Category: ஐயப்பா சரணம்

ஐயப்பா சரணம்

  • இருமுடியில் ஒளிந்துள்ள ஆன்மீக ரகசியங்கள்: அந்த இரு பைகளில் இருப்பது என்ன?

    சபரிமலை யாத்திரை என்றாலே நம் நினைவுக்கு வரும் முதல் பிம்பம் தலையில் சுமக்கும் 'இருமுடி'. ஆனால், அது வெறும் துணிப்பை அல்ல; ஒரு பக்தனின் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு!

    ஏன் வீட்டிலேயே இருமுடி கட்ட வேண்டும்? 
    இருமுடியைக் கோவிலில் மட்டுமல்ல, உங்கள் இல்லத்திலும் கட்டலாம். அப்படிச் செய்யும்போது அந்த இடமே சபரிமலையாக மாறி, ஐயப்பனே உங்கள் வீட்டிற்குள் எழுந்தருளுவதாக ஐதீகம். குருசாமியின் பாதபூஜையுடன், பஜனை பாடல்கள் ஒலிக்க இருமுடி கட்டும் அந்தத் தருணம், வீட்டின் எதிர்மறை ஆற்றலை நீக்கிப் புனிதமாக்குகிறது.

    நெய் தேங்காய்: உங்கள் பாவங்களுக்கு ஒரு தீர்வு! தேங்காயில் நீங்கள் நிரப்பும் நெய், வெறும் பொருளல்ல. "சாமியே சரணம்" என்று சொல்லி நீங்கள் நெய் நிரப்பும்போது, உங்கள் கர்மவினைகளும், பாவங்களும் கரைந்து தூய்மையான பக்தி மட்டுமே மிஞ்சுகிறது. இது ஆத்மாவை இறைவனிடம் ஒப்படைக்கும் உன்னதச் சடங்கு.

    முன் முடி & பின் முடி: சுவாரசியமான ரகசியங்கள்!

    இருமுடி இரண்டு பிரிவுகளாக இருப்பது ஏன் தெரியுமா?

    முன் முடி: இதில் இறைவனுக்கான அபிஷேகப் பொருட்கள் (நெய், தேன், விபூதி, சந்தனம்) மற்றும் காணிக்கை இருக்கும். அதாவது 'இறைவனுக்கான பங்கு'.

    பின் முடி: முற்காலத்தில் அடர்ந்த காடுகளுக்குள் பயணிக்கும்போது பக்தர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பொருட்கள் இதில் இருந்தன. இன்று நாம் வழியில் உடைக்கும் தேங்காய்களை இதில் வைக்கிறோம்.

    யாத்திரை தொடங்கும் போது இதை மறக்காதீர்கள்! 
    இருமுடி கட்டி முடித்ததும், குருசாமி அதை உங்கள் தலையில் வைக்கும் அந்த விநாடி நீங்கள் ஒரு சாதாரண மனிதர் அல்ல; ஒரு 'ஐயப்பன்'. வீட்டை விட்டுப் புறப்படும்போது தேங்காய் உடைத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்க வேண்டும். பழைய நினைவுகளையும் பந்தங்களையும் விட்டுவிட்டு, இறைவனை நோக்கி மட்டுமே உங்கள் பயணம் இருக்க வேண்டும் என்பதன் அடையாளம் இது!

    பலன்: முறைப்படி இருமுடி கட்டும் இல்லங்களில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். ஆண்டு முழுவதும் ஐயப்பனின் பாதுகாப்பு உங்களுக்குக் கிடைக்கும்! 

  • பதினெட்டு படி தரிசனத்திற்கான 41 நாள் விரத வழிமுறைகள்

    41 நாள் விரதம்

    கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது மரபாகும். அந்த நாளில் மாலை அணிய முடியாவிட்டால், அடுத்த சனிக்கிழமை அல்லது உத்திரம் நட்சத்திரத்தன்று மாலை அணியலாம். அர்ச்சகர் அல்லது குருநாதர் கையால் ருத்ராட்ச மாலை அல்லது துளசி மாலை அணிந்து, கோயிலை வலம் வந்து தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது மூலம் விரதம் தொடங்கப்படுகிறது.

    சபரிமலையின் பதினெட்டு படிகள் வழியாக ஏறி ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு 41 நாள் விரதம் அவசியமானதாகும். விரதக் காலத்தில் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தூய்மையுடன் இருப்பதே திரிகரண சுத்தி. அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி, பக்தியுடன் சரண கோஷம் சொல்ல வேண்டும்.

