Tag: Gurupeyarchi

  • gurupeyarchi parigaram seiya vendiya rasigl

    நவக்கிரகங்களில் குருபகவானை 'புத்திர காரகன்' என்று ஜோதிட சாஸ்திரம் கூறும், புத்திர உற்பத்திக்குக் காரண கர்த்தா இவரே. குருபகவானின் அனுக்கிரகம் பெற்ற தலங்களில் தரிசனம் செய்து, வழிபட்டால் தடைகள் நீங்கி புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம். குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம். 

    சுப கிரகம் குருபகவான் பிரம்மனின் மானச புத்திரர்களின் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாவுக்கும் பிறந்த ஏழாவது குழந்தை. அறிவிலே மேம்பட்டவர். தேவர்களின் குரு. இந்திரனுக்கு அமைச்சர். குரு பகவானை பிரகஸ்பதி என அழைப்பர். பிரகஸ்பதி என்றால் ஞானத் தலைவன் என்று பொருள். அமைச்சர், ஆசான், வியாழன் என இவருக்கு பல பெயர்கள் உண்டு. நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக் கிரகர். சாத்வீகம் கொண்டவர். மஞ்சள் நிறமானவர் என்பதால், இவரை பொன்னன் என்றும் அழைக்கப்படுகிறார். தயாள குணம் கொண்டவர். வெற்றி தரும் குரு விரதம் குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையை செய்கிறார். 

    அதன்படி ராசி சக்கரத்தை கடக்க பன்னிரெண்டு ஆண்டுகளாகின்றன. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போதுதான் ‘மகா மகம்' நடக்கிறது. குரு பகவான் நீதிமானாக திகழ்கிறார். ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்று நிர்ணயிப்பவர். வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம். நன்மை அடையும் ராசிகள் ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவருக்குப் பெரும் பதவிகள் கிட்டும். குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். 

    குரு பகவான் நாளை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சி மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம், ராசிக்காரர்களுக்கு அதிக பலன்களை தரப்போகிறது. அதேநேரம், ரிஷபம், கடகம், கன்னி,விருச்சிகம், கும்பம் மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தால் பாதிப்புகள் குறையும். 

    அதை வியாழ நோக்கம் என்கின்றனர். குரு பகவான் கோச்சாரத்தில் சுற்றி வரும் போது அவர் ஒரு ராசியை 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்கின்றனர். குரு பார்க்க கோடி நன்மை. மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். இந்த குரு பெயர்ச்சி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நிகழப்போகிறது. குரு அமருவதைப் பொறுத்தும் பார்வையைப் பொறுத்தும் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம், ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களை அடையப்போகிறார்கள். 

     

  • Gurupeyarchi thiruchendur

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களில் சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.  சிவயோகி போல தலையில் ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். 

    இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதலில் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். சண்முகர் சந்நதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருட்டான பகுதியில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சந்நதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சந்நதி இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். திருச்செந்தூரில் முருகன் சந்நதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. 

    முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது, கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப் பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது ஒரு நாள் நள்ளிரவில் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

    ஆதிசங்கரருக்கு ஏற்பட்ட காச நோய் இத்தலத்தில் நீங்கியது. எனவே அவர் சுப்ரமண்ய புஜங்கம் எனும் துதியை இம்முருகனைக் குறித்துப் பாடியுள்ளார். அதில் இத்தலத்தில் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் விபூதியை தரிசித்த மாத்திரத்திலேயே அனைத்து நோய்களும், பில்லி, சூன்யங்களும் பறந்தோடும் எனக் குறிப்பிட்டுள்ளார். தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக் கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, ‘கங்கை பூஜை’ என்கின்றனர். 

    இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப் பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் ஷண்முகர், ஜெயந்திநாதர்,  குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனிச் சந்நதிகள் இருப்பது சிறப்பு.  இவர்களில் குமரவிடங்கரை “மாப்பிள்ளை சுவாமி’’ என்றழைக்கின்றனர்.

    திருச்செந்தூரில் முருகன் ‘ஞானகுரு’வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், குரு தலமாகக் கருதப்படுகிறது. பிராகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கின்றன. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, ஞானஸ்கந்த மூர்த்தி என்று அழைக்கிறார்கள். 

    வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குருப் பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும். தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு சீர் மற்றும் புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.