Tag: Coimbatore

  • A spiritual journey into the Velliangiri Mountains, revered as the Kailash of the South!

    கோவை மாநகரில் இருந்து மேற்கே 36 கி.மீ. தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில். புனிதமும் சுற்றுலாத் தலமுமான இது, “தென் கயிலாயம்” என அழைக்கப்படுகிறது. மேகங்களால் சூழப்பட்டு, வெள்ளி வார்ப்படத்தால் மூடப்பட்டது போல் தோற்றமளிக்கும் இம்மலை, “வெள்ளியங்கிரி” என்ற பெயர் பெற்றது.

    ஸ்தல வரலாறு

    புராணப்படி, கன்னியாகுமரி எனும் பெண், சிவனை மணக்க உறுதியெடுத்து, அவர் வராவிட்டால் உயிர் துறப்பேன் என சூளுரைத்தார். ஈசன் வரத் தாமதமானதால், அவர் உயிர் துறந்தார். மனமுடைந்த சிவன், தனிமையை வேண்டி இம்மலையின் உச்சியில் தியானித்தார். பின்னர் மனம் தெளிந்து கயிலாயம் திரும்பினார். இவ்விடம் தென் கயிலாயமாகி, சிவன் சுயம்புவாகக் குடிகொண்டார்.

    மலை ஏற்றம்

    வெள்ளியங்கிரி ஏழு மலைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. மலையேற்றத்தில் ஏழு ஏற்ற-இறக்கங்கள் உள்ளன. கைதட்டி சுனை, பாம்பாட்டி சுனை போன்ற சுனைகள் உள்ளன. சூறைக்காற்றால் புற்கள் மட்டுமே வளரும் இம்மலையில், மூன்று பாறைகள் இணைந்து லிங்கத்திற்கு ஆலயமாக உள்ளன.

    ஆன்மீக முக்கியத்துவம்

    யோகிகள், முனிவர் இங்கு தவமிருந்து சக்திகளைப் பெற்றனர். இம்மலை யாத்திரை ஆன்மீக உணர்வையும், உடல் புத்துணர்வையும் தருகிறது. இங்கு சிவன் “வெள்ளியங்கிரி ஆண்டவர்”, அம்பாள் “மனோன்மணி” என அழைக்கப்படுகிறார்கள். ஏழு மலைகள் உடலின் ஏழு சக்கரங்களைக் குறிக்கின்றன. இமயமலை கயிலாயம் செல்ல முடியாதவர்கள் இங்கு யாத்திரை செய்து அதே பலனைப் பெறலாம். ஆண்டி சுனை “தென் மானசரோவர்” எனப்படுகிறது.

    உகந்த காலம்

    ஜனவரி முதல் மே வரை மலை ஏற உகந்த காலம். கடும் குளிர், விலங்கு நடமாட்டம் காரணமாக மற்ற காலங்களில் பயணம் தவிர்க்கப்படுகிறது. 3,500 அடி உயரமுள்ள இம்மலையில், ஆறு சிகரங்களைக் கடந்து, ஏழாவது மலையில் சுயம்பு சிவனை தரிசிக்கும் அனுபவம் அளவற்ற இன்பத்தைத் தரும்.

    செல்லும் வழி

    கோயம்புத்தூர் காந்திபுரத்தில் இருந்து சிறுவாணி வழியாக 40 கி.மீ. பயணித்து கோவிலை அடையலாம். இருட்டுப்பள்ளம் வழியாக 8 கி.மீ. சென்றால் கோவில் உள்ளது. காந்திபுரத்தில் இருந்து ஒன்றரை மணிக்கு ஒரு முறை பஸ் வசதி உள்ளது.