    தூங்கும்போது பாய் மட்டும் பயன்படுத்தி, தலையணையைத் தவிர்க்க வேண்டும். பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க வேண்டும். கரடுமுரடான மலைப் பகுதிகளில் பனிக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய யாத்திரைக்காகவும், மன அடக்கத்திற்காகவும் இத்தகைய ஒழுக்கங்கள் விதிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

  • குருசுவாமி என்றால் யார்? கன்னி பூஜை எப்படி செய்ய வேண்டும்?

    குருசுவாமியின் தகுதி

    சபரிமலை ஐயப்பனுக்கு விரதமிருந்து 18 ஆண்டுகள் தொடர்ந்து சென்று வந்தவர்களே குருசுவாமி என அழைக்கப்படுகிறார்கள். ஒரே ஆண்டில் 18 முறை சென்றால் குருசுவாமி ஆக முடியாது.

    ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை அல்லது மகர விளக்குக் காலத்தில் இருமுடி கட்டி, 41 முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சபரிமலைக்கு ஏறியவர்களே இந்த உயர்ந்த பதவியைப் பெறுவர்.

    குருசுவாமிகள், பிற பக்தர்களுக்கு மாலை அணிவிக்கவும், வழிகாட்டவும் தகுதியுடையவர்கள். மேலும், சபரிமலை சீசன் அல்லாத நாட்களிலும், அவர்கள் ஐயப்பனுக்கு நித்யபூஜை செய்து வருவது அவசியமானதாகக் கருதப்படுகிறது.

     

    கன்னி பூஜை

    சபரிமலைக்கு முதல் முறையாக செல்பவர்கள் நடத்தும் முக்கியமான சடங்குதான் கன்னி பூஜை. இதனை வெள்ளக்குடி, படுக்கை, ஆழி பூஜை என்றும் அழைக்கின்றனர்.கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி மாதம் வரை, வீட்டில் ஒரு சிறப்பு நாளைத் தேர்ந்தெடுத்து இந்த பூஜை நடைபெறும். இதற்காக பந்தல் அமைத்து, அதன் நடுவில் மண்டபம் அமைத்து, அதில் ஐயப்பன் படத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    அவரைச் சுற்றிலும்

    • கணபதி

    • மாளிகைப்புறத்தம்மன்

    • கருப்பசுவாமி

    • கடுத்தசுவாமி

    • ஆழி

    ஆகிய தெய்வங்களுக்கு உரிய இடம் ஒதுக்கப்பட்டு விளக்கேற்ற வேண்டும்.

    எல்லா தெய்வங்களுக்கும் வல், பொரி, பாக்கு, சித்ரான்னம் போன்ற நைவேத்யங்கள் படைத்து, பூஜை செய்ய வேண்டும்.

    இந்நாளில் அன்னதானம் செய்வதும் மிக முக்கியமானது.

  • ஹரிஹர புத்திரன் முதல் சபரிமலை வரை: வரலாறும் வழிபாட்டு முறைகளும்

    ஹரிஹர புத்திரன்

    ஹரியான மகாவிஷ்ணுவும், ஹரனான சிவபெருமானும் இணைந்து அருளிய தெய்வக் குழந்தையாக ஹரிஹர புத்திரன் அவதரித்தார். மனித அவதாரத்தில் பந்தள மன்னரின் வளர்ப்பு மகனாக மணிகண்டன் என்ற பெயரில் வளர்ந்தார்.

    புலிப்பாலை எடுத்து வருவதற்காகக் காட்டுக்குச் சென்ற மணிகண்டன், அங்கு மஹிஷியை வதம் செய்து தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றினார். பின்னர் சபரிமலையில் தங்கியிருந்து பக்தர்களுக்காக கோயில் அமைந்தது. இது ஐயப்பன் பற்றிய பரிச்சயமான வரலாறு.

    ஆனால் பூதநாதோபாக்கியானம் என்னும் நூலில் இந்த வரலாறு சற்று மாறுபட்டுக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஐயப்பன் பாண்டிய மன்னரின் சேவகனாக இருந்தார் என்றும், மன்னரின் ஆணைப்படி புலிப்பாலை கொண்டு வரக் காட்டுக்கு சென்றார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கவனிக்க…

    மாலையணிந்த பின் கருப்பு அல்லது நீல நிற ஆடை அணிய வேண்டும்.

