Tag: Kannappa

  • Kannappa Nayanar Part2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    மறுநாள் காலை
    சூரியன் உதிக்கும் நேரம்
    இறையனாருக்கு 
    இரை தேடப் புறப்பட்டார்
    திண்ணனார் –
    தனக்காக அல்ல 
    தன்னை வசப்படுத்தியிருந்த இறைக்காக.

    சிறிது நேரத்தில் 
    பல்லாண்டு கால 
    வழக்கப்படி
    சிவகோசரியார்
    என்ற பழுத்த அந்தணர்
    சிவனாரைப் 
    பூசிக்க வந்தார்.

    ஆகம விதிப்படி அர்ச்சனை செய்யும் பழக்கமுடைய அந்தணர் தரையில் கிடந்த 
    மாமிசத் துண்டுகளைக் கண்டு மனம் பதறினார்.

    யாரோ 
    ஒரு வன வேடுவன் செய்த பலி, பாவச்செயல் 
    என சாபம் தந்தார்.

    நடுங்கியபடியே மாமிசங்களை 
    ஓரம் தள்ளி விட்டு… அருகில் இருக்கும் 
    ஓர் அருவி சென்று குளித்துவிட்டு 
    தன் வாயைத் துணியால் கட்டிக்கொண்டு 
    வண்ணப் பூக்கள் பறித்து
    வாசனைத்திரவியங்கள்
    சகிதம் வந்து 
    பசும் நெய் பூசி 
    மலர்ச்சூடி 
    வில்வ இலை தூவி
    அபிஷேகம் செய்து  
    லிங்கேஸ்வரருக்குத்
    தூய ஆடைகட்டி 
    பூஜை செய்தார் அப்புண்ணியவான்.

    அவர் கிளம்பிய 
    சில நாழிகைகள் கழித்து திண்ணனார் 
    வந்து சேர்ந்தார்.

    முதல் நாள் போலவே செருப்புக் காலால் நாதர்முடி மேலிருந்த மலர்களைத் தள்ளி
    வாயில் நிரப்பி வந்த திருமஞ்சன  நீரால் அபிஷேகம் செய்து
    ஊனமுது படைத்தார்.

    "ஐயனே…! 
    நானே பக்குவமாய் 
    தீயிட்டுச் சமைத்தேன்.
    தேனிட்டுச் சுவைத்தேன்.

    நேற்றதை விட 
    இன்றைய மாமிசம் 
    ருசியாய் இருக்கும்.
    உனக்கும் பிடிக்கும்…சாப்பிடு. "

    மனம் உருகிச் சொன்னார் தன்னை மறந்த திண்ணனார்.

    கதிரவன் மறைந்து 
    இரவு வரவே 
    அன்றிரவும்
    காவல் காத்தார் 
    ஒரு நொடி கூட 
    இமை மூடாது.

    இப்படியே சென்றன 
    ஐந்து நாட்கள்.

    இதற்கிடையில் 
    ஒரு நாள் 
    நாணன், காடன் 
    கூற்றை ஏற்று 
    தந்தை நாகன் வந்தான் ஒரே வாரிசான திண்ணனாரிடம்.

    கெஞ்சினான்.
    கொஞ்சினான்.
    ஆனால் 
    கொஞ்சமும் மசியவில்லை 
    மந்திரித்து விட்டவர் போலிருந்த திண்ணனார்.

    வேறு வழியின்றி கண்ணீரோடு விடைபெற்றான்
    தந்தை நாகன்.

    தினமும் நடக்கும் அசிங்கங்களையும் அலங்கோலங்களையும்
    ஐந்து நாட்களுக்கு மேல் 
    சிவகோசரியாரால் பொறுக்க முடியவில்லை.
    அழுது புரண்டு ஆண்டவரிடம் 
    புலம்பித் தீர்த்தார்.

    "தயாநிதியே…!
    உன்னருகே அசிங்கங்களைக் காணுமாறு 
    என்னை ஏன் படைத்தாய்?

    அப்படி என்ன பாவம் 
    நான் செய்துவிட்டேன்?

    புழுத்த நாயினும் கடையனாகிப் போனேனோ ?"

    வீடு திரும்பி
    பிதற்றிய
    வண்ணம் இருந்தார்.

