Category: நவராத்திரி

நவராத்திரி

  • Ayudha Poojai Sami Kumbida Nalla Neram

    சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 20ஆம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜை நாளில் வாகனங்களுக்கு பூஜை போடவும், சரஸ்வதி பூஜைக்கான ஆயத்தங்களையும் செய்ய எது நல்ல நேரம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

    நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாள் சரஸ்வதி பூஜை. கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே ஆயுதபூஜையின் ஐதீகம். 

    சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 20ஆம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. அஷ்டமி முடிந்து நவமி திதி அக்டோபர் 6ஆம் தேதி 10.54 மணிக்கு தொடங்குகிறது. அக்டோபர் 7ஆம் தேதி 12.38 மணிக்கு நவமி திதி முடிவடைகிறது. ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணிவரை காலை 9 மணி முதல் 9.30 வரை பகல் 12.10 மணிவரை 12.35 மணிவரை பூஜை செய்யலாம். 

    ஆயுதபூஜையின் ஐதீகம் ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இறைவன் அனைத்திலும் நீக்கமறை நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்துவதே இதன் ஐதீகம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் ஆயுதபஜை கொண்டாடப்படுகிறது. 
     

  • vettri Tharum Ambigai Vazhipadu

    வெற்றித்திருநாளான விஜயதசமியில் அம்பிகையின் முன் அமர்ந்து இந்த வழிபாட்டை படித்தால் மனதில் நினைத்தது இனிதே நிறைவேறும். முயற்சியில் வெற்றி உண்டாகும்.
    *உலகத்தைக் காத்தருளும் அம்பிகையே!
    நீலகண்டரின் கரம் பிடித்தவளே!
    ஆனை முகனின் அன்னையே!
    வேதம் போற்றும் வித்தகியே!
    ஞானச் சுடர்க்கொடியே! மரகத வல்லியே!
    நிலவொளியாய் பிரகாசிப்பவளே!
    கருணை மழையே!
    அம்மா! உன் தாமரைத் திருவடிகளில் சரணடைந்தோம்.

    *மங்களம் நிறைந்தவளே! ஈஸ்வரியே!
    கற்பகம் போல் வாரி வழங்குபவளே!
    மலையத்துவஜன் மகளே!
    அபிராமவல்லியே! ஆனந்தம் அளிப்பவளே!
    ஆதிபராசக்தியே! அங்கயற்கண் அம்மையே!
    திருமாலின் சகோதரியே! மலர் அம்பினைத் தாங்கியவளே!
    ஈசனின் இடம் பாகத்தில் உறைபவளே!
    எங்களின் முயற்சியில் வெற்றியைத் தந்தருள வேண்டும்.

    *புவனம் காக்கும் நாயகியே! நாராயணியே!
    சாம்பவியே! சங்கரியே! சியாமளையே!
    மாலினியே! திரிசூலம் ஏந்திய சூலினியே!
    மதங்க முனிவரின் மகளாக வந்தவளே!
    பிரபஞ்சத்தைப் படைத்தவளே!
    வேதத்தின் உட்பொருளே! வீரத்தின் விளைநிலமே!
    எங்களின் மீது உன் கடைக்கண்ணைக் காட்டியருள வேண்டும்.

    *கடம்பவனமான மதுரையில் மீனாட்சியாக அருள்பவளே!
    காஞ்சியம்பதியில் காமாட்சியாகத் திகழ்பவளே!
    காசியில் உறையும் விசாலாட்சியே! பர்வதராஜனின் புத்திரியே!
    அசுர சக்தியை அழித்து நீதியை நிலைநாட்டுபவளே!
    திக்கற்றவருக்கு துணையாக நிற்பவளே!
    வெற்றி தேவதையே!
    உன் அருளால் இந்த உலக உயிர்கள் எல்லாம் நலமோடு வாழட்டும்.
     