    செருப்பு அணியக் கூடாது.

    கட்டில், மெத்தை, தலையணை பயன்படுத்தக் கூடாது.

    மது, மாமிசம், தாம்பத்யம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    பொய் உரைக்கக் கூடாது.

    உறவினரின் வீட்டில் மரணம் ஏற்பட்டால் அங்கு செல்வதும் கூடாது. இதை மீறினால் மாலையை அகற்றி மலைப் பயணத்தையும் நிறுத்த வேண்டும்.

    சவ ஊர்வலத்தைப் பார்த்தால், வீட்டில் கோமியம் தெளித்து நீராட்டு எடுத்த பின் மட்டுமே பூஜை செய்ய வேண்டும்.

  • சபரிமலை மண்டல விரதம்: ஐயப்ப பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்!

     

    கார்த்திகை மாதத்துடன் ஆரம்பமான சபரிமலை மண்டல காலத்தில், ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை அணிவது முதல் இருமுட்டி கட்டி பாதயாத்திரை செல்லும் வரை, ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக முறைகள் மற்றும் நெறிகள் பற்றிய முழு தகவல் இங்கே… ச்வாமியே சரணம் ஐயப்பா!

     

    கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதம் தொடங்கியவுடன் “சாமியே சரணம் ஐயப்பா” எனும் கோஷங்கள் வீதியெங்கிலும் ஒலிக்கத் தொடங்கும்.

    இந்த மாதத்தின் முதல் நாளிலேயே அதிகாலை புனித நீராடி, கோவிலில் அல்லது வீட்டில் வழிபாடு செய்து ஐயப்பனுக்கான மாலை அணிந்து விரதத்தை ஆரம்பிப்பார்கள். பல பக்தர்கள் ஏற்கனவே மாலை அணிந்து விரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பொதுவாக 41 நாட்கள் (மண்டலம்) விரதம் இருப்பார்கள். சிலர் 45 அல்லது 48 நாட்கள் கடைப்பிடிப்பதும் வழக்கம். துளசி அல்லது ருத்ராட்ச மாலை 108 அல்லது 54 மணிகளுடன் அணிய வேண்டும். விரத காலத்தில் நீலம், கருப்பு, காவி, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது.

    தினமும் காலை, மாலை குளித்து பூஜை செய்ய வேண்டும். கோவிலுக்குச் செல்ல முடியாவிட்டாலும் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம். படுக்கும் போது பாய், தலையணை போன்றவற்றை தவிர்த்து தரையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், போதைப் பொருள், உல்லாச சுற்றுலா ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    முதல் முறையாக மாலை அணியும் கன்னிச் சாமிகள் வீட்டில் பூஜை செய்து, ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்ய வேண்டும். இருமுட்டிக்கட்டு தேங்காயை சன்னிதானத்தில் நெய் அபிஷேகத்துக்குப் பயன்படுத்துவது சிறந்தது. பெண்களின் மாதவிடாய் காலத்தில் அவர்களை எந்த விரதச் செயலிலும் ஈடுபடுத்த வேண்டாம்.

    கார்த்திகை மாதத்தில் வீடுகளில் தினமும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முடிந்தவரை இருவேளைகளில் விரதம் இருந்து, இரவில் வாழைஇலை சாப்பாடு அருந்தலாம். முடியாதவர்கள் அன்னதானம் செய்வது சிறப்பாகும்.

    இந்த முறைகளை பின்பற்றிக், 41 அல்லது 48 நாள் விரதத்தில் ஈடுபட்டால், ஐயப்பனின் அருள் பெற்று வாழ்வு வளம் பெருகும் என நம்பப்படுகிறது. ச்வாமியே சரணம் ஐயப்பா!