    கருணாமூர்த்தி 
    அன்றிரவு அவர்
    கனவிலே தோன்றினார்.

    "சிவகோசரியாரே…!
    என் மனதில் என்றும் நிலைத்து இருப்பவரே !!

    இது என் 
    விளையாட்டு தான்.

    கவலை கொள்ளாதீர்.

    நாளை காலை 
    உன் பூசை புனஸ்காரங்களை முடித்துவிட்டு மறைந்திருந்து 
    நடப்பதைக் கவனி.

    உன் கேள்விகள் அனைத்துக்கும் 
    விடை கிடைக்கும்.

    அதற்கு முன் சில வார்த்தைகள்.

    ஊன் உணவு 
    படைப்பவனை 
    வெறும் வேடுவன் என்று நினைத்து இகழாதே.

    அவன் படையல் 
    உன் ஆகமப் படையலை 
    விட உயர்ந்தது.

    அவன் உருவம் 
    என் உருவே. 

    அவன் அன்பு
    என் மீதான அன்பே.
    என் அன்பே.

    அவன் அறிவு 
    என்னை அறியும் அறிவே.

    அவன் பூஜிக்கும் பூக்கள் தேவர்கள் வைத்து வணங்கும் மலர்களை 
    விட உயர்ந்தவை.

    அவனது மெய்யன்பு பேரன்பு.
    இதுவரை நான் கூட அனுபவித்திராதது.

    நாளை சந்திப்போம். மறைந்திருந்து கவனி. அவனது மெய்யன்பின் பேரணியை."

    காளத்தியார் 
    கண்கள் போராளியூட்ட விடைபெற்றார்.

    மறுநாள் 
    ஆறாம் நாள் காலை.

    ஆவலோடு வந்தார்
    சிவகோசரியார்.

    மலையரசனுக்கு அபிஷேகம் செய்துவிட்டு மறைவிலிருந்து காத்திருந்தார் சிவக்கொழுந்தர்.

    அன்று 
    வேட்டையாடப் போன
    திண்ணனாருக்கு 
    மலைச் சாரலில்
    சில இடங்களில் 
    உதிரம் கொட்டிக் கிடக்க 
    அவை கெட்ட சகுனங்களாக 
    மனதைக் குழப்பின.

    'தீது தனக்கா ?
    தனையாளும் இறைவனுக்கா ?'
    எனப் புரியாது கலக்கமுற்ற திண்ணனார் 'இறைவனுக்கு என்றால் என்னாவது?' என அஞ்சி விரைந்தோடி வந்தார் உச்சி மலையில் அருள்பாலித்துக் கொண்டிருந்த 
    குடுமித் தேவரிடம்.

    விரைந்து வந்த திண்ணனார் 
    லிங்க பகவானைச்
    சுற்றிச் சுற்றி வந்தார்.

    பழுது ஏதும்
    ஏற்பட்டுள்ளதா என பலமுறை 
    உற்றுப் பார்த்தார்.

    ஊன்றிக் கவனித்த போது இறைவனின் 
    வலது கண்ணிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்திருந்தது.

    துடிதுடித்துப் போனார் கரடிகளையும் காட்டெருமைகளையும்
    துடிதுடிக்கச் சாகடிக்கும்
    வேடுவர் திண்ணனார்.

    அவர் கண்களில் அலை அலையாய் கண்ணீர்.

    'யார் செய்த தீங்கு இது?' 

    சுற்றிச் சுற்றிப் பார்த்தார். சிறிது தூரம் சென்றும் தேடித் தேடிப் பார்த்தார்.

    யோசனை வந்தவராய் மேலும் சில தூரம் சென்று தானறிந்த மூலிகைகளை கசக்கிய வண்ணம் 
    இறை அருகே ஓடிவந்து மருத்துவம் பார்த்தார்.

    இரத்தம் தொடர்ந்து வழிந்துகொண்டிருந்தது. மூலிகைச் சாறும் பலனளிக்காது
    குருதி அதிகமானது.

    அதுபோது இளம்பிராயத்தில் கற்பித்தவர் சொன்ன சொலவடையான 
    'ஊனுக்கு ஊன் உற்ற நோய் தீர்க்கும்'
    என்பது 
    நினைவுக்கு வந்தது.

