Tag: Ko Poojai

  • pithru dhosham neekum ko poojai

    பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.  பசுவை பூஜித்தால் பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.

    பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ),   பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும். பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும். 

    பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும்.  பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள். மா " என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.

    பசு வசிக்கும் இடத்தில் , அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ , தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும். மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு , எமன் , எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.

    ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை ( மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது. 
     

  • Mahalakshmi ko poojai

    செவ்வாயன்று கோ பூஜை செய்தால் சுப காரியங்கள் வீடு தேடி வரும். பவுர்ணமி தினத்தன்று கோ பூஜை செய்தால் மகாலட்சுமி நம் வீட்டில் நித்தியவாசம் புரிவாள் என்று புராணங்கள் கூறுகின்றன.

    மகாலட்சுமிக்குரிய பூர நட்சத்திர நாளில் கோபூஜை செய்வதால் கணவன்-மனைவிக்கு இடையே அன்னியோன்யம் பெருகி அன்பின் அஸ்திவாரம் பலப்படும். பல்வேறு பலன்களை அள்ளித் தருகிற, அற்புத சக்தி வாய்ந்த மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவர், அவரது பாவங்கள் நீங்கி நற்கதி அடைய பசு தானம் செய்வதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்திருந்தனர்.

    பித்ருபூஜை செய்யும் போது பசு தானம் கொடுப்பது மிகுந்த நன்மை தரும். ஒரு பெண் ருதுவானதும் தோஷங்கள் நீங்க பசுக்களை தானம் செய்யலாம். கோவில்களில் விளக்கேற்ற பசுக்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தானம் செய்வதை ஆதி தமிழர் கள் வழக்கத்தில் வைத்திருந்தனர்.

    பசு தானம் அடிக்கடி செய்வது வம்ச விருத்தியை உறுதி செய்யும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பசுவையும் கன்றையும் யார் ஒருவர் நன்கு பராமரிப்பு செய்கிறாரோ, அவரது இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி உண்டாகும். கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்தால் பரிகாரம் உண்டாகும்.

    பசுவுக்கு ஒரு தடவை அகத்தி கீரை கொடுத்தாலே, பிறவி பாவம் விலகும் என்பது ஐதீகம். நம் வீட்டில் பசு வளர்க்க வாய்ப்பு இல்லை யெனில் பசு வைத்திருப் பவர்களுக்கு நாமாக உதவ வேண்டும். பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். 

  • Ko poojai slogam

    பிரம்மன் தனது  சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவை படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள். இதில் கங்கையும் மகாலட்சுமி இருவரும் தாமதமாக வந்தார்கள். இதனால்  மஹாலட்சுமிக்கும் கங்கைக்கும் பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை என்கிறது தேவிபாகவதம்.

    கோமாதாவின் உடலில் இடம்பெற லட்சுமியும் கங்கையும் பசுவை மிகவும் வேண்டினார்கள். எங்கேயாவது இருக்க ஓர் இடம் கொடுத்தால் போதும் என்று கெஞ்சினார்கள். இவர்களின் கெஞ்சுதலைப் பார்த்த கோமாதா, உங்கள் இருவர் மீதும் எனக்கு அனுதாபம் இருக்கிறது. ஆனால் இடமே இல்லையே, ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள், என் உடலிலிருந்து வரும் சாணம், கோமூத்ரம் இரண்டும் யாருக்கும் சொந்தமாகவில்லை. நீங்கள் விரும்பினால் அதில் இருக்கலாம் என்று சொல்ல லட்சுமியும் கங்கையும் மிகுந்த சந்தோஷத்துடன் அந்த இடத்தில் வாஸம் செய்ய ஆரம்பித்தார்கள்.

     அதனால் இன்றைக்கும் பசுவின் பின் புறத்தில் லட்சுமியும், கங்கையும் இருப்பதாக சாஸ்திரம். அதனால் பசுவின் சாணமும், கோமூத்ரமும் சகல பாபங்களையும் போக்கி லட்சுமி கடாட்சம் அளிக்கக் கூடியது என்கிறது நமது தர்ம சாஸ்திரம்.

    கோவை லட்சுமியாக பாவித்து வேதோக்த்த ஸ்ரீஸுக்தத்தினால் ஓம் ஸுரப்யை நம: என்னும் மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து, தூபதீப நைவேத்யம் முதலானவைகளுடன் ஸ்ரீகிருஷ்ணன் பூஜை செய்ய மற்றும் பிரும்ம தேவன் சரஸ்வதியுடனும் இந்திரன் இந்திராணியுடனும் பூஜை செய்தார்கள். கீழே காணும் ஸ்லோகத்தை மனத்தூய்மையுடன் அன்னை கோமாதவை  நெஞ்சில் நிறுத்தி கோ பூஜை செய்ய சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம

    கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே

    நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம

    நம: கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம

    கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்

    ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம

    சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம

    யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம

    இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி

    யுக்தச்ச ய: படேத்

    ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான்

    புத்ர வான் பவேத்!
     