  • பிள்ளையார்பட்டியில் ஸ்ரீ கற்பக விநாயகர் வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா…

    திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உலகப் பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு 5-ம் நாள் இன்று காலை சுவாமி வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிள்ளையார்பட்டியில் அமைந்திருக்கும் உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று கொடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கொடி மரத்தில்  கொடியேற்றத்துடன் சதுர்த்தி பெருவிழா கோலாகலமாக துவங்கியது.விழா துவங்கிய நாளில் இருந்து தினசரி இரவு திருநாள் மண்டபத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளளும், பகலில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

    வழக்கம்போல் இன்று 5-ம் நாள் விழாவை முன்னிட்டு கோயில் திருநாள் மண்டபத்தில் உற்சவரான ஸ்ரீ கற்பக விநாயகரும், ஸ்ரீசண்டிகேஸ்வரரும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர தீபம், கும்ப தீபம், நட்சத்திர தீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனை செய்து  மகா ஏழு முக கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து திருநாள் மண்டபத்திலிருந்து பக்தர்கள் ஸ்ரீகற்பக விநாயகரை தோளில் சுமந்து, இரு மாடுகள் பூட்டிய வெள்ளிக் கேடகத்தில் அமர வைத்து பின்னர்  மங்கள வாத்தியங்களுடன் கோவிலை சுற்றி நான்கு ரத வீதியில் பவனி வந்த தெய்வங்களை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து மனமுருக கற்பக விநாயகரிடம் வேண்டி வழிபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான 6-ம் நாள் நாளை  வெள்ளிக்கிழமை மாலை கஜமுக சூரஸம்காரமும். 9ம் நாள் வரும் திங்கட்கிழமை காலையில் திருத்தேருக்கு கற்பக விநாயகர் சுவாமி எழுந்தருளும், மாலை 4 மணியவில் திருத்தேரோட்டமும் நடைபெறும். அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

    விழாவின் 10ம் நாள் காலையில் கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொளுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

  • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

    விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
    கேரளாவில் ஓணம் பண்டிகையை போன்று விஷூ பண்டிகையையும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். விஷூ பண்டிகையின் போது கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
    இந்த ஆண்டுக்குரிய விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
    வருகிற 15-ந் தேதி விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து கனி காணுதல் நிகழ்ச்சியுடன், பக்தர்களுக்கு கைநீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள்.
    தொடர்ந்து சித்திரை மாத பூஜைகள் நடைபெறுகின் றன. இந்த பூஜைகள் நிறைவு பெற்ற பின்பு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 18-ந் தேதி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு அடைக்கப்படுகிறது.
    விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகிற 18- ந் தேதி வரை திறந்திருக்கும் என்பதால், ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஐயப்பன்….

    18 படியேறிய பக்தர்கள் கொடிமரம் தாண்டி கோயிலை வலம் வந்து ஹரிஹர புத்திரனாகிய தர்மசாஸ்தாவை கண்டு மனமாற வேண்டிக்கொள்ளலாம். ஐயப்பனை தரிசித்தாலே இந்தப்பிறவியின் பலனை அடைந்த சந்தோஷம் ஏற்படும்.
    மூலஸ்தானத்தில் ஐயப்பன் ஆனந்த சொரூபனாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, கேட்டவரம் தரும் வள்ளலாக ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இவர் மூன்று விரலை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு “சின்முத்திரை’ காட்டுகிறார். “சித்’ என்றால் “அறிவு’. இந்த வார்த்தையே “சின்’ என திரிந்துள்ளது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவது சின்முத்திரை.
    யோகபாதாசனத்தில், சற்று கண் திறந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிக்கும் போது, இவரது காலில் சுற்றியுள்ள வஸ்திரம் ஒன்றை அவசியம் கவனிக்க வேண்டும். இதை “யோக பட்டம்’ என்பர்.

