Tag: Anjaneyar

  • sani pradhoshathai mechiya Anjaneyar

    உஜ்ஜயினி நாட்டின் அரசர் சந்திரசேனன்; உஜ்ஜயினி ஈஸ்வரனான வீரமாஹாளர் மீது அதீத பக்தி கொண்டவர். ஒருமுறை இவரது அரண்மனைக்கு வந்த மாணிபத்திரர் என்ற சிவகணநாதர், மன்னனுக்கு உயரிய சிந்தாமணி ரத்தினம் ஒன்றை பரிசளித்தார்.

    அந்த ரத்தினம் மிகவும் மகத்துவமானது. அதன் உன்னதத்தை அறிந்த அண்டை நாட்டு வேந்தர்கள், ரத்தினத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் இல்லையேல் போர் மூளும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அவர்களது இந்த அறைகூவலை சந்திரசேனன் கண்டுகொள்ளவே இல்லை.
     
    அதனால் கோபம் கொண்ட அந்த மன்னர்கள் பெரும்படையுடன் வந்து உஜ்ஜயினியை  முற்றுகையிட்டனர். எந்த நேரமும் போர் மூளும் அபாயம். உஜ்ஜயினி மன்னரான சந்திரசேனன் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. வீரமாகாளர் கோயிலுக்குச் சென்றார். முறைப்படி பூஜை செய்து, முப்புரம் எரித்தவனை முழு மனதோடு தியானம் செய்தார். அரசர் செய்த அத்தனை பூஜைகளையும் அங்கே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான், யாதவ குலச் சிறுவன் ஒருவன். உடனே அவன் மனதில், ‘நாமும் இதே போல பூஜை செய்ய வேண்டும்!’ என்ற எண்ணம் உண்டானது. வீடு திரும்பினான்.

    மறுநாள் பொழுது விடிந்தது. சிவபூஜையை ஆரம்பித்தான். கருங்கல் ஒன்றை எடுத்து, சிவலிங்கம் போல நட்டு வைத்தான். மணலையும் பச்சை இலைகளையும் பூஜைப் பொருட்களாக எடுத்து வைத்துக் கொண்டான். ‘சந்தனம், மாலை, அபிஷேகத் தீர்த்தம், தூபம், தீபம், சாமிக்கு உண்டான ஆபரணம், ஆடை, நைவேத்திய சாதம்’ என்று சொல்லி மணலை யும் பச்சை இலைகளையும் தனித் தனியே பங்கீடு செய்து பிரித்து வைத்து கொண்டான். அவற்றால் அன்போடு அரனை பூஜை செய்தான். பூஜை முடிந்ததும் தியானத்திலும் ஆழ்ந்தான்.

    நேரம் இரவு ஆனது. அவனின் தாயார் சாப்பிட அழைத்தாள். தியானத்தில் இருந்தவன், அவள் மீண்டும் மீண்டும் குரல்கொடுத்தும் பதிலே சொல்லவில்லை. ஆதலால், கோபத்துடன் வெளியே வந்தாள். அவனை நன்கு அடித்தது டன், சிவலிங்கமாக அவன் வைத்து பூஜித்த கருங்கல்லையும் பிடுங்கி எறிந்து, வீட்டுக்குள் சென்று படுத்துத் தூங்கி விட்டாள்.

    அவள் மகனோ… ‘‘ஐயோ, என் ஸ்வாமியை எடுத்து எறிந்து விட்டாளே அம்மா!’’ என்று கதறித் துடித்து மயங்கி விழுந்தான். இரண்டு நாழிகை (48 நிமிடங்கள்) ஆயிற்று. அவனுக்கு மயக்கம் தெளிந்தது. மெள்ள நிதானித்து எழுந்தான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. வீடெங்கும் ரத்தினமும் தங்கமும் இறைந்து கிடந்தன. அவன் அம்மா வால் எடுத்து எறியப்பட்ட கல்லால் ஆன சிவலிங்கமும், ரத்தின மயமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. சிறுவன் ஆனந்தத்தில் மிதந்தான். சிறுவனின் தாயார் திடீரென்று விழித்தெழுந்தாள். வீடு முழுவதும் தங்கம் மற்றும் ரத்தின மயமாக இருந்ததைக் கண்டு வியந்தாள்.