  • Simma Vaganathi Thirupathy Ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

    விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்களுக்குன்டான தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி வீதஉலாவில் கேரள சண்டை மேளம், நாதஸ்வரம், மும்பை டிரம்ஸ் மேளம், மற்றும் பக்தர்களின் கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  

    முத்து எப்படி பரிசுத்தமானதோ அதை போன்று நம் மனதில் தீய எண்ணங்கள் இன்றி பரிசுத்தமாக இறைவனை அடைய வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று இரவு முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி தயார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

  • Thirupathy Kudai Special Story

    – 200 ஆண்டுகால சுவாரஸ்ய வரலாறு  
    பம்மல் சம்பந்த முதலியார் நாடக உலகில் முத்திரைப் பதித்தவர். 

    அவர் எழுதிய, `தீட்சிதர் கதைகள்' என்ற குட்டிக் கதைகளின் தொகுப்பில் திருப்பதி குடை குறித்த ஒரு வரி வருகிறது.

    அதை முதலில் பார்த்துவிட்டு குடையின் கதைக்கு வருவோம்.

    கதை இதுதான்…

    `ஒருமுறை ஒரு டிராம் கண்டக்டர், நமது தீட்சிதரிடம் ஒரு செல்லாத இரண்டணாவைக் கொடுத்துவிட்டான்.

     இதைப் பாராது வாங்கிக்கொண்ட அவர், பிறகு பரிசோதித்துப் பார்த்தபோதுதான் மோசம் செய்யப்பட்டதை அறிந்தவராய்,  “ஆகட்டும்,

    / இதற்குப் பதில் செய்ய எனக்குத் தெரியும்” என்று சொல்லிக்கொண்டு, பாரிஸ் கார்னரில் மற்றொரு டிராம் வண்டியில் ஏறினார்.

    ஏறும்போது டிக்கட் விற்கிறவன் எந்தப் பக்கமிருந்து டிக்கட்டுகள் கொடுத்துக்கொண்டு வருகிறான் என்பதைக் கவனித்து, அதற்கு எதிர்புறமாக ஏறினார்.

     டிக்கட் விற்கிறவன் /மற்றவர்களுக்கெல்லாம் டிக்கட் கொடுத்துக்கொண்டு இவரிடம் வருவதற்குள் பச்சையப்பன் கலாசாலைக்கு டிராம் வந்துவிட்டது.

     பிறகு டிராம் கண்டக்டர் இவரை டிக்கட்டுக்குப் பணம் கேட்க, தன்னுடைய பையிலிருந்து சரியான ஓர் இரண்டணாவை எடுத்துக்கொடுத்து “ராயபுரம் ஒரு டிக்கட்” என்று கேட்டார்.

    / கண்டக்டர் “ஓய்! எந்த ஊரய்யா, ராயபுரமா போகிறது இந்த வண்டி? கீழே இறங்குங்கு அய்யா!” என்றான். 

    உடனே நமது தீட்சிதரும் ஒன்றும் தெரியாதவர்போல் இறங்கிவிட்டார்.

    கொஞ்சம் பொறுத்து, மயிலாப்பூருக்குப் போகும் மற்றொரு டிராம் வண்டியில் முன்பு குறிப்பிட்டபடியே கவனித்து ஏறிக்கொண்டார்.

    / இவ்வண்டி மெமோரியல் ஹாலருகில் வரும்பொழுது கண்டக்டர் டிக்கட் கேட்கவே, முன்பு போல ஒரு சரியான இரண்டணாவைக் கொடுத்து “ஒரு டிக்கட் வண்ணாரப்பேட்டை” என்று கத்தினார்.

     கொஞ்சமாவது சுளிக்காமலும் சிரிக்காமலும் கேட்டார். வண்டியிலிருந்தவர்களெல்லாரும் நகைத்தனர். “ஏய்! நாட்டுப்புறம்!/ கீழே இறங்கு, படிக்கத் தெரியாது..? போர்டில் என்ன போட்டிருக்கிறது பார்க்கவில்லையா?” என்று கண்டக்டர் அதட்டி, அவருடைய இரண்டணாவை அவர் கையில் கொடுத்துக் கீழே இறக்கிவிட்டான்.

