Author: சக்தி ஆன்லைன் டீம்

  • yogam-tharum-navgraga-vinayakar

    செங்கல்பட்டு படாளம் கூட்ரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஸ்ரீ அம்ருதபுரி ராமானுஜ யோகவனம் என்கிற தியான மண்டபம். இங்கு அபூர்வமான கஜகேசரியோகம் கொடுக்கக்கூடிய நலம் தரும் நவக்கிரக விநாயகர் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    சுமார் 12 அடி உயரத்தில் உள்ள ஸ்ரீ விநாயகப் பெருமானை, அவரது திருமேனியில் முன்புறம் அமைந்துள்ள நவக்கிரகங்களுடன் தரிசனம் செய்யலாம். விநாயகரின் பின்புறம் யோக நரசிம்மரை சேவிக்கலாம்.

    இந்த நவக்கிரக விநாயகர் தரிசனம், அனைத்துவிதமான தோஷங்களையும் நீக்கி வாழ்வில் நலன்கள் தரவல்லது. இங்கு விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

  • pillayarpatti-vinayagar-chadurthi-vizha

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் வருகிற 12-ந்தேதி மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

    பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான சதுர்த்தி விழா செப்டம்பர் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றம் அன்று காலை மூஷிக படம் தாங்கிய கொடி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், கொடிமரம் அருகே உற்சவர் விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசதேவர் ஆகிய சாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகிறது. இரவு மூஷிக வாகனத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சதுர்த்தி விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் 6-ம் திருநாளான வருகிற 9-ந்தேதி கஜமுகா சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ம் திருநாளான 12-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கோவிலில் உள்ள மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் தான் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவின் 10-ம் திருநாளான விநாயகர் சதுர்த்தி அன்று காலை கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு திருமுக்கூரணி மோதக கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு பஞ்சமூர்த்தி சாமிகள் வீதிஉலா வரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

  • thrumagalai-thirumarbil-tharitha-thirumal

    திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது. இந்த வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    கிருஷ்ண அவதாரத்தில், பகவான் தன்னுடைய திருக்கரங்களால் கோவர்த்தன மலையைத் தாங்கினார். தன்னை ஏந்திய கிருஷ்ணனை, தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை. அதன்படி இந்த கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையானை திருவேங்கட மலையாய் இருந்து தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்கின்றன. வேங்கடாத்ரி, சேஷாத்ரி, வேதாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறது, வேங்கட மலை.

    ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டி பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் என்னும் அசுரன். திருமால் பூமாதேவியைக் காக்கும் பொருட்டு வராகமாக அவதரித்தார். பின்பு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று பூமாதேவியை மீட்டார். பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார்.

    அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள், கலியுக மக்களைக் காக்கும்பொருட்டு திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருளவேண்டும்’ என்றார்.

    அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார். திருவேங்கடம் என்பதற்கு இருவகை பொருளுண்டு. ஒன்று தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல் மற்றொன்று தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் . சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம் என்றே குறிக்கின்றன. திருமலையை மேல்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள். திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.

  • saniswaranukku-parigaram-seiya-sila-vazhigal

    திருநள்ளாறு வரும் பக்தர்கள் நளதீர்த்தம் சென்று, வலமாகச் சுற்றி வணங்கி குளத்தின் நடுவே இருக்கும், நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை மூழ்க வேண்டும். குளித்து துவட்டி வேறு ஆடை அணிந்தபிறகு, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் உள்ள புனித நீரை தெளித்துக்கொள்ள வேண்டும்.

    திருக்கோயிலினுள் இருக்கும் ஸ்வர்ண கணபதி, முருகர் சந்நிதியை வணங்கி, திருநள்ளாற்றின் நாயகர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், அடுத்து தியாகேசரையும் வணங்க வேண்டும். தொடர்ந்து பிராணேஸ்வரி அம்மனை வணங்கிய பின்னரே இங்கிருக்கும் சனிபகவானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். எள் தீபம் ஏற்றுவது தொடங்கி அவரவர் வசதிக்கு ஏற்ப பூஜைகளைச் செய்து சனிபகவானுக்கான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம். சனிபகவானை சனிக்கிழமை மட்டுமின்றி வாரத்தின் எல்லா நாள்களிலும் வரும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதனாலும் கூடுதல் பலன் கிட்டும்.