    தகவல் அரசருக்கும் எட்டியது. அரசர் உடனே ஆயர்சேரிக்குக் கிளம்பினார். அங்கே எழுந்தருளி இருந்த இறைவனை வலம் வந்து வணங்கினார். யாதவ சிறுவனை நெஞ்சோடு நெஞ்சாகத் தழுவிக் கொண்டார். ஊரார் எல்லாம் சிவ நாம கோஷம் செய்தார்கள்.

    ஊருக்குள் கேட்ட மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கேட்டு பகை அரசர்கள் திகைப்பில் ஆழ்ந்தா ர்கள். ஒற்றர்களை அனுப்பி காரணத்தை தெரிந்து கொண்டவர்கள், சிவனருளை அறிந்து சிலிர்த்தார்கள். படைகளைத் திருப்பி அனுப்பி விட்டு, ஊருக்குள் வந்து சந்திரசேன னிடம் மன்னிப்பு வேண்டியதுடன், யாதவச் சிறுவனின் பக்திக்காகத் தோன்றி அருள் புரிந்த சிவலிங்கத் தையும் தரிசித்து மகிழ்ந் தார்கள். அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த அந்த நேரத்தில், ஆஞ்சநேயர் அங்கு வந்தார். அவருக்கு சகல மரியாதைகளும் செய்து வழிபட்டார் சந்திரசேனன்.

    யாதவ சிறுவனை நெஞ்சோடு தழுவி அணை த்துக் கொண்டார் ஆஞ்சநேயர். ‘‘மன்னர்களே! அனைவரும் கேளுங்கள்! ஒன்றும் தெரியாத இந்தச் சிறுவனின் பூஜைக்கு மகிழ்ந்து, சிவ பெருமான் தரிசனம் தந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? இதற்குக் காரணம், சந்திரசேன மகாராஜா சனிப் பிரதோஷம் அன்று சிவபெ ருமானைப் பூஜை செய்ததைப் பார்த்து, இந்தச் சிறுவனும் சிவ பூஜை செய்ததுதான். சனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததனால் அடையு ம் பலன், இந்த அளவோடு நின்றுவிடாது.

    இந்தச் சிறுவனின் பரம்பரையில் எட்டாவது தலைமுறையில் மஹாவிஷ்ணு, ‘கிருஷ்ணன்’ என்ற திருநாமத்துடன் அவதாரம் செய்வார். அவரை வளர்க்க இருக்கும் நந்தன் என்னும் ஆயர்கோன் ஒருவன், இந்தக் குலம் பெருமை அடையுமாறு தோன்றுவான். இன்று முதல் இந்தச் சிறுவனை ‘ஸ்ரீதரன்’ என்று அழையுங்க ள்!’’ என்ற ஆஞ்சநேயர், ஸ்ரீதரனுக்குச் சிவ பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகளை உபதேசித்துச் சென்றார்.

     

  • Anjaneyar Gayathri Mandiram

    சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா! உன்னைப் பணிகிறோம். 

    அசாத்ய சாதக ஸ்வாமிந் 

    அசாத்யம் தவகிம்வத 

    ராம தூத க்ருபாசிந்தோ 

    மத் கார்யம் சாதய ப்ரபோ

    ஆஞ்சநேயர் காயத்திரி மந்திரம்…. 

    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

    வாயுபுத்ராய தீமஹி 

    தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத் 

    அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண் அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு. எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே. சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா! உன்னைப் பணிகிறோம்.

  • Namakkal anjaneyar vadamalai

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்றது ஸ்ரீ ஆஞ்சநேயர் சாமி . ஒரே கல்லால் 18 அடி உயரத்தில் ஆன ஸ்ரீநாமக்கல் ஆஞ்சநேயர் சாமி கைகூப்பி வணங்கியபடி காட்சி அளிக்கிறார். ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தி விழாவாக வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

    அதன் படி தமிழகம் முழுவதும் இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையையொட்டி நாமக்கல் ஆஞ்நேயருக்கு 1,00,008 வடைமாலை சாட்டப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இனைதொடர்ந்து அலங்ககரிப்பட்டிருந்த ஆஞ்சநேயர் இன்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு , சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அப்போது கலெக்டர் ஸ்ரேயாசிங், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    தொடர்ந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்

  • Pancha muga anjaneyar story

    குதிரை (ஹயக்ரீவர்), நரசிம்மம், கருடன், வானரம் (ஆஞ்சநேயர்), வராஹம் ஆகிய ஐந்து திருமுகங்கள் கொண்ட ஆஞ்சநேயரை சில கோயில்களில்- விக்கிரகங்களாகவும், வீடுகளில் வண்ண படங்களாகவும் காணலாம் இந்த வடிவம் தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.