     இதற்குள்ளாக டிராம் வண்டி சென்டிரல் ஸ்டேஷன் வந்து சேர்ந்தது.

    இம்மாதிரியாகவே வேறு வேறு வண்டிகளிலேறி/ அவ்வண்டிகள் போகாத இடங்களின் பெயர்களைக் கூறி, துட்டையும் மிகுத்திக்கொண்டு மயிலாப்பூர் போய்ச் சேர்ந்தார்.

     பிறகு மறுநாள், சென்னையில் திருப்பதிக்குடை வைபவத்தைக் காணவந்து அந்த திருப்பதி வேங்கடேஸ்வரப் பெருமாள் உண்டியில் அந்த செல்லாத இரண்டணாவைச் சமர்ப்பித்து விட்டார். “அந்த நாமம் போட்ட கண்டக்டர் எனக்கு நாமம் போடக் காரணம், இந்தப் பெருமாள்தானே.

     ஆகவே அந்தச் செல்லாத காசை அவருக்கே கொடுத்துவிட்டேன்” என்று தன் மனதைத் திருப்தி செய்துகொண்டார்.

    இந்தப் புத்தகத்தை 1933-ல் பம்மல் சம்பந்தம் எழுதியிருக்கிறார். அதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே வெங்கட கிருஷ்ணம்ம செட்டி என்பவர் முதன் முதலில் இப்படி திருப்பதிக்குக் குடை சாத்துவதைச் செய்தார் என்று ஒரு வரி குறிப்பு கிடைக்கிறது. 

    சௌகார் பேட்டையை ஒட்டியுள்ள, சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் தயாரிக்கப்பட்ட அந்தக் குடை திருப்பதிக்குச் செலுத்தப்பட்டது. இன்றும் அது தொடர்கிறது.

     ஜார்ஜ் டவுன், 11 கந்தப்பச் செட்டி தெருவில், அந்தக் காலத்து மேயர் சீனிவாசுலு நாயுடு வழங்கிய இடத்தில் குடை தயாராகும்.

    இந்தியாவில் வேறு எங்கும் நடக்காத ஒரு வைபவம் இது. 

    வட சென்னையின் பிரதானமான விழா. தமிழ்நாட்டின் நாள்காட்டிகளைக் கிழிப்பவர்கள், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் `திருப்பதி குடை ஊர்வலம்' என்று படித்திருக்கக் கூடும்.

    திருப்பதி மலையில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் போது கோயில் உற்சவரை ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். 

    அப்போது உற்சவருக்கு முன்னும், பின்னும் அலங்கரிக்கப்பட்ட குடைகள் எடுத்துச் செல்வார்கள்.

     பட்டுத் துணி, மூங்கில், ஜரிகை, மின்னும் பொருள்கள் போன்றவற்றால், நகாசு வேலைப்பாடுகளுடன் சுமார் ஏழு அடி விட்டம், ஏழு அடி உயரத்துடன் 10 குடைகள் தயாரிப்பார்கள்.

     சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் இந்தப் பணி நடைபெறும். 

    தேக்குக் கம்புகள், பட்டுத் துணிகள், மூங்கில்கள், வெள்ளி ஜரிகைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊரிலிருந்து கேசவப் பெருமாள் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு குடை தயாரிக்கப்படுகிறது.

     குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து பட்டும் ஜரிகையும் வந்து சேர்கிறது. 

    இதில் இரண்டு குடைகள் திருப்பதிக்கானவை, பெரியவை. 

    மற்ற எட்டும் வழியில் பெருமாள் கோயில்களில் வழங்கப்பட்டுவிடும்.

    திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு முன் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில், சென்னை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து குடை ஊர்வலம் தொடங்கும்.

     வழக்கமாக பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயகன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை சுமார் 4 மணியளவில் குடைகள் கவுனி தாண்டும்.

    நிற்க.