    உடனே அம்பு எடுத்தார்.

    தனது வலக் கண்னை தோண்டி எடுத்து 
    கைகள் நடுங்கியபடி இறைவனின் 
    குருதி பொங்கிய
    வலது கண்ணில் பொருத்தினார்.

    என்ன ஆச்சரியம்!

    அப்படியே பொருந்தியது அவர் கண்ணும் இறையின் கண்ணும் ஒன்று என்பதுபோல்.

    நிம்மதி பெருமூச்சு விட்டவர் தன் 
    கண், ரத்தம், வலி உணர்ந்தாரில்லை.

    இறைவனின் 
    வலது கண்ணிலிருந்து வந்துகொண்டிருந்த 
    இரத்தப் பெருக்கு நின்றது.

    திண்ணனாரும் 
    மறைவில் இருந்த சிவகோசரியாரும் மகிழ்ந்தபடி வணங்கியிருந்த நொடிகளில்….

    இறைவனின் 
    இடது கண்ணிலிருந்து இரத்தம் பீறிடத் துவங்கியது.

    இப்போதும் 
    திண்ணனார் யோசிக்கவில்லை.
    தனது இடது கண்ணை பெயர்த்தெடுக்க முற்பட்டார்.

    அப்போது அவருள் 
    ஒரு கேள்வி எழுந்தது.

    ஏற்கனவே 
    வலது கண் 
    பார்வை இழந்த நிலையில் 
    இடது கண்ணையும் எடுத்துவிட்டால் இறையுடன் 
    பொருத்த வேண்டிய 
    இடம் தெரியாதே!
    என்ன செய்வது?

    யோசித்த 
    அதே கணத்தில் 
    பதிலும் கிடைத்தது.

    தனது 
    ஒரு காலைத் தூக்கி 
    இறையின் 
    இடது கண்ணில் 
    கால் விரலை
    ஒற்றி வைத்துக் கொண்டார். 

    கால் விரல் இருக்கும் இடத்தில் 
    தன் கண்ணைப் பொருத்தி விடலாம் 
    எனக் கருதி 
    அகமகிழ்ந்து 
    இடது கண்ணை 
    பெயர்த்தெடுக்கப் போனார்.

    இறைவனுக்கே 
    அது பொறுக்கவில்லை.

    "நில்லு கண்ணப்ப!
    நில்லு கண்ணப்ப!!
    என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப!!!"
    என்று மூன்று முறை அன்பொழுக அழைத்து
    தடுத்து நிறுத்தினார் 
    காளத்தியப்பர்.

    உடன்
    திண்ணனாரை ஆட்கொண்டு 
    'என் வலப்பக்கம் 
    எப்போதும் இரு' என ஆசீர்வதித்து 
    வாரி எடுத்து 
    இறுகணைத்துக் கொண்டார் உலகாளும் திருக்காளத்தி நாயகன்.

    இறைவனே 
    மூன்றுமுறை அழைத்ததாலேயே திண்ணப்பர் 
    கண்ணப்பர் ஆனார்.

    சிவகோசரியார் 
    'கருணைப் பெருங்கடலே..
    பேரன்பின் பெரு ஊற்றே' என்று இறையோடு கலந்த கண்ணப்பரையும்
    நினைவு தெரிந்த நாளிலிருந்து நொடிதோறும் தொழும் காளத்தியாரையும் 
    ஒரு சேர வணங்க இருவரும் வானேகினர்
    வானவர் பூமழை பொழிய,

    முக்கண்ணருக்கே 
    இடது கண் கொடுத்த
    இரு கண்களையும் 
    தர விருந்த 
    கண்ணப்ப நாயனாரை காலமெல்லாம் 
    உலகம் மாந்தரும் 
    உலவும் ஞானியரும் தொழும் ரகசியம் இதுவே.

    கண்ணப்ப நாயனார் மூலம் 
    இறை விடுக்கும் 
    ஆன்மிக அறிவிப்புகள் கூர்ந்து 
    கவனிக்கத்தக்கன.