    இப்படி, மகிமை மிகு ஐந்து திருமுகங்களுடன் அனுமன் தோன்றியதற்கான காரணத்தை விளக்கும் கதை இது:

    யுத்தத்தில் கணக்கிலடங்காத தன் போர் வீரர் களை இழந்த ராவணனுக்கு, ‘ஸ்ரீராமனால் தானும் கொல்லப்படுவோமோ?’ என்ற பயம் எழுந்தது. எனவே, அவன் பாதாள உலகின் வேந்தனான மயில்ராவணனை வரவழைத் தான். பிரம்மனைக் குறித்து தவம் செய்து அரிய வரங்கள் பெற்றவன் மயில்ராவணன். மாயாஜாலங்கள் செய்வதில் நிபுணன்.

    தன்னை வணங்கிய மயில்ராவணனிடம் தனது நிலையை எடுத்துக் கூறி, ராம.லட்சும ணரை அழிக்கும்படி உத்தரவிட்டான் ராவ ணன் அவன் கட்டளையைச் சிரமேற் கொண்ட மயில்ராவணன், ராம-லட்சுமணர்களை பாதாள லோகத்திலுள்ள காளிதேவிக்கு பலி கொடுப்பதாக சபதம் செய்து புறப்பட் டான்.

    விபீஷணனின் ஒற்றர்கள் மூலம் அறிந்த சுக்ரீவன், ராம- லட்சுமணரைப் பாதுகாக்கும் படி அனுமனிடம் கூறினார். அனுமன், ராம- லட்சுமணரை பர்ணசாலையின் உள்ளே அமர்த்தி, தன் வாலினால் பர்ணசாலையைச் சுற்றிலும் கோட்டை அமைத்து அதன் மீது அமர்ந்து காவல் புரிந்தார்.

    விபீஷணரின் உருவெடுத்த மயில்ராவணன், அனுமனிடம் வந்தான். ராம.லட்சுமணரைப் பார்த்து வருவதாகக் கூறி உள்ளே சென்றவன் தனது மாய சக்தியால் அவர்களைச் சிறிய பொம்மைகளாக்கி மறைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

    ‘‘மாருதி ஜாக்கிரதை,  மயில்ராவ ணன் என் உருவத்தில்கூட இங்கு வர முயற்சி ப்பான்.." என்று அனுமனை எச்சரித்து  புறப்பட்டான். பாதாள லோகம் வந்த மயில்ரா வணன், ராம- லட்சுமணரை நிஜ உருவம் பெறச் செய்தபின் சிறை வைத்தான்.

    மயில்ராவணன் சென்ற பிறகு உண்மையான விபீஷணர் அனுமனிடம் வந்தார். ‘‘இப்போது தானே வந்து போனீர்கள்!’’ என்று அவரிடம் வினவினான் அனுமன். தான் வரவில்லையே என்றார் வீபிஷணர்.

    அனுமன் பதற்றத்துடன் பர்ணசாலைக்குள் சென்று பார்க்க அங்கே ராம- லட்சுமணர் இல்லை.  இது மயில் ராவணனின் வேலையே என்று உணர்ந்தார். அவரிடம் மயில் ராவணன து இருப்பிடத்தையும் அவன் தம்பி மஹி ராவணன் பற்றியும் சொன்னார் விபீஷணன். 

    ஐந்து வண்டுகள் ஒரு பெட்டியில் இருக்கும் ரகசியத்தையும், அந்த வண்டுகளிடம் தான் மயில்ராவணனின் உயிர் இருப்பதையும் சொன்னார்.

    அதன்படி பாதாள லோகம் சென்ற ஆஞ்சநே யர், அங்கிருந்த காளிதேவி கோயிலுக்குள் நுழைந்து தேவியின் உருவத்துக்கு பின்னால் மறைந்து கொண்டார்.