  • ஜீவன் வேறு பிரம்மம் வேறு அல்ல…

    காடு மேடுகளைக் கடந்திருக்க வேண்டியதில்லை. உனக்குள்ளேயே நான் இருக்கிறேன். நான், இங்கிருந்து உன்னை எப்படி பாதுகாக்கிறேனோ, அதுபோல் நீயும் உன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள். அவர்களிடம் நல்லதைப் பேசு, நல்லதை செய், நன்மையே நாடு” என்பது இந்தச்சொல்லுக்குள் அடங்கியுள்ள தத்துவம்.
    இந்து மதத்தின் முப்பெரும் தத்துவங்கள் அத்வைதம். துவைதம், விசிஷ்டாத்வைதம் அத்வைதம் என்பது தானே பிரம்மம் என்பதாகும். விசிஷ்டாத்வைதம் என்பது ஜீவன் வேறு பிரம்மம் வேறு என்பதாகும். துவைதம் என்பது பிரம்மமும் ஜீவனும் வேறு என்றாலும் ஒரு நிலையில் அவைகள் ஒன்றுபடுகின்றன என்பது. இம்மூப்பெரும் தத்துவங்களின் ஓர் உருவமாகத் திகழ்பவர்கள் ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள். மாலை அணிந்து விரதம் தொடங்கிய நாளிலிருந்து அத்வைதத் தத்துவப்படி அஹம்பிரம்மாஸ்மி-தானே கடவுளாகத் திகழ்கிறார். அவரை அனைவரும் சுவாமி என்று அழைத்து சரணம் கூறுகின்றனர். அடுத்து விரதம் முடித்து சபரிமலை ஸ்ரீ ஐயப்ப தரிசனத்திற்கு செல்லும் நேரத்தில், ஜீவன் வேறு பிரம்மம் வேறு முயற்சித்தால் ஜீவன், பிரம்மனைக் காணலாம் என்று விசிஷ்டாத்தைத் தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். ஸ்ரீ சுவாமி ஐயப்பனைக் கண்டு அவனருளில் சங்கமிக்கும் நேரத்தில் பிரம்மமும்-ஜீவனும் வேறென்றாலும் ஒரு நிலையில் அவைகள் ஒன்றுபடுகின்றன என்ற துவைத தத்துவத்திற்கு உதாரணமாய்த் திகழ்கிறோம். இப்படி அரத்தமுள்ள இந்து மதத்தின் முப்பெரும் தத்துவங்களின் ஒருருவாகத் திகழ்பவர்கள் தான் ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள்.

  • 18 தெய்வங்களாக விளங்கும் 18 படிகள்

    சரங்குத்தி தாண்டியவுடன் தெரியும் ஐயப்பனின் தங்க கோயிலை தரிசித்தவுடனேயே, மனம் உற்சாகமாகிறது. ஐயப்பன் சன்னிதானம் நெருங்க நெருங்க “சாமியே சரணம் ஐயப்பா’ என்று பக்தர்கள் முழங்கும் சரண கோஷம் விண்ணைப்பிளக்கிறது. சன்னிதானத்தை அடைந்ததும் நாம் முதலில் தரிசிப்பது 18 படிகள். ஏகாக்ஷரத்தையும், அக்ஷ்டாக்ஷரத்தையும் பக்கத்தில் எழுதினால் 18 வரும். ஏகாக்ஷரம் என்பது ஹ்ரீம் என்கிற புவனேஸ்வரி மந்திரம். அக்ஷ்டாக்ஷரம் என்பது விஷ்ணுவினுடையது. சிவ சக்தியுடன் கலந்த விஷ்ணு சக்தியே இந்த பதினெட்டு படிகள் பதினெட்டு புராணங்களையும், பகவத் கீதையில் பதினெட்டு அத்தியாயங்களையும் குறிக்கிறது என்று முன்னோர்களால் சொல்லப்பட்டது. காவல் தெய்வங்கள் இருக்குமிடமெல்லாம் பதினெட்டுபடி அமைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
    ஐயப்பன் சன்னிதானத்தில் உள்ள பதினெட்டுபடிகளும், ஐந்து பஞ்சேந்திரியங்கள், எட்டு ராகங்கள், மூன்று குணங்கள், ஞானம் ஒன்று. அஞ்ஞானம் ஒன்று என்ற பதினெட்டையும் தாண்டி வருகின்ற பக்தனுக்குத்தான் ஐயனை வழிபட தகுதி உண்டு. பற்றுதல் இல்லாமல் பகவானை பூஜித்தால் அவன் திருவருள் நமக்கு கிடைக்காது.
    இந்த 18 படிகள் அனைத்தும் தங்கத்தகடுகளால் ஆனது. 18 படிகள் ஏறும் முன்பு இருபுறமும் உள்ள கடுத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, தேங்காய் உடைத்து, சரண கோஷத்துடன் பதினெட்டுப்படிகளில் ஏற வேண்டும். நாம் செய்த பாவங்கள் விலகி, ஆணவம் அடங்கி ஐயப்பனின் தரிசனம் வேண்டும் என்ற அடிப்படையில் தான் படி ஏறும் முன் தேங்காய் உடைக்கப்படுகிறது. இங்குள்ள 18 படிகளும் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், பிரம்மா, விஷ்ணு, ரங்கநாதன், காளி, எமன், சூரியன், சந்திரன்,செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என 18 தெய்வங்களாக விளங்குவதால், தலையில் இருமுடி வைத்திருப்பவர்கள் மட்டுமே 18 படி ஏறமுடியும்.