    அகம்பாவம் என்னும் தப்பியோடிய காட்டு பன்றியைக் 
    கொன்றதன் மூலம் 
    அகம்பாவம் அழித்தார் கண்ணப்ப நாயனார்.
    அதனால் உயர்ந்த பக்தி உற்பத்தியானது 
    அடுத்த நிகழ்வு.

    உடன் வந்த 
    நாணனையும் காடனையும் 
    நன்றும் தீதும் 
    எனக் கொள்ளலாம்.

    தீது எனும் காடன் காட்டுப்பன்றியை அவித்ததோடு 
    ஆற்றோடு 
    பின்தங்கிப் போனான்.

    நன்று என்னும் 
    நாணன் 
    இறைவனின் பெருமையை எடுத்துரைக்க முடிந்ததே தவிர 
    அவனால் துந்துபி ஓசையைக்
    கேட்க முடியவில்லை. இடையிலேயே விடைபெற்றது 
    யோசிக்கத் தக்கது.

    சாதகரான 
    கண்ணப்பர் மட்டுமே இறை அழைக்கும் 
    பேறு பெற்றார்.
    என்றும் இறையின்
    வலப்பக்கம் இருக்கும் 
    பெரும் பேறு பெற்றார்.

    கண்ணப்ப நாயனாரின் அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த பக்திக்கு முன்னர் 
    ஆன்மிகம் செறிந்த சிவகோசரியாரின்
    வெறும் சடங்குகள் 
    அடுத்த நிலைக்கே சென்றது.

    உண்மை பத்தி 
    சடங்குகளைக் காட்டிலும் உயர்ந்தது என்பதே இறை 
    உணர்த்தும் உண்மை.

    ஆகம நெறியிலும் 
    அன்பு நெறியே சிறந்தது.

    கண்ணப்பரின் பக்தி 
    மூட பக்தி அல்ல. 
    அது அன்பின் ஊற்று.

    இறைவன் 
    காட்சியளித்த போது 
    கண்ணப்பர் 
    இறைவன் முன்பு நின்றிருந்தார்.
    சிவகோசரியாரோ மறைவாக 
    மரத்தின் பின் தான் நின்றிருந்தார்.

    இறைவன் 
    எத்தனை காலம் தன்னைத் தொழுதான் எனக் கணக்குப் பார்ப்பதில்லை.
    ஆறே நாளில் கண்ணப்பரை அரவணைத்தது கண்கூடு.

    தத்துவப் படிகளைத் தாண்டி 
    சிவ தத்துவத்தை சென்றடைந்த
    கண்ணப்பரின் 
    ஊனமுதை இறைவன் வெறுக்கவில்லை.

    இது கண்ணப்பரின் சரணாகதி 
    தத்துவத்தின் வெற்றி.

    இவையால் தான்
    கண்ணப்பரின் புகழ் பாடாத ஆன்றோரோ சான்றோரோ இல்லை.

    'நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்' எனப் பாடுகிறார் பட்டினத்தார்.

    'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' 
    என்று முக்கண்ணரிடம் வாதப் போர் புரிந்த நக்கீரத் தேவர் 'திருக்கண்ணப்ப தேவர் மறம்' என்ற நூல் அருளியிருக்கிறார்.

    சமயக் குரவர் நால்வரும் அருணகிரியாரும் ஆதிசங்கரரும் தாயுமானவரும் 
    கண்ணப்பரின் மெய்யன்பைப் போற்றி வணங்குகின்றனர்.

    'கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்'என்பது சுந்தரரின் திருவாக்கு.

    திருச்சிற்றம்பலம்.

    (கண்ணப்பர் நாயனார் புராணம்- முடிவுற்றது)

  • Kannappa nayanar part 1

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    நாயன்மார்களில் வித்தியாசமானவர் கண்ணப்ப நாயனார்.

    காலத்தால் மிகவும் முற்பட்டவர் 
    கண்ணப்ப நாயனார்.
    அதனால்தான் அவரது இறையன்பை 
    மெச்சி வணங்கி நாயன்மார்களும் சித்தர்களில் பட்டினத்தாரும் ஆதிசங்கரரும் 
    புகழ்ந்து பாடியுள்ளனர்.

