்தாலே போதும். 
    விரைந்து 
    முக்தி  கிடைத்து விடும்' 
    என்பது
    மங்கையர்க்கரசியாரின் செயல்பாடாய் இருந்தது. 

    அது உண்மைதான்.

    பட்டினத்தார் 
    நேரே இறைவனை வழிபட்டார்.
    பத்ரகிரியாரோ
    பட்டினத்தாரை 
    வழிபட்டார்.

    பட்டினத்தாருக்கு முன்னரே 
    பத்திரகிரியார் 
    முத்தி பெற்றார் 
    என்பது தானே
    முக்தி இரகசியம் ?

    இதனை உணர்ந்து பட்டத்தரசியாரும் குலச்சிறையாரும் எவ்வளவோ 
    திருத்தொண்டுகள் புரிந்தும் 
    சைவம் அருகி
    சமணம் பெருகி வந்தது.

    காரணம் 
    மன்னனின் விருப்பமே மக்கள் விருப்பமாக மலர்ந்தது.
    இதில் 
    சமணர்களின் சூதும் கலந்திருந்தது.

    இந்த சமயத்தில் 
    பாண்டிய நாட்டிற்கு அருகே உள்ள திருமறைக்காட்டில் திருஞானசம்பந்தர் தங்கியிருப்பதாகத் 
    தகவல் வந்தது.

    அரசி 
    மங்கையர்க்கரசியாருக்கும் 
    முதல்வர் குலச்சிறையாருக்கும் 
    ஏக மகிழ்ச்சி.

    (குலச்சிறை நாயனார் புராணம் தொடரும் )