    மயில்ராவணனும் மஹிராவணனும் காளிக்கு பலி கொடுப்பதற்காக ராம- லட்சுமணரை அழைத்து வந்தனர். அப்போது, ‘‘மயில்ராவணா உனது பக்திக்கு மெச்சினேன். நீ மஹிராவணனுடன் என் பலிகளை உள்ளே அனுப்பு. நீ வர வேண்டாம்!’’ என்று காளிபோல குரல் கொடுத்தார் அனுமன்

    அதன்படி ராம- லட்சுமணருடன் மஹிராவண ன் கோயிலுக்குள் நுழைந்ததும் ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்து அவனை அடித்துக் கொன்றார். பிறகு, தான் கொண்டு வந்திருந்த வில், அம்புகளை ராம- லட்சுமணர்களிடம் கொ டுத்து மயில்ராவணனுடன் போர் செய்யும்படி வேண்டினார்.

    நெடுநேரமாகியும், மஹிராவணன் திரும்ப வராததால் சந் தேகம் கொண்ட மயில்ராவண ன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். ராம- லட்சுமணர்களை தன் தோள்களில் அமர செய்து மயில்ராவணன் மீது அம்பு களைத் தொடுக் கச் செய்தார் அனுமன். 

    மயில்ராவணன் மாயப் போர் புரிந்தான். போ ரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர எண்ணிய அனுமன், ராம- லட்சுமணரைக் கீழே இறக்கி விட்டார். அவர்களிடம் போரைத் தொடருமாறு கூறி, மயில்ராவணனின் உயிர் மூலமான வண்டுக ளைத் தேடிப் புறப்பட்டார் அனுமன்.

    விபீஷணர் கூறியபடி ஏழு கடல்கள் கடந்து, ஒரு தீவை அடைந்தார். அங்கு தன்னை எதிர் த்த அரக்கர்களை அழித்து, தடாகம் ஒன்றில் தாம ரைப் பூவுக்குள் இருந்த விஷம் கக்கும் வண்டுகள் அடங்கிய பெட்டியை எடுத்துக் கொண்டு திரும்பினார்.

    ‘ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் கொன்றால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும்!’ என்று பிரம்மனிடம் வரம் வாங்கி இருந்தான் மயில்ராவணன். அப்படி முடியா விட்டால், கொல்ல முயல் பவரே மடிய நேரிடும். 

    அசரீரி மூலம் இதையறிந்த அனுமன் வானரம், நரசிம்மம், கருடன், வராஹம், குதிரை முகங்க ளோடு விசித்திர உருவெடுத்தார். இதைக் கண்ட மயில் ராவணன் நிலை தடுமாறினான். 

    ஆஞ்சநேயர் அவனிடம், ‘‘அதர்ம வழிகளில் சென்ற அரக்கனே, நீ அழியப் போகும் நேரம் வந்து விட்டது’’ என்று கூறி, பெட்டியைத் திறந்து ஐந்து வண்டுகளையும், ஐந்து முகங்க ளின் வாயினால் ஒரே நேரத்தில் கடித்துத் துப்பினார். வண்டுகள் இறந்தன. 

    மயில் ராவணன் பாதாளமே அதிரக் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தான். பிறகு ராம- லட்சுமணர்களை தோள்களில் தூக்கிக் கொண்ட ஆஞ்சநேயர் இலங்கையை அடைந் தார். வானர சேனைகள் மகிழ்ந்தன. பிறகு நடந்த போரில் ராவணன், ஸ்ரீராமரால் கொல்லப்பட்டான். ‘ஸ்ரீராமருக்கு வெற்றி’ என்ற கோஷம் எங்கும் ஒலித்தது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

    மயில்ராவணனின் பிராணன் வாயு சொரூப மானதால், தன் உயிரை பறக்கும் ஐந்து வண்டுகளாக மாற்றிக் கொள்ள பிரம்மனிடம் வரம் பெற்றிருந்தான். ஒரே நேரத்தில் ஐந்து வண்டுகளையும் எவரா லும் பிடிக்க முடியாது என்று இறுமாந் திருந்தான்.  சகல சக்திகளையும் பெற்ற ஸ்ரீஆஞ்சநேயர், ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் பாய்ந் து பிடித்ததுடன் அவை எங்கு சென்றாலும் அவற்றைக் கொல்லும் வல்லமை படைத்த பஞ்ச முகங்களுடன் உருவெடுத்தார். 