    அந்நாளைய 
    பொருப்பி நாட்டில்
    உடுப்பூரைத் தலைநகராகக் கொண்டு வேடுவ மக்களை ஆண்டு வந்தான் நாகன் என்பான்.

    வேடுவர் குலம் 
    என்பதால் வேட்டையாடுதல் 
    பிரதான தொழில்.

    ஒரு சிறு நாடு.
    ஒட்டி ஓர் அடர் காடு. அடுத்து ஓர் உயர்ந்த மலை.
    இடையில் ஓர் ஆறு.

    இவைதான் 
    அவர்கள் வாழ்விடம்.  வாழ்வாதாரப் பிழைப்பிடம்.

    மரபுப்படி 
    வேட்டையும் 
    மாமிசமும் 
    கள்ளுமுமாய்
    வாழ்வைக் கொண்டிருந்த 
    வேடுவர் குல அரசன் நாகனின் நாயகியின் பெயர் தத்தை.

    வீரமும் தீரமும் திடகாத்திரமும்
    கொண்டிருந்த இருவருக்கும் ஏனோ
    பல்லாண்டு கால தாம்பத்தியத்தில் 
    பிள்ளை வாய்க்கவில்லை.

    பாராத மருத்துவம் இல்லை. 
    கேளாத
    மூத்தோர் இல்லை.

    ஏதேதோ செய்து பார்த்தும் பலன் கிட்டாததால் எல்லாம் செய்ய வல்ல மலைக் கடவுளான 
    முருகப் பெருமானை வேண்டி நின்றார் முருக பக்தர்கள் இருவரும்.

    கேட்காமலேயே அருளவல்ல 
    குறிஞ்சி நில 
    முருகப் பெருமான் நாகனுக்கும் தத்தைக்கும் பலகால வேண்டுதலுக்குச் செவி மடுத்து பிள்ளைப்பேறு அளித்தார்.

    யானை ஒத்த 
    கரிய நிறத்தில் 
    யாரையும் கவரும் 
    அழகில் ஆண்பிள்ளை.

    தாய் தத்தை முதன்முதலாக குழந்தையைத் 
    தூக்கிய போது
    'திண்' என்று இருந்ததால் 'திண்ணனார்' எனப் பெயரிட்டார் பெற்றோர்.

    திண்ணனார் 
    உரிய பருவத்தில் 
    வில் பயிற்சி முதற்கொண்டு வேட்டையாடும் 
    பயிற்சி அனைத்தும் கசடறப் பயின்றார்.

    காலம் நகர்ந்தது.
    நாகன் நடை தளர்ந்தான். மகன் திண்ணனார் அடுத்த தலைவராகத் தயாராக இருந்தார்.

    ஊர் ஜனங்கள் 
    ஒருநாள் கூடி 
    நாகனிடம் ஒரு வேண்டுதல் வைத்தனர்.

    "வேடுவர் குல அரசரே…!
    எங்கள் நாகரே…!

    நீண்ட காலமாக 
    நம் வேடுவப் படை வேட்டையாடச் 
    செல்லாமல் இருந்ததால் மலைச்சாரலில் விளையும் பயிர்களையும் உயிர்களையும் காட்டுவிலங்குகள் 
    துவம்சம் செய்து விடுகின்றன.

    இனியும் 
    தாமதிக்காமல் வேட்டையாடிட வேண்டும்." 

    தளர்ந்திருந்த நாகன் மலர்ந்த முகத்தோடு  'மகன் திண்ணனாரே
    இனி உங்கள் தலைவர்' என முடிசூட்டினான் மாபெரும் விழா எடுத்து.

    மறுநாளே 
    திண்ணனாரின் தலைமையில் வேட்டுவர்களும் 
    வேட்டை நாய்களும் கொலைக் கருவிகளோடு திண்ணனாரின் 
    கன்னி வேட்டையை மின்னல் வேகத்தில் தொடங்கினர்.

    திண்ணனாருக்குத் துணையாக 
    கண்துஞ்சா 'நாணன்'
    காடு அஞ்சா 'காடன்'
    என்ற 
    இரு வீர வேடுவர்கள்
    உடன் வந்தனர்.

    திண்ணனாரின் 
    வில் திறன் 
    வேடுவரை மட்டுமல்ல வேட்டை நாய்களையும் வன விலங்குகளையும் வியக்க வைத்தது.