    கடுமையான சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பிலிருந்து விடுபட, சனிபகவானை பிரார்த்தித்து, சனிக்கிழமைதோறும் ஒருவேளை உபவாசம் இருத்தல் நல்லது. சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, கறுப்பு வஸ்திரம், வடைமாலை சாத்தி, எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்யலாம். எள்ளால் ஆன இனிப்புப் பலகாரங்களைப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைக்கலாம். சனிபகவானின் அருளினைப் பெற ஆஞ்சநேயர், கணபதியை வணங்கலாம். சனிபகவான் நீதிமான், நியாயவான் என்று போற்றப்பெறுபவர். நமக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்து, ஈஸ்வரனை வழிபட்டு வந்தால் அதிக பாதிப்பின்றி வாழலாம்.

  • avani-kiruthigai-vizha

    முருகன் கோயிலில் நேற்று நடந்த ஆவணி கிருத்திகை விழாவில், காவடிகளுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்ததால் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி மாத கிருத்திகை விழா நேற்று நடந்தது. விழாவை ஓட்டி, அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

    காவடி மண்டபத்தில் உற்சவர் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில், மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆவணி மாத கிருத்திகை விழாவில் பல்லாயிரணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக் கோயிலில் குவிந்தனர். பொதுவழியில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். முருகன் மலைக்கோயிலில் நேற்று கிருத்திகை என்பதால், அதிகளவில் பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார், வேன் மற்றும் சுற்றுலா பேருந்துகள் மூலம் மலைப்பாதை (காட்ரோடு) வழியாக சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலைப்பாதையில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டதால், நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

  • indray-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    செப்டம்பர் 3
    விளம்பி வருடம் – ஆவணி 18
    அஷ்டமி
    03-செப்-2018 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00 :
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : அஷ்டமி மா 4.01
    நட்சத்திரம் : ரோகிணி மா 5.44
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வெற்றி
    ரிஷபம் – செலவு
    மிதுனம் – தெளிவு
    கடனம் – பயம்
    சிம்மம் – தடங்கள்
    கன்னி – மேன்மை
    துலாம் – பேராசை
    விருச்சிகம் – முயற்சி
    தனுசு – நலம்
    மகரம் – சிரமம்
    கும்பம் – பகை
    மீனம் – உழைப்பு

  • krishnar-leelaigal

    பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார்.

    அடிப்படையில் இவள் மிகவும் ஏழை. தாய் தந்தையர் யாரும் கிடையாது.

    கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதித் தான் அவள் கேட்டாள். ஆனால் கேட்டது அந்த மாயாவியிடமாயிற்றே ? அவன் சும்மா விடுவானா?

    அந்த பெண்ணிடம் அவள் அதிர்சியடையும் விதம், ஒரு கோணிப்பையை கொடுத்து, “நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் இதை தூக்கி கொண்டு வா. அது போதும். நம் கண்களை தவிர வேறு யார் கண்ணிற்கும் இந்த கோணிப்பை தெரியாது!” என்கிறார்.

    வேறு எதையோ எதிர்பார்த்த அந்த பெண்ணிற்கு கடும் அதிர்ச்சி. கிருஷ்ணர் இப்படி ஒரு அழுக்கு சாக்கு மூட்டை தருவார் என்று அப்பெண் எதிர்பார்க்கவில்லை.

    அவருடனே தூக்கி கொண்டு நடக்கும் அளவிற்கு அதனுள் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க அந்த பெண்ணிற்கு ஆசை. ஆனால் கட்டுக்களை அவிழ்த்து பார்க்க முடியாதபடி மிகவும் பலமாக அது கட்டப்பட்டிருந்தது.

