Tag: Annabishegam

  • Ippasi annabishegam

    ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவாலயங்களில் உள்ள லிங்கத்திருமேனிக்கு அன்னத்தால் அபிசேகம் செய்யப்படுகிறது.

    உலகில் வாழும் உயிரினங்களுக்கு எல்லாம் உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாகவே ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம். இதைத்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கூறியுள்ளனர்.

    தானங்களில் போதும் என்ற மனதிருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. எனவே மனதுக்கு திருப்தி அளிப்பதும், உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அபிசேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படுகிறது.

    சமைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து காய்கறிகள்,பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர். அன்னாபிஷேக நாளில் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அந்த அன்னமே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுபவர்களுக்கு உணவு பஞ்சமே ஏற்படாது என்பது நம்பிக்கை. இந்த நாளில் சிவபெருமானை தரிசிக்க அன்னாபிஷேகமும், அன்னதுவேஷமும் நீங்கும்.

    வடித்த அன்னத்தை லிங்கம் முழுவதும் பூசி வழிபாடு நடத்தப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் சிவலிங்கத்தின் பாண பகுதியில் இருக்கும் அன்னமானது தனியே எடுக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைத்து விடப்படுகிறது.

    ஆவுடைப்பகுதியில் இருக்கும் அன்னமானது தயிருடன் கலந்தோ, அல்லது தனியாகவோ அன்னதான உணவில் கலக்கப்படுகிறது.

    அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்தால் நம்முடைய பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும். தாராள உணவு கிடைக்கும் பசிப்பிணி வராது என்று கருதப்படுகிறது. அன்னாபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் உச்சிக்காலம் மற்றும் சாயாரட்சை காலங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் விளக்கேற்றி வழிபட உணவு தானியங்கள் பெருகி பசிப்பிணி ஏற்படாது.
     

  • Thanjai Annabishegam

    உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலில்  சிவனுக்கு 1000 கிலோ அரிசியால் வடித்த சாதத்தாலும் 500 கிலோ காய்கறிகளாலும் "அன்னாபிஷேகம் " நடைபெற்றது. 

    உலகப் பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பெளர்ணமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும்

    பக்தர்களால் வழங்கப்பட்ட 1000 கிலோ அரிசியால் வடிக்கப்பட்ட சாதத்தால் 13 அடி உயரமுடைய சிவலிங்கத்துக்கு  இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது  கேரட்,  பீட்ருட், முள்ளங்கி உள்ளிட்ட 500 கிலோ எடையிலான அனைத்து வித காய்கறிகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் அன்னாபிஷேக வழிபாட்டில் பங்கேற்று சிவபெருமானை வணங்கினர்

    இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்று முடிந்ததும் 13 அடி சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட அன்னத்தில் ஒரு பகுதியை பக்தர்களுக்கு பிரசாதமாகவும்,  மீதமுள்ளதை ஆறுகள் குளங்களில் உள்ள மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவுக்காகவும் நீர் நிலைகளில் கரைக்கப்படும்

  • Annabishegam Seivadhu En

    ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த நாளில் சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். சரி அன்னாபிஷேகம் ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்யப்படுகிறது. 

    ஏனெனில், ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான். சந்திரனுக்கு, அஸ்வினி முதல் ரேவதி வரையிலான நட்சத்திர மனைவியர் உண்டு. இவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பும் பிரியமும் கொண்டிருந்தான். இதனால், அவன் மற்றவர்களிடம் பாரபட்சம் காட்ட… அவர்கள் சகித்துக் கொண்டார்கள். ஆனால் மாமனார் சும்மா இருப்பாரா? விஷயம் தெரிந்து கொந்தளித்தார். ஆவேசமானார். சந்திரனின் மீது கடும் கோபம் கொண்டார். ‘உன் உடலானது தேஜஸ் இழந்து, பொலிவிழந்து தேயட்டும்’ என சாபமிட்டார். 

    அதைக் கேட்டு சந்திரன், நடுங்கிப் போனான். கெஞ்சினான். துக்கித்துக் கலங்கினான். சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேயத் தொடங்கியது. இப்போதைய திங்களூர் தலத்தை எடுத்துச் சொல்லி, அங்கே சிவனாரைப் பூஜித்தால், சாபவிமோசனம் கிடைக்கும் என தட்சன் சொல்ல, அந்தத் தலத்துக்கு வந்து சிவபெருமானை நோக்கி, கடும் தவம் இருந்தான். ஆனாலும் அவனுடைய கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொன்றாக மங்கிக் கொண்டே வந்தது. 

    மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருந்தன. தான் செய்த தவறை முழுமையாய் உணர்ந்து கலங்கினான் சந்திரன். அப்போதுதான் அந்தத் தருணத்துக்குக் காத்திருந்தவர் போல், சிவனார் அவன் முன்னே திருக்காட்சி தந்தருளினார். சாபத்தில் இருந்து விமோசனம் அளித்தார். மேலும் சந்திரனைப் பெருமைப்படுத்தும் விதமாக, அந்தப் பிறையை, தன் சிரசில் அணிந்து அவனுக்கு பெருமை சேர்த்தார். 

    சந்திரன் இழந்த பதினாறு கலைகளும் மீண்டும் அவனிடமே வந்தாலும் கூட, முழுமையான பொலிவுடன் ஐப்பசி பெளர்ணமி நாளில் மட்டுமே சந்திரன் மிகுந்த தேஜஸூடன் காட்சி தருகிறான் என்கிறது புராணம்.
     

  • Thanjai Annabishegam

    ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு நாளை  அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளன்று சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு நாளை அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சிக்காக பக்தர்களால் 1,000 கிலோ அரிசியும், 1000 கிலோ காய், கனிகளும் வழங்கப்பட உள்ளன. பக்தர்கள் வழங்கிய பச்சரிசி சாதம் தயார் செய்து மாலையில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.பின்னர் பலவகை காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெறுகிறது. 

    பெருவுடையாருக்கு சாத்தப்பட்ட அன்னம் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும், நீர்நிலைகளில் அவை கரைக்கப்பட்டு ஜீவராசிகளுக்கு அளிக்கப்படும். திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாமல் உள்ள பெண்கள் இந்த அன்னத்தை உட்கொண்டால் குழந்தைப் பேறு ஏற்படும் என்பது ஐதீகம். இதனால் இந்த அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

    இதேபோல் தஞ்சையில் உள்ள கொங்கணேசுவரர் கோவில், காசி விசுவநாதர்கோவில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.