    காட்டுப் பன்றி 
    மான், கரடி 
    காட்டெருமை 
    யானை, புலியென 
    காட்டு விலங்குகள் திண்ணனாரின் வில்லுக்குத் 
    தப்ப முடியாமல் 
    தரையில் சாய்ந்து மாண்டன.

    குல தர்மப்படி திண்ணனாரின் வில்லம்பு 
    குட்டி விலங்குகளையோ பெண் விலங்கினங்களையோ கர்ப்பமுற்ற விலங்குகளையோ 
    பதம் பார்க்கவில்லை.

    ஓரிடத்தில் வேடுவர் விரித்த வலையில் தப்பித்தக் காட்டுப்பன்றி காடதிரும் உறுமலோடு 
    புயல் வேகத்தில் 
    மலை நோக்கிப் 
    பாய்ந்தோடியது.

    திண்ணனார் 
    கண்களில் 
    சட்டெனப் பட்டது 
    அந்தக் காட்டுப் பன்றி.

    துரத்தினார்.
    வேகமாகத் துரத்தினார். அதிவேகமாகத் துரத்தினார்.
    நாணனும் காடனும் 
    களைப்புறும் அளவிற்கு துரத்தி ஓடினர் மூவரும்.

    கடைசியில் 
    மலைக்கும் காட்டுக்கும் இடையில் 
    இரு தேக்கு மரத்திற்கு இடையில் 
    மாட்டிய காட்டுப்பன்றியை வெட்டி வீழ்த்தினார் திண்ணனார்.

    நாணனும் காடனும் 
    எடுத்த தாகத்திற்கு தண்ணீர் குடித்துவிட்டு எடுக்கும் பசிக்கு பன்றியைக் கறியாக்கி உண்டுவிட்டு 
    வேட்டை தொடரலாம் 
    என வேண்டினர்.

    "தண்ணீருக்கு எங்கே செல்வது?" என்று திண்ணனார் கேட்க
    அருகில் 
    அரை காத தூரத்தில்
    பொன்முகலி ஆறு 
    என்று ஒன்றிருப்பதாகச்  சொன்னான் அனுபவசாலியான நாணன்.

    இருவரையும் 
    பன்றியைத் தூக்கி 
    வரச் சொல்லிவிட்டு ஆற்றை நோக்கி நடந்தார் கொஞ்சம் கூட களைப்படையா திண்ணனார்.

    ஆற்றங்கரையில் 
    நீர் அருந்தும் போது திண்ணனாரின் கண்களை ஈர்த்தது மிக அருகில் இருந்த பேரழகு கொண்ட மாமலை.

    "இது என்ன மலை?"
    என்று கேட்டார்.

    "இதுதான் 
    காளஹஸ்தி மலை.

    மலை உச்சியில் குடுமியுடன் கூடிய இறைவன் இருக்கிறார். அவரைக் 'குடுமித் தேவர்' என்பார்கள்" 
    என்றான் நாணன்.

    திண்ணனாருக்கு அப்போதெல்லாம் இறைவனைப் பற்றியோ இறைவழிபாட்டைப் பற்றியோ 
    ஏதும் தெரியாது.

    அவருக்குத் தெரிந்ததெல்லாம் 'இரை'.. விலங்குகளின் மாமிசம்.

    திண்ணனாரின் கண்களை ஈர்த்த
    காளஹஸ்தி மலை இப்போது அவரது 
    மனத்தை இழுத்தது.

    "நீ பன்றியைப் பதமாய் சமைத்து வை" என்று காடனிடம் சொல்லிவிட்டு நாணனை  இழுத்துக்கொண்டு மலையை 
    நோக்கி நடந்தார் 
    மலை போன்ற மார்பு கொண்ட திண்ணனார்.

    மலை அடிவாரம் வரை திண்ணனார்  
    விரைந்து நடந்தார்.
    அப்படி ஈர்த்தது 
    அந்த மலை.

    மலை ஏறத் 
    தொடங்கிய நொடியிலேயே திண்ணனாரின் மனநிலை 
    அறிவுநிலை 
    ஆற்றல் நிலை 
    அடியோடு மாறத் தொடங்கியது.