    எனவே தாம் அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்க்க பகவான் விரும்பவில்லை என்று தெரிந்துகொள்கிறாள் அந்த பெண். திறந்து பார்க்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு கடவுளின் கட்டளைப்படி அதை தூக்கி சுமந்து அவர் செல்லுமிடங்கள் எல்லாம் செல்கிறாள்.

    நேரம் செல்ல செல்ல, ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் அந்த மூட்டையை தூக்க முடியவில்லை.

    “கிருஷ்ணா உன் கட்டளையை எதிர்பார்த்து உனக்கு பணி செய்ய வந்தேன். நீ என்னடாவென்றால் சுமக்க முடியாத ஒரு அழுக்கு மூட்டையை என்னிடம் தந்து விட்டாயே… கருணை கடலுக்கு இது அடுக்குமா??” என்று கோபித்துகொள்கிறாள்.

    “உன் பலவீனத்தில் என் பலம் அடங்கியிருக்கிறது. கவலைப்படாதே உன் பக்கம் நானிருக்கிறேன். தைரியமாக நான் கூறும் வரை சுமந்துவா” என்கிறார் கிருஷ்ணர்.

    மேலும் சில காலம் சென்றது.

    சில இடங்களில் அவளால் தூக்க முடியாத போது கிருஷ்ணரும் தானும் தன் பங்கிற்கு ஒரு கை பிடித்து தூக்கி அந்த சுமையை பகிர்ந்து கொண்டார்.

    ஒரு நாள் அவர்கள் போய் சேரவேண்டிய இடம் வந்தது.

    “போதும் நீ சுமந்தது. அந்த மூட்டையை இறக்கி வை!!” என்று கிருஷ்ணர் கட்டளையிட, அந்த மூட்டையை பகவானின் முன் கீழே வைக்கிறாள் அந்த பெண்.

    “மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா?” என்று பகவான் புன்முறுவல் செய்தபடி கேட்க, அந்த பெண் அதற்காகவே காத்திருந்த அந்த பெண் “சீக்கிரம் கிருஷ்ணா” என்கிறாள் உரக்க.

    கிருஷ்ணர் தனது புல்லாங்குழலை அசைக்க முடிச்சுக்கள் தானே அவிழ்ந்து மூட்டை தானே பிரிந்து கொள்கிறது. முதலில் கண்ணில் தெரிவது வைக்கோல் தான். ஆனால் வைக்கோல்களுக்கிடையே அரிய மாணிக்கங்களும் வைர வைடூரியங்களும், பொற்காசுகளும், தங்க ஆபரணங்களும் குவிந்து கிடந்தன. தேவலோகத்தில் உள்ள கற்பகவிருட்சம் மட்டுமே தரக்கூடிய பொக்கிஷம் அது!!

    “இத்தனை காலம் பொறுமையுடன் நீ காத்திருந்தமைக்காக உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள்!!”

    அந்த பெண்ணுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சி இன்ப அதிர்ச்சியாகி கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    “கிருஷ்ணா……. என்னை மன்னித்துவிடு” என்று அவர் காலில் விழுகிறாள்.

    “அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இந்த பாவி இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தை புரிந்துகொண்டு நான் இருந்திருந்தால் இந்த பொக்கிஷத்தின் பாரம் எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ புகார் செய்திருக்கவோ மாட்டேனே…” என்று அவள் உருக கிருஷ்ணர் தனக்கே உரிய சிரிப்பை உதிர்க்கிறார்.

    ஒவ்வொரு சுமையும் அதை சுமப்பவர்களுக்கென்றே இறைவனால் மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேகமாக செய்யப்படுகிறது. அவற்றை சுமை என்று நினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம். எதுவாகினும் உங்கள் கைகளில் தான் அது உள்ளது. பார்க்கும் பார்வை தான் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

    நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும். அந்த அளவு சுமை மட்டுமே கடவுள் தருவார்…. எனவே அவனை முழுமையாக நம்புங்கள். .

  • indrya-naal-eppadi

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்…. 