    திருப்பதி குடை, யானைக் கவுனியைத் தாண்டுவது ஒரு பரபரப்பு செய்தி.

     சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து திருப்பதி குடை புறப்பட்டதுமே, `குடை, யானைக் கவுனி தாண்டிடுச்சா' என ஓட்டேரி, அயனாவரம் முதல் திருப்பதி வரைக்குமே பெரிய பரபரப்புச் செய்தியாகப் பேசுகிறார்கள்.

    செய்தித்தாள்களும், `மாலை 4.30 மணிக்குக் குடைகள் யானைக் கவுனியைக் கடந்தன' என்று குறிப்பிட்டு எழுதுகின்றன. 

    `குடை, ஓட்டேரியைத் தாண்டுவதோ, அயனாவரத்தைத் தாண்டுவதோ முக்கியம் இல்லையா… ஏன், யானைக் கவுனியைத் தாண்டுவது மட்டும் முக்கியமாக இருக்கிறது'  என்ற கேள்வி எனக்குச் சிறுவயதிலேயே இருந்தது. 

    யாரும் எனக்குப் பதில் சொன்னது இல்லை. 'எல்லோருமே, திருப்பதி குடை யானைக் கவுனி தாண்டிவிட்டதா' என்று சம்பிரதாயமாகக் கேட்டுவிட்டு திருப்தியாக இருப்பார்கள். 

    அந்தக் கேள்விக்குக் பதில்கூட தேவையிருக்காது.

    யானைக் கவுனியைத் தாண்டியதும், நடராஜா திரையரங்கம், சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்ட்ராஹான்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக காசி விஸ்வநாதர் கோயிலைச் சென்றடையும்.

    இரவு கோ‌யி‌லி‌ல் த‌ங்‌கி‌வி‌ட்டு அ‌திகாலை‌யி‌ல் புற‌ப்படு‌ம் குடை, மறுநாள் ஐ.சி.எஃப்., வில்லிவாக்கம், பாடி, அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, பட்டாபிராம், மணவாளன் நகர் வழியாகத் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலை அடையும். இப்படியாக ஆறாவது நாள் திருப்பதியைச் சென்றடைகிறது. ‌‌திரு‌ப்ப‌தி திரு‌க்குடை ஊ‌ர்வல‌த்‌தி‌‌ன்போது மே‌ற்கூ‌றிய சாலைக‌ளி‌ல் போ‌க்குவர‌த்து மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம். ‌

    சில சாலைக‌ளி‌ல் போ‌க்குவர‌த்து ‌நிறு‌த்த‌ப்படு‌ம். 
    குடைகள் கடக்கும் இடமெல்லாம் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும்.

     நைவேத்தியம், அன்னதானம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் என அமர்க்களப்படும்.

    வழியெங்கும் சாலை ஓரங்களில் திருப்பதி மலையின் தோற்றத்தை களிமண், கற்கள் கொண்டு உருவாக்கி வைத்திருப்பார்கள்.

     அதற்கான டெகரேஷன்களில் தோட்டாதரணி தோற்பார். விதம்விதமாக மலைகளை மினியேச்சர் செய்து வைத்திருப்பார்கள். காடு, அதனுள்ளே காட்டு விலங்குகள், அதை வேட்டையாடும் மனிதர்கள், திருப்பதி கோயில் எல்லாமே 'சுருக்கமாக' இருக்கும். எத்தனையோ விதமாக மலை செய்த அனுபவம் எனக்கும் இருந்தது.

    ஒரு காலத்தில் ஏழுமலையான், கவுனியில் யாரிடமோ கல்யாணத்துக்காகக் கடன் வாங்கியிருந்தாராம். அதனால் அந்தப் பகுதி வரும்போது நிற்காமல் குடையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்துவிடுவார்களாம். இது 180 வருடங்களாக நடந்து வரும் சம்பிரதாயம் என்கிறார்கள். 

    திருப்பதி ஏழுமலையான் தன் கல்யாணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கி அதை இன்னமும் அடைத்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. 