    தாவித் தாவிச் செல்ல வானரம், ஆகாயத்தில் பறக்க கருடன், பாய்ந்து செல்ல நரசிம்மம், பூமியில் ஓட குதிரை, பாதாளத்தினுள் நுழைய வராஹம் என ‘பஞ்சமுக ஆஞ்சநேயராக’ உருவெடுத்து மயில்ராவணனை அழித்தார்.

    பஞ்ச இந்திரியங்கள் இழுத்த இழுப்புக்கெல் லாம் போய் துயரப்படும் நாம், மகிமை மிக்க பஞ்சமுக ஆஞ்சநேயரை தியானித்து வழி பட்டால் தைரியம், பலம், பெரும் புகழ், புத்திக் கூர்மை, ஆரோக்கியம், நல்ல எண்ணங்கள், மன நிம்மதி, குடும்ப  ஒற்றுமை, நல்லுறவு ஆகியவற்றுடன் சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

  • shakthi vaindha sri pancha muga anjaneyar mandiram

    அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக் கூடிய வல்லமை படைத்தவர் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது முகங்களான கருடமுகம் பிணி நீக்கும். வராக முகம் செல்வம் அளிக்கும். அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும். நரசிம்மமுகம் தீமையைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் தரும்.

    பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி அருள்கிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது தாடை நீண்டு இருக்கும். முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹ முகம், அனுமன் முகம், ஹயக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடி வில் ஒருங்கிணைந்து உள்ளார். 

    கிழக்கு முகம் – ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம்……

    கீழ்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். 

    "ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா" 

    தெற்கு முகம்

    நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்.

    கீழ்கண்ட  ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்.

    "ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய 
    தக்ஷண முகேகரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா" 

    மேற்கு முகம் – கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்.

    கீழ் கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்.

    "ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம
    முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா" 

    வடக்கு முகம்

    வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் ஆகியவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும்.

    கீழ்கண்ட  ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்.

    "ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதி வராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா".

    மேல் முகம்

     ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.

    இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். கீழ்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

    "ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா".

    அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கு சொல்வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும்.

  • Anjaneyar vada malai

    ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார்.

    அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது. இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் , ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.

    “ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…” இழுத்தார் அன்பர். “வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள். “ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….” பெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்:

    “அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ? 

    ” பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர். தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.

    கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர். ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.

    “பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள்.

    அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.

    சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி ? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.

    அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ?

    அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.

    வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை. அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை.

    சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.

    இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.

    இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன். வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள்.

    இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.

    வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள்.

    அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே — அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.

    எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன.  அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.. மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டு, இடி இடியெனச் சிரித்தார் மஹா பெரியவா.

    பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம். சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்…..
     

  • ANJANEYAR MANDIRAM

    மூச்சுத்திணறல் போன்ற சிரமப்படுத்தும் வியாதிகள் இருந்தால் அஞ்சிலே ஒன்று பெற்றான் என்ற பாடலை ஆஞ்சநேயர் படத்தின் முன்னால் அமர்ந்து பாடினால் சரியாகி விடும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஏனெனில், தன் புத்திரனை வணங்குவோருக்கு வாயு பகவான் நிச்சயம் கருணை செய்வார்.

    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

    அஞ்சிலே ஒன்றாராகஆரியர்க்காக ஏகி

    அஞ்சிலே ஒன்று பெற்றஅனங்கைக் கண்டு அயலார் ஊரில்

    அஞ்சிலே ஒன்றை வைத்தான்!அவன் நம்மை அளித்துக் காப்பான்!

    பாடலில் நிலம்,நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தில் இருந்து விடுபட  இந்த் பாடலைப் பாடி அனுமனை வழிபடலாம். ஆஞ்சநேய தரிசனம் கடலினும் ஆழமான கவலைகளைக் கூட கரைத்து ஆனந்தமளிக்கும் என்பதற்கு மைநாக மலையின் கதையே உதாரணம்.

    தன்னைத் தாண்டிச் செல்பவர்கள் யாராயினும்  வாயில் புகுந்து வெளியேறிச் செல்ல வேண்டும்.  என்றாள். இருவரும் மாறி மாறி அளவைக் கூட்ட ஆஞ்சநேயர் திடீரென தன் அளவை மிகமிகச் சுருக்கி கட்டை விரல் அளவுக்கு மாறி, அவள் காது வழியே வெளிப்பட்டார்.