    செப்டம்பர் 2 கிருஷ்ண ஜெயந்தி

    விளம்பி வருடம் – ஆவணி 17
    கார்த்திகை கார்த்திகை
    கிருஷ்ண ஜெயந்தி
    02-செப்-2018 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30 :
    திதி : சப்தமி
    திதி நேரம் : சப்தமி மா 5.44
    நட்சத்திரம் : கார்த்திகை மா 6.45
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஆர்வம்
    ரிஷபம் – பணிவு
    மிதுனம் – பாசம்
    கடனம் – செலவு
    சிம்மம் – அனுகூலம்
    கன்னி – நலம்
    துலாம் – பெருமை
    விருச்சிகம் – வரவு
    தனுசு – சினம்
    மகரம் – சிந்தனை
    கும்பம் – சாந்தம்
    மீனம் – அமைதி

  • thirupathy-mudi-kaanaikkai

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய 53 ஆயிரத்து 600 கிலோ தலைமுடி ஏலத்தின் மூலம் ரூ 7.49 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பல்வேறு காணிக்கைகளை வழங்குகின்றனர். அதில் ஒன்றாக மெட்டையடித்து பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்கள் செலுத்திய தலைமுடி 6 ரகமாக தரம் பிரிக்கப்பட்டு ஆன்லைனில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்கெடிங் துறை அலுவலகத்தில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தலைமையில் ஆன்லைனில் தலைமுடி விற்பனை செய்யப்பட்டது.

    இதில் பல்வேறு ரகமான 53 ஆயிரத்து 600 கிலோ தலைமுடி விற்பனை செய்யப்பட்டதின் மூலம் ரூ 7.49 கோடி வருவாய் கிடைத்தது.

  • 2018-09-01-11-59-43

    அறுபடை வீடுகளைப் போன்று, தமிழகத்திற்கு வெளியே பிரசித்தி பெற்ற முருக தலமாக விளங்குவது மலேசியா பத்துமலை முருகன் கோவில். இக் கோவிலின் புணருத்தாரண மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நிகழ்ந்துள்ளது.

    பல்லாயிரக்கணக்கான மக்கள் இக் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டனர். இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சாஸ்த்திரோத்தமான கும்பாபிஷேகமாக இருந்த போதும், சமூக வலைத்தளங்களில் இக்கும்பாபிஷேகம் குறித்து, அதிகமான செய்திப் பகிர்வுகள் காரணமாக, அதிகளவிலான மக்கள் குவிந்ததாகவும் தெரிய வருகிறது. அதற்குச் சிறப்பான காரணம் உண்டு.

    மலைமீதுள்ள குகையில் அமைந்திருக்கும் முருகன் ஆலயத்திற்குச் செல்லவதற்குரிய பாதையில் அமைந்துள்ள 272 படிகளையும், வானவில்லின் ஏழுவர்ணங்களையும் கொண்ட நிறங்களால் புதிதாக வர்ணம் தீட்டியுள்ளார்கள். இது பார்பவர்கள் மனதை கவர்வதாகவும், குறிப்பாக இளையவர்கள் அதன் அழகை இரசித்துப் படங்கள் எடுத்துப் பகிர்வதனால், சமூக வலைத்தளங்களில் அதிக பிரசித்தம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.

    முருக பக்தித் தலமாக அமைந்த போதும், உலகின் மிகப்பெரிய முருகன் சிலை அமைந்ததினால், சுற்றுலாப் பயணிகளின் கவணத் பெற்றிருந்த பத்துமலைத் தலம், இப்போது புதுவர்ணத் தீட்டலாலும் சுற்றுலாப் பயணிகளினதும், இளையவர்களினதும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. பல் வர்ணக் காட்சியால் உலகப் புகழ்பெற்றது மிதக்கும் நகரமான வெனீசின் புறானோ தீவு. வருடந்தோறும் அதன் அழகைக் கண்டு மகிழப் பலலட்சம் மக்கள் அத் தீவிற்குப் பயணிக்கின்றார்கள்.