Tag: Friday

  • Purattasi Friday vazhipadu

    வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர யோகம் வாழ்வில் மிக மிக முக்கியம். சுக்கிர யோகம் வேண்டுமெனில் மகாலக்ஷ்மியை வேண்ட வேண்டும். வெள்ளிக்கிழமையில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். மகாலக்ஷ்மிக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி அல்லது ஏதேனும் இனிப்பைக் கொண்டு நைவேத்தியம் செய்யுங்கள்.

    குறிப்பாக புரட்டாசி வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மியை வழிபடுங்கள். சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். எல்லா இன்னல்களில் இருந்தும் விடுபடச் செய்வாள் மகாலக்ஷ்மி தேவி. உங்கள் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோடும். துக்கங்கள் அனைத்தும் காணாமல் போகும். கவலைகள் யாவும் பனியென மறைந்து போகும். 

    புண்ணியம் நிறைந்த மாதம் என்று புரட்டாசியைச் சொல்லுவார்கள். புரட்டாசி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். மகாவிஷ்ணுவை ஆராதிக்கிற மாதம். இந்த மாதத்தின் பிறப்பில் இருந்து, தொடக்கத்தில் இருந்து பெருமாள் கோயிலுக்குச் செல்வதும் பெருமாளை வழிபடுபதும் எண்ணற்ற நன்மைகளை வழங்கி அருளும்.

    வெள்ளிக்கிழமைகளில் மகாலக்ஷ்மியை நினைத்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது லக்ஷ்மி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும், விசேஷமானது. நீண்டகாலக் கடன் தொல்லையில் இருந்து விடுபட வழியைக் கொடுப்பாள் மகாலக்ஷ்மி.
     

  • Friday Aadi Pooram

    ஆடிப்பூரம்… ஆடி மாதத்தில் ‘பூரம்’ நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் தினமே ஆடிப்பூரம். இது அனைத்து அம்மனுக்கும் உரிய திருநாளாக போற்றப்படுகிறது.

    ஆண்டாள் அவதரித்த திருத்தலமான திருவில்லிபுத்தூரை, ‘கோதாதேவி அவதார ஸ்தலம்’ என்றும் அழைப்பதுண்டு. இதனால் ஆடிப்பூரத்தன்று திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவ கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். வைணவ கோயில்களிலும் திருவாடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.

    மங்கலமான இந்நாளில் திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் அம்மன் ஆலயங்களுக்கு சென்று மனதார வணங்கினால், மனம் போல் மாங்கல்யம், புத்திர பாக்கியம் கிடைக்கும். புனிதமான இந்த தினத்தில் அம்பிகை பூப்பெய்தினாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அம்பிகைக்கு, தங்கள் வீட்டு பெண் போல் வளைகாப்பு வைபவமும், பூப்பெய்தல் சடங்கும் நடத்தி பக்தர்கள் வழிபடுவார்கள்.

    வெள்ளிக்கிழமையன்று ஆடிப்பூரம் வருவது கூடுதல் சிறப்பு. ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் இடம் பெயர்ந்த போது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி, பூர நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. வடமாநிலங்களில் ‘கோதாதேவி’ என்று அழைப்பர்.

    ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வைணவ கோவில்கள் உள்ளிட்ட பல கோவில்களில் அம்பாளுக்கு வளைகாப்பு, விளக்கு பூஜை என சிறப்பு வழிபாடு இன்று நடத்தப்படுகிறது. மேலும், சித்தர்கள், யோகிகள் இந்நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
     

  • Friday viradham

    ஆன்மிக வழிபாட்டிற்கு சிறப்புக்குரிய நாள் வெள்ளிக்கிழமை. இந்த நாளில் அம்பாளை வழிபடுவது விசேஷம். மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 

    இந்த விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைபிடிக்கப்படும் விரதம் என்று கூறப்படுகிறது. ஆக வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வந்தால், லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூன்று பேரின் அருளைப் பெறலாம்.

    இந்த விரதத்தை ஏதாவது ஒரு மாதத்தில் வருகின்ற 3-வது வெள்ளிக்கிழமை அல்லது கடைசி வெள்ளிக்கிழமையில் தொடங்கி, 11 வாரம் மட்டும் அனுஷ்டிக்க வேண்டும். வயதைப் பொறுத்து ஆயுள் முழுவதும் கூட இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

    வெள்ளிக் கிழமை விரதம் இருக்க நினைப்பவர்கள், முதலில் ஏதாவது ஒரு மாதத்தில் வரும் மூன்றாவது அல்லது கடைசி வெள்ளிக்கிழமையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அதிகாலை எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, கோலம் போட்டு சுத்தமாக வைக்க வேண்டும். 

    வீட்டை எப்போதும் சுத்தமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வரும் என்று ஆன்மிக ரீதியாக கூறப்படுகிறது.வீட்டை சுத்தம் செய்ததும், விரதம் இருப்பவர்களும் குளித்து விட்டு வந்து வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும். பிறகு லட்சுமிதேவியின் படத்திற்கோ அல்லது விக்கிரகத்திற்கோ மலர்களால் அர்ச்சனை செய்வதுடன், தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். 

    அன்றைய தினம் முழுவதும் லட்சுமி தேவியைப் பற்றிய பக்திப் பாடல்களையோ, முருகப்பெருமான், சுக்ரனைப் பற்றிய பக்திப் பாடல்களையோ பாராயணம் செய்தபடி இருப்பது சிறப்பான நன்மையை வழங்கும். தொடர்ந்து 11 வாரங்கள் வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
     

  • Friday Viradham

    வெள்ளிக்கிழமையன்று விடியற்காலையிலேயே எழுந்து, மஞ்சள் பூசி குளித்துவிட்டு நெற்றியிலே குங்குமப் பொட்டு வைத்துக்கொள்ளுங்கள். பசுஞ்சாணம் கரைத்த நீரால் வாசல் தெளியுங்கள். ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் சுத்தமான நீரை கொஞ்சமாகத் தெளித்து, வழுக்கிவிடாதபடி துடைத்துவிட்டு, அதன்மேல் அழகாக ஒரு கோலம் போட்டு, அதுக்கு செம்மண் பார்டர் போடலாம்.