    அவர் யானைக் கவுனியில் கடன்பட்டது இந்தப் பகுதி வாழ் மக்களுக்கு மட்டுமே தெரிந்த கதை.

     யானைக் கவுனி சௌகார் பேட்டையில் இப்போது வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஏராளமான மார்வாடி குடும்பத்தினர் வசிப்பது `கோ இன்சிடென்ஸ்' என்றுதான் சொல்ல வேண்டும்.

    லாஜிக்கான இன்னொரு கதையும் சொல்கிறார்கள்.

     சென்னை, சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோடு பலருக்கும் தெரிந்திருக்கும். அப்போதெல்லாம் சென்னையைக் கடந்து செல்ல வரி செலுத்த வேண்டும். 

    அந்த வரி செலுத்திவிட்டுச் செல்வதற்காகக் கட்டப்பட்ட சுவர்தான் வால்டாக்ஸ். 

    அதில் ஆறு கேட்டுகள் உண்டு. அதில் ஒன்றுதான்`எலிபன்ட் கேட்' எனச் சொல்லப்படும் யானைக் கவுனி. 

    இந்த வாயில் வழியாகத்தான் வரி செலுத்திவிட்டு வாகனங்கள் பிரயாணிக்கும்.

     திருப்பதி குடைகள் செல்லும்போது வரி செலுத்துவது தொடர்பாகவோ, வரியைத் தளர்த்துவது தொடர்பாகவோ அந்த வாயில் அருகே ஏதோ தாமதம் இருந்திருக்கிறது.

     அதைக் கடப்பது ஏதோ ஒரு வகையில் சிரமமானதாக இருந்திருக்கும். அதனால்தான் இன்னமும்,`குடை யானைக் கவுனியைக் கடந்துவிட்டதா' என்று மக்கள் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    யாத்திரை கொண்டு செல்லும் குடைகளில் இரண்டு மட்டுமே திருப்பதியில் சமர்ப்பிக்கப்படும்.

     மற்றவை செல்லும் வழியில் உள்ள பைராகி மடத்துக்கும், திருவள்ளூர் கோயிலுக்கும் அளிக்கப்படும். திருப்பதியில் பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளான கருடோற்சவத்தின்போது இந்தக் குடைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.

    – நன்றி
    தமிழ்மகன் உடன்
    சூளைராமலிங்கம்

  • Thirumanam Kaikooda Navarathiri

    நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

    நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

    நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.

    உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

    நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

    தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.

    கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.

    நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

    சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

    ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

    ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.

    கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

    தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.
     

  • Thirupathy Bramorchavam… Chinna Sesha vaganathi Veedhi Ula

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தில் இரண்டாவது நாள் சின்ன சேஷ வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சிறய சேஷ வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலீத்தார். 

    பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும் சிறிய சேஷ வாகனத்தை வாசுகியாக மலையப்ப சுவாமி வீதிஉலா வந்ததை அயிரகணக்காண பக்தர்கள் பக்தி மனம் உருக கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    சுவாமி வீதிஉலாவில் கோயில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில் ஜீடர்களின் சீடர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியபடி வந்தனர். இதில் பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் கோலட்டம் ஆடியும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடம் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.   

    பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். அன்னம் பால், தண்ணீரை வேறு செய்வது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக ஐதீகம்.

  • Navarathiri Vizha in Shakthi Online

    நவராத்திரி விழாவை கொலு வைத்து கொண்டாடுவது மரபு. நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இப்படி பார்த்துப்பார்த்து செய்யப்பட்ட அலங்காரம் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டுமா?…. இதோ ஒரு வாய்ப்பு…..

     சக்தி ஆன்லைன் வெப்சைட்டில் உங்கள் வீட்டு கொலு அலங்கார காட்சிகள் வர நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான்…. உங்கள் வீட்டு நவராத்திரி கொலு அலங்காரத்தின் இரண்டு போட்டோ மற்றும் உங்களை பற்றிய சிறு குறிப்பை எங்களுக்கு அனுப்புங்கள். அவ்வளவுதான். உங்கள் போட்டோவை அனுப்ப வேண்டிய வாட்ஸ் ஆப் எண் :   +91-63807-00085.