  • Ko Poojai Special

    தேவர்கள் முனிவர்கள் புண்ணிய நதிகள் சமுத்திரங்கள் பசுவின் உடலில் இருப்பதால் பசுவை வலம் வந்து வணங்கினால் பூமியை வளம் வந்து வணங்கிய பலன் ஏற்படும். பசுவின் பிருஷ்ட பாகத்தில் லட்சுமி வாசம் செய்வதால் பெருமாள் கோவிலில் விஸ்வரூப தரிசனத்தின் போது பெருமாளின் சந்நிதியை நோக்கி பசுவின் பிருஷ்டபாகம் இருக்கும் படி செய்து பகவானும் மகாலக்ஷ்மியை பார்த்துக் கொள்வது போல செய்கிறார்கள்.

    கோ பிராமனேப்ய சுபமஸ்து நித்யம்லோகா சமஸ்தா சுக்னோ பவந்து”
    என்ற ஸ்லோகத்தின் படி பசுவை அதி காலையில் பார்ப்பதும் வணங்குவதும் புண்ணியமாகும். பசுவிற்கு உணவளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. கோபூஜை செய்வதால் பணக் கஷ்டம் நீங்கும். சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றின்போது, பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் சேரும்.

    காமதேனு பசு, மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர்.

    பசுவை வழிபட்டால், பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும். வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும்.  பசுவுக்கு அகத்திக்கீரை வாழைப்பழம் கொடுக்கலாம். பசு தானம் வாங்குபவர்கள், லட்சம் தடவை காயத்ரி மந்திரம் சொன்ன பலன் கிடைக்கும் கடன் சுமை குறையும்.

    பசுவை பூஜை செய்வதால் நமக்குப்பேறுகளும் திருமகள் பார்வையும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமையில் செய்தால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது.

  • Ko Poojai Nanmaigal

    அனைத்துவித தெய்வங்களையும் வழிபட்ட பலனை பசுவுக்கு செய்யும் ஆராதனையால் அடையலாம் என்கிறன வேத புராணங்கள். கோடி கோடி யாகங்கள் செய்த பலனும், கோடானு கோடி வருடங்கள் தவம் செய்த புண்ணியமும் ஒரே ஒரு முறை பசுவை வழிப்பட்டாலே கிடைத்து விடும்.

    மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் அஷ்ட வசுக்களும், நவகிரங்களும், தச நாகங்களும், அஷ்டதிக்கு பாலர்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றனர்.

    எனவே, பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் பசுவை நீராட்டி முகத்திலும் பின்புறமும் மஞ்சள் பூசி குங்குமப் பொட்டுக்கள் வைத்து கற்பூர ஆரத்தி காட்டி பசுவை வலம் வந்து மும்முறை கோவந்தனம் செய்ய வேண்டும். பசுவிற்கு கொஞ்சம் வெல்லம் கலந்த அரிசி மற்றும் அகத்திக்கீரை அளித்திடல் வேண்டும்.

    கீழ்க்காணும் சுலோகத்தைச் சொல்லி வணங்குவது சிறப்புடையது.

    “சர்வதாமதுகே- தேவி

    சர்வதீர்த்தா பிஷேபினி

    பாவனே ஸுரபிஸ்ரேஸ்டே

    தேவி-துய்யம்-நமோஸ்துதே”.
     

  • Ko Poojai Special

     பசுவின் உடல் முழுவதும் தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தேவர்கள் வசிக்கின்றனர். அதனால் தான் பசுவை வலம் வந்து வணங்கினால் முப்பது முக்கோடி தேவர்களை வணங்கின புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் சான்றோர்கள்.

    பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக  ஐதீகம்.எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவை முன்புறமாக தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும்.

    கோ பூஜை செய்யும் போதும், பசுவின் முன்நெற்றி மற்றும் வால்பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமிஅம்சமாகும். அதிகாலையில் பசுஞ்சாணத்தை கொண்டு வீட்டு வாசலை மெழுகி ,கோலம் இட்டால் , மகாலட்சுமி நம் வீடு தேடி வருவாள் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது.

    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகிய ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன என்று புராணங்கள் கூறுகிறது. பசுவின் கோமயம் எனப்படுகின்ற சாணம்,கோமியம் எனப்படுகிற மூத்திரம்,  பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றைக் கொண்டு சிவபெருமானுக்கு செய்யப்படுகிற  பஞ்சகவ்ய அபிஷேகம்  மிகவும் விசேஷமானது. திருமகள் வாசம் செய்யும் இதன் பின்பாகத்தை  தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.

    கோபூஜையை செய்வதால் சகல சம்பத்துக்களும், முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்பதால் கோமாதாவை வணங்கி பதினாறு செல்வத்தைப் பெற்று சிறப்புடன் வாழ்வோம்.