    வீடு முழுவதும் பெருக்கி, துடைத்து சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். பூஜையறையையும் சுத்தமாக்கி தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே தீபம் ஏற்றி, ஊதுவத்தி கொளுத்தி வைக்கலாம். சாம்பிராணிப் புகை போடலாம். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி அழகுபடுத்தலாம்.

    ஒட்டுமொத்தமாக வீடு முழுவதும் அன்றைக்குப் பளிச்சென்று இருப்பது நல்லது. அன்று முழுவதும் மஹாலக்ஷ்மி ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பது நலம்.

    லக்ஷ்மி ஸ்லோகங்கள் மட்டுமில்லாமல், தெரிந்த அம்பாள் பாடல்களையும் சொல்லலாம். அன்று முழுவதும் எளிமையாக பால், பழம் என்று மட்டும் சாப்பிட்டு விரதமிருக்கலாம். முடியாதவர்கள் அல்லது அவரவர் உடல்நலத்தைப் பொறுத்து பகலில் ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக்கொள்ளலாம். இப்படி விரதம் மேற்கொண்டபிறகு தொடர்ந்து பதினோரு வெள்ளிக்கிழமைகளில் கடைபிடிக்கலாம். நடுவே ஏதேனும் காரணத்துக்காக ஏதாவதொரு வெள்ளிக்கிழமை முடியாமப் போனால், அதற்கடுத்த வெள்ளிக்கிழமையிலேர்ந்து தொடரலாம்.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை நேரத்தில் பக்கத்துப் பெருமாள் கோயிலில் தாயாரை தரிசிப்பது முக்கியம். இதை முதல் வெள்ளிக்கிழமை விரதத்தன்றாவது செய்யவேண்டும்.

    கோயிலுக்குப் போய் வந்தபிறகு, முடிந்த பிரசாதங்களை தயாரித்து, வீட்டு பூஜையறையில் மஹாலக்ஷ்மிக்கு நிவேதனம் செய்யுங்கள். அவரவர் வசதிகேற்ப சுமங்கலிகளை அழைத்து, அவங்களுக்கு குங்குமம், மஞ்சள், பூ, பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கைத் துணி என்று அளிக்கலாம்.

    இதே மாதிரி பதினொரு வெள்ளிக்கிழமைக்கும் செய்தால் நல்லது. சில குடும்பங்களில் பரம்பரை வழக்கப்படி எல்லா வெள்ளிக்கிழமைகளிலேயும் இந்த விரதத்தை அனுசரிப்பதுண்டு.
     

  • Tuesday Friday panam kodukkalama

    செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மற்றவர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது, செலவு செய்யக் கூடாது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.அவ்வாறு ஏன் கூறுகிறார்கள் என்பதற்கான அர்த்தம்.

    செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறது.

    இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.மேலும் அத்தியாவசிய சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, அந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாதாம்.

    இல்லையெனில், நம்மிடம் இருக்கு அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாகும்.

    எனவே முடிந்தளவு, அதற்க்கு முந்தைய நாளோ அல்லது அதற்க்கு அடுத்த நாளோ செலவை தள்ளிப் போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பணப்பற்றாக்குறையினை தவிர்க்கலாம் என்பது நம்பிக்கை.
     

  • Aadi Friday Amman Koil Celebration

    ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. 

    இந்த ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். இம்மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். 

    பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும். 

    ஆடி வெள்ளியில் வரும் வரலட்சுமி விரதம் சிறப்பான மகாலட்சுமி பூஜையாகும். வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று, பூஜை செய்து உபசரித்தால் மகாலட்மியின் அருட்கடாட்சம் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அதேபோல ஆடி செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். இதுதவிர ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. 

    இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். இப்படி அனைத்து விசேஷங்களையும் கொண்ட ஆடி மாதத்தில் முதல் வெள்ளி கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் காலை முதலே பக்தர்களில் கூட்டம் அலைமோதுகிறது.

  • Tuesday Friday

    செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.

    எனவே இவ்விரு தினங்களிலுமே ஒரு சில விடயங்களை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    5 முகங்கள் கொண்ட குத்து விளக்கை ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
     
    சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம், தாமரைப் பூக்கள் ஆகியவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திலே படுக்கையை விட்டு எழுந்துக் கொள்ள வேண்டும்.

    வீட்டில் வெள்ளி நிறப் புறாக்களை வளர்க்க வேண்டும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் செய்யக் கூடாதவை?

    குத்து விளக்கை புஷ்பத்தினால் அணைக்க வேண்டும். அதை தவிர்த்து தானாகவும், ஊதியும் அணைக்கக் கூடாது.

    இரவு நேரத்தில் வீட்டை கூட்டினால் குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது.

    ஈரத்துணி அணிந்துக் கொண்டும், ஈரமான தலையுடனும் பூஜை செய்யக் கூடாது.

    வாசல்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவற்றில் உட்காரக் கூடாது.

    விளக்கு ஏற்றிய பின்பு பால், தயிர், உப்பு, ஊசி ஆகிய பொருட்களை பிறருக்கு கொடுக்கக் கூடாது.

    நம்முடைய வீட்டிற்குள் அல்லது வீட்டின் வெளியில் நகத்தை வெட்டக் கூடாது.