    வேடனாக வந்து 
    குறப் பெண்ணை மணமுடித்த 
    வேலவனின் கருணையால் அவதரித்த வேடுவன் அல்லவா?

    எப்போதும் 
    வேடன் கோலம் பூண்டிருக்கும்
    திண்ணப்பர் அல்லவா ?

    முன் எப்போதும் சந்தித்திராத
    ஓர் ஏகாந்த அலை
    அவருள் பாய்ந்தது.
    அவ்வலையினால் 
    ஏற்பட்ட அதிர்வுகள் அவரை ஆட்கொண்டன.

    முற்பிறவிப் பயனோ என்னவோ 
    இதுவரை பெற்றிராத குதூகலத்துடன் 
    மன அமைதியுடன் 
    மலை ஏறினார் 
    குடுமிச் சாமியைத் தரிசிக்க.

    ஓரிடத்தில் 
    தோள்களில் இருந்த சுமைகளும் 
    இன்னொரு கட்டத்தில் மனதில் இருந்த பாரங்களும் 
    குறைந்த மாதிரி உள்ளுணர்வு உண்டானது.

    ஓர் இடத்தை கடக்கும் போது ஐந்து துந்துபிகளின் ஓசை 
    கடல் அலைபோல் அவருக்குக் கேட்டது.

    அதுவரை உடுக்கை பம்பை, சிறுபறை ஓசைகளை மட்டும் கேட்டிருந்த திண்ணனார்
    "இது என்ன ஓசை?"
    என்று நாதனிடம் 
    கேட்டார் ஆர்வத்துடன்.

    அது இறை அழைப்பு 
    என அறியாத நாணன் எந்த ஓசையும் அவனுக்குக் கேட்காததால் 'மலைத்தேன் வண்டுகளின் சத்தம்' எனக் கூறி சமாளித்தான்.

    ஒருவழியாக 
    குடுமித் தேவரின் இருப்பிடத்தை அடைந்தனர் இருவரும்.

    சிவலிங்கமாகக் காட்சியளித்த 
    குடுமித் தேவரைப்
    பார்த்த மாத்திரத்தில் திண்ணனார்
    தடுமாறிப் போனார்.
    உயர்ந்த அன்பின் அதிர்வலைகள் அவரைத் திக்குமுக்காட வைத்தன.

    சிவலிங்கத்தின்
    அருகில் ஓடினார்.
    ஆரத் தழுவினார். முத்தமிட்டார். 
    அக மேகம் குளிர
    கண்ணீர் பொழிந்தார்.

    இறைவனை விட்டு 
    ஒரு கணமும்
    பிரியாதிருக்கும் 
    மனநிலைக்கு 
    மறுகணமே வந்துவிட்டார்.

    'ஐயோ…
    யார் துணையுமின்றி தனியாக இருக்கிறாரே..!  காட்டு விலங்குகள் இரவில் வந்து 
    துன்பம் தராதோ' என்றெல்லாம் அஞ்சினார்.

    சிவலிங்கத்தின் 
    மீதும் சுற்றியும் 
    மலர்கள் தூவப் பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியத்துடன் 
    "யார் செய்த வேலை இது?" என்று வினவினார்.

    "நான் ஒருமுறை 
    உனது தந்தை நாகனுடன் இங்கு வந்தேன்.

    அப்போது ஒரு பிராமணர் லிங்கத்தின் தலையில் 
    நீர் வார்த்து
    இலைகளையும் பூக்களையும் சூடி அர்ச்சித்துக் கும்பிடக் கண்டேன் "என்றான் நாணன்.

    அப்போதுதான் திண்ணனாருக்கு 
    நினைவுக்கு வந்தது
    'இறையனாருக்குப் பசிக்குமே!'

    உண்மையில் 
    தன் பசியை 
    மறந்திருந்தார் 
    திண்ணனார்.
    அந்த அளவிற்கு சிவனாருடன் லயித்திருந்தார்.

    "வா… உணவு எடுத்து வரலாம்"
    நாணனை
    அழைத்துக் கொண்டு அவசர அவசரமாக 
    மலை இறங்கினார்.