    சுரஸை தன் சுயரூபமான தேவமங்கை வடிவம் காட்டி, ஆஞ்சநேயனே! நீ மாபெரும் வீரன். நீ செல்லும் காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,  என ஆசிர்வதித்து வழியனுப்பி வைத்தாள்.

    வீட்டில் குழந்தைகளிடம் பூதம் வருகிறது, பேய் வருகிறது, பிசாசு வருகிறது என்றெல்லாம் நாம் பயமுறுத்தக்கூடாது. அவை வந்தாலும், நாம் எதிர்த்து நிற்க வேண்டுமெனக் கற்றுத்தர வேண்டும்.

    ஆஞ்சநேயர் சுரஸையிடம் தப்பித்துச் சென்ற இந்த வரலாறைக் குழந்தைகளுக்கு எளிய முறையில் கற்றுக் கொடுத்தால் அவர்களின் ஆற்றல் மட்டுமின்றி, கல்வியறிவும் விருத்தியடையும்.

  • ANJANEYAR VAZHIPADU

    அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி “அஞ்சேல்’ என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுக்கும். 

    மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது இந்த. ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம்.  

    மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார்.இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. 

    எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது. 
     

  • Azhiya nilai anjaneyar

    அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலை அழியா நிலை என்னும் ஊரில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆஞ்சநேயரை வேண்டி வணங்கினால் துன்பம் பறந்தோடும்.

    அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் ஐந்து கி.மீ. தொலைவில் அழியா நிலை என்னும் ஊரில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் ஒன்று உள்ளது.

    இரண்டு அடிபீடத்தில், ஒன்பது அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் இவர். அவருக்கு அருகில் செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அசோக வனத்தில் வேதனையில் தவித்த சீதாப்பிராட்டியின் முன் தோன்றிய ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்து ஆறுதல் கூறினார்.

    அதே விஸ்வரூபத்தில் இங்கே எழுந்தருளி இருப்பது இப்பகுதி மக்கள் செய்த தவப்பயன். ஒவ்வொரு சனிக்கிழமையும், ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு, வெண்ணெய், மலர், பழங்கள், செந்தூரம் மற்றும் பலவிதமான அலங்காரங்கள் செய்யப்படுவதை பக்தர்கள் பார்த்து ஆனந்தம் அடைகின்றனர்.

    ஆலயத்தின் அருகில் ஒரு தியான மண்டபம் உள்ளது. அதன் முன்பாக 23 அடி உயர கதாயுதம் நிறுவப்பட்டிருக்கிறது. மூலஸ்தானத்திற்கு முன்னால் செல்வவிநாயகர் தனி மண்டபத்தில் எழுந்தருளி உள்ளார்.

    அவரை வணங்கியபின் ஆஞ்சநேயரின் முன் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும் அனுமனின் வெற்றிக் கொடிமரத்தைச் சுற்றி விட்டு மூலஸ்தானத்திற்குச் சென்று ஆஞ்சநேயரின் அருள் பெற வேண்டும். ஆஞ்சநேயரின் பேராற்றல் மிக்க கதாயுதத்தை வணங்கிய பின் அதை வலம் வரவேண்டும்.
     

  • Varaga Anjaneyar

    சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூரில் ஆஞ்சநேயருக்கு ஒரு வித்தியாசமான கோவில் இருக்கிறது. இங்குள்ள ஆஞ்சநேயர் வராக முகத்துடன் இருப்பது ஆச்சரியமான ஒன்றாகும். வானர முகத்துடன் இருப்பவரே ஆஞ்சநேயர். 

    ராமபிரானின் தூதனாக இருந்து அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றி, அவரது மனதை நிறைவடையச் செய்தவர். ராமபிரானின் முதன்மை பக்தனாக திகழும் அனுமனுக்கு ஏராளமான ஆலயங்கள் உள்ளன. சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆஞ்சநேயருக்கு ஒரு வித்தியாசமான ஆலயம் இருக்கிறது.

    இங்கு 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் கோவில் இருக்கிறது. இங்குள்ள ஆஞ்சநேயர் வராக முகத்துடன் இருப்பதுதான் ஆச்சரியமான ஒன்றாகும். வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் இந்த அனுமனை வணங்கினால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.