  • Thiruthani Navaraathiri Vizha

    முருகன் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்திரி விழாவில் கிளி வாகனத்தில் கஜவள்ளி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயில் நவராத்திரி விழா தொடங்கியது. முன்னதாக, கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் கஜலட்சுமி அம்மையார் சிறப்பு அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. 

    நவராத்திரி விழாவில் 100க்கும்மேற்பட்ட கொலு பொம்மைகள் வகைக்கப்பட்டிருந்தன. நவராத்திரி விழாவை முருகன் கோயில் இணை ஆணையர் பழனி குமார், தக்கார் வே.ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். இந்த விழா, வரும் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும், மாலை, 6.30 மணிக்கு ஊற்சவர் கஜலட்சுமி அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 

    இதே போல், திருத்தணி, சேகர்வர்மா நகர் சக்தி வினாயகர், மடம் கிராமத்தில் உள்ள வன துர்க்கையம்மன், ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் தணிகை மீனாட்சி அம்மன், பழைய பஜார் தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோயில்களிலும் நவராத்திரி விழா இன்று துவங்கியது. வரும் 8 ஆம் தேதி வரை, மாலை 6.30 மணிக்கு கொலு பொம்மைகளுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெறுகிறது.

  • Navarathiri Important things

    துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிஎன்ற முப்பெரும் சக்தி  ஒன்றிணைந்து மகிஷாசுரமர்த்தினியாக  உருவெடுத்து மகிஷனை அழித்ததே சாரதா நவராத்திரி.

    நவராத்திரி 9 நாட்களும் அன்னையை பூஜிக்க முடியாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி அதாவது 7, 8,9வது  நாட்களில் வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் 8-வது நாளான  அஷ்டமி அன்றாவது  நிச்சயம் தேவியை ஆராதிக்க வேண்டும்.

     நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை அம்பிகையாகவே நினைத்து கவுரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து மரியாதை செய்யலாம்.

    நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பதும் ,தினமும் 9 பெண்களுக்கு நலங்கு வைத்து மஞ்சளிட்டு அன்னதானம் கொடுப்பதும் தேவியை மகிழ்விக்கும்.

    நவராத்திரி முதல் நாளன்று ஒருவர், 2-வது நாள் ரெண்டு பேர் என்று அதிகரித்து 9-வது நாள் 9 பேரை பூஜிப்பது நல்லது.

    மைசூரில் நவராத்திரியுடன் சேர்த்து  10-வது நாளான விஜயதசமியையும் சேர்த்து கொண்டாடுகிறார்கள். 10-வது நாள் தசமி என்பதால் அன்றைய தினம் தசராத்திரி என்கிறார்கள். அதுவே சுருக்கமாக தசரா என்று அழைக்கப்படுகிறது.

     மேற்கு வங்கத்தில் நவராத்திரியை துர்க்கா பூஜை, காளி பூஜை என்றும்ம,மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

     உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விஜயதசமி தினத்தன்று ராவணனை ராமபிரான் அழித்ததை நினைவு கூறும் வகையில், "ராம்லீலா'' கொண்டாடுகிறார்கள்.

     நவராத்திரி நாட்களில் தேவி மகாத்மியம் தேவி பாகவதம் படிப்பதும், கேட்பதும் நமது பாவங்களை விரட்டும்.

     நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம்.அதனால், வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போடும் வழக்கம் உள்ளது.

    ஒரு காலத்தில் ,நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளைப் பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது.

     சங்கீதப் பிரியையான அம்பிகையை மகிழ்விக்க ,நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாடினால் நலம்.