    ஆற்றங்கரையில் பக்குவமாய்
    பன்றிக் கறி சமைத்துக் காத்திருந்தான் காடன்.

    ஆங்கிருந்த தேக்குமர இலை பறித்தார்
    திண்ணனார்.

    மாமிசத் துண்டுகளை ஒவ்வொன்றாய் 
    பற்களில் அதுக்கிப்
    பதம் பார்த்து ருசித்து அவற்றைப் 
    பிரித்தெடுத்து 
    இலையில் வைத்தார்.

    தானும் தின்னாமல் தங்களையும் 
    தின்ன விடாமல் முற்றிலும் மாறிவிட்ட
    திண்ணனாரை 
    நாணனும் காடனும் திட்டாத குறைதான்.

    "திண்ணனாரே…! 
    நீங்கள் எங்கள் அரசர். ஊர் திரும்ப வேண்டாமா?"என்று காடன் கேட்டுக் கொண்டிருந்த போதே பதிலேதும் சொல்லாமல் மலை நோக்கி தனித்து நடக்க ஆரம்பித்தார் திண்ணனார்.

    ஒருகையில் 
    பன்றி இறைச்சி.
    மறு கையில் வில் 
    கணை சகிதமாக.

    பின்னர் 
    நாணன் 
    நடந்ததைச் சொல்ல 
    மனம் நொந்த காடன் 
    'தெய்வப் பித்து தலைக்கேறி விட்டது' என்று தலையில் அடித்தபடி நாணனுடன்  ஊருக்குப் புறப்பட்டான்.

    திண்ணனார் 
    தன்னை 
    உடும்புப் பிடியாய்
    பிடித்து விட்ட
    குடுமித் தேவரைத் தரிசிக்க 
    மலை ஏறத் 
    தொடங்கினார்

    ஒவ்வொரு அடியும் சிவனடியை 
    நெருங்கும் அடி என்று அவர் அறிந்தார் இல்லை.

    வழியில் 
    பூத்திருந்த பூக்களையும் துளிர்த்திருந்த இலைகளையும் 
    பறித்து தன் தலையில் 
    செருகிக் கொண்டார்.

    ஒரு சிற்றருவியில் 
    சிதறிக் கொண்டிருந்த நீரைக் கைஏந்தி 
    தன் வாய் நிறைக்க வைத்துக் கொண்டார்.

    சிவலிங்கம் இருக்கும் இடம் வந்ததும் 
    நாணன் சொல்லியிருந்த பிராமணர் செய்த அபிஷேகத்தைத் 
    தனக்குத் 
    தெரிந்த அளவில் 
    செய்ய ஆரம்பித்தார்.

    முதலில் 
    நாதர் முடிமேல் இருந்த பழைய மலர்களை செருப்பணிந்த கால்களால் 
    கீழே தள்ளிவிட்டார்.
    கீழே விழுந்த மலர்களை கால்களால் 
    சற்று தூரம் 
    தள்ளி விட்டார்.

    வாய் நீரை உமிழ்ந்து லிங்கத்தைச் சுத்தப்படுத்தினார்.

    தன் தலையில் 
    செருகி இருந்த மலர்களையும் இலைகளையும் சிவலிங்கம் 
    மேல் வைத்து 
    அழகு பார்த்தார்.

    கடைசியாக 
    தேக்கு மர இலையில் வைத்துக் 
    கொண்டு வந்திருந்த 
    பன்றி மாமிசத்தைப் படையலாக 
    வைத்து நின்றார்.
    அனிச்சையாய் 
    கை கூப்பினார்.

    அப்படியே 
    லிங்க ரூபத்தை 
    ரசித்திருந்தவர் 
    இரவு நேரம் வந்துவிட்டதை உணர்ந்து இறைவன் தனித்திருக்க வேண்டாம் எனக் கருதி விலங்குகள் நெருங்காதிருக்கும் வண்ணம் 
    சற்று தள்ளி நின்று வில்லோடு 
    காவல் காக்க ஆரம்பித்தார்.

    இரவு முழுதும் 
    ஒரு நொடி கூட கண்ணிமைக்காமல் காவல் காத்தார் திண்ணனார்.

    (கண்ணப்ப நாயனார் புராணம் -தொடரும்)