    இந்தியாவில் சரஸ்வதி தேவிக்கு இரண்டே இரண்டு இடங்களில் தான் கோவில் உள்ளது. ஒன்று தமிழ்நாட்டில் உள்ள கூத்தனூர், மற்றொன்று ஆந்திராவில் பாசர் என்னும் கிராமத்தில் உள்ளது.

    தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலுவில், நம்மூர் சரஸ்வதி போல பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரஸ்வதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

     "ஓம் ஸ்ரீமகா சரஸ்வதி சரணம்'' என்ற நாமத்தை மாணவ-மாணவிகள் தினமும் 9 தடவையும், வேலையில் இருப்பவர்கள் 18 தடவையும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் 108 தடவையும் சொல்லி வந்தால் பொன்,பொருள் சேர்க்கையுடன் புத்திக் கூர்மை உண்டாகும்.

    சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டதாக அறிகிறோம்.மேலும் அக்பர் காலத்தில் தான்  தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.

    காளி வழிபாடு  மேற்கு வங்க மக்கள் மத்தியில் மிகவும் முக்கியம் அம்மாநில மக்கள் சக்தி உபாசகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    குஜராத்தில் நவராத்திரியின்  9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து ஆடும் கார்பா நடனம் சிறப்பு வாய்ந்தது.

    நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால், அம்பாள் மனமகிழ்ந்து நம் இல்லம் தேடி வருவாள்.
     

  • Navarathiri Special

    பல வீடுகளில் கொலு வைப்பது பரம்பரை பரம்பரையாக வருகிற பழக்கம். பெண்கள், கலைத்திறமையையும் கற்பனை வளத்தையும் வெளிப்படுத்தப் பயன்படுகிற களம்… அதுமட்டுமல்ல விருந்தோம்பல் என்கிற உன்னதப் பண்புக்கு விளக்கம் தருகிற நிகழ்வு…

    கொலு என்பது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியை பூஜிக்கும் பண்டிகை. அதனால் ஒரு தெய்வத்துக்கு 3 நாட்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாடுகிறோம். இதனை நம் விருப்பத்திற்கேற்ப, நம் வசதிக்கேற்ப செய்யலாம்.

    ஒவ்வொரு வருடமும் புதிதாகக் கொஞ்சம் பொம்மைகளை வாங்கி வைத்து கொலுவை அழகுபடுத்துங்கள். 9 படிகள்தான் கொலு வைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் படிகளில் கொலு அமைத்துக் கொள்ளலாம்.

    புதிதாக கொலு வைப்பவர்கள், ஒட்டு மொத்தமாக எல்லா பொம்மைகளையும் வாங்காமல் ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம். முதல்கட்டமாக விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, தசாவதார பொம்மைகளை வைத்து கொலு அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கடுத்து படிப்படியாக மற்ற பொம்மைகளை வாங்கலாம்.

    கொலுவில் பூங்கா அமைக்க சிலர் விரும்புவார்கள். அப்படி அமைப்பவர்கள், ஒரு வாரத்துக்கு முன்னதாக சிறு பாத்திரத்தில் மணல் பரப்பி வெந்தயம், கடுகு, கேழ்வரகு ஆகியவற்றை விதைத்து, வளரச் செய்து கொலுவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பழைய பொம்மைகளின் வண்ணப்பூச்சு மங்கி இருந்தால், அவற்றுக்கு நீங்கள் விரும்பும் வண்ணம் பூசி, புதிது போலவே மாற்றலாம்.

    அதேபோல கொலு வைக்கும் வீடுகளில், சிலர் சுமங்கலிகளுக்கு மட்டும் தாம்பூலப்பை கொடுப்பார்கள். வீட்டுக்கு வந்து போகும் எல்லோருக்கும் தாம்பூலப்பை கொடுக்கலாம். அது உங்கள் மீது மற்றவர்களுக்கு இருக்கும் மதிப்பை உயர்த்திக் காட்டும். குழந்தைகளைக் கவரும் வகையில் அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளையோ, புத்தகங்களையோ பரிசாக கொடுக்கலாம்.