Author: சக்தி ஆன்லைன் டீம்

  • veetil-vaithu-vananga-vendiya-deivangal

    பொதுவாக வீட்டில் அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும்.
    அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும்.

    எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம்.

    குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும்.

    ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.

    மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.

    அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.

    சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம்.

    ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும்.

    குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.

    தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே.

    ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.

    லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.
    சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும்.
    ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று.

    கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும்.
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம்.

    அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும்.

    துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும்.
    சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும்.

  • vinayakar-silaigal-thayar

    விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரதிஷ்டை செய்ய, விநாயகர் சிலைகள் தயாராக உள்ளன.
    வருகிற 13–ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. திருப்பத்தூர் தென்மாப்பட்டு பகுதியில் ஆர்டரின் பேரில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி முடிவடைந்து அவற்றை வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆர்டரின் பேரில் சிறிய மற்றும் பெரிய சிலைகள் தயார் செய்யப்பட்டு தற்போது, அந்த சிலைகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறைந்தது 3 அடி முதல் அதிக பட்சமாக 12 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

  • niram-maarum-vinayakar

    கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் தக்கலைக்கு அருகில் உள்ள சிற்றூர் கேரளபுரம். இங்குள்ள ஆலயம் “வீரகேரளபுரத்து மகாதேவர் ஆலயம்’ என்று அழைக்கப்படுகிறது.

    இக்கோயிலுக்கு சிறப்பூட்டுவதும், மக்களை வியப்படையச் செய்வதும் இக்கோயிலின் வெளிப்பிராகாரத்தில் தென்கிழக்கு மூலையில் அரசமரத்தடியில் அமைந்திருக்கும் அதிசய விநாயகர். இப்பிள்ளையார் ஆறு மாதங்கள் வரை கறுப்பாகவும், ஆறு மாதங்கள் வரை வெளுப்பாகவும் காட்சி தருகிறார்.

    அதாவது ஆவணி முதல் தை மாதம் வரை கறுப்பாகவும், மாசி முதல் ஆடி மாதம் வரை வெளுப்பாகவும் தோற்றமளிக்கிறார். மேலும் இந்த அதிசய விநாயகர் ஒரு கால் ஒடிந்து காணப்படுகிறார்.

    முன்னொரு காலத்தில் இக்கோயிலின் குருக்கள் தவறு செய்வதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். அவரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு முதியவர் தாழிட்ட கதவை பலமாகத் தட்டியுள்ளார். கோபத்துடன் கதவைத் திறந்த கோயில் குருக்கள் முதியவர் என்றும் பாராமல் ஆத்திரத்தோடு அவரை வேகமாகத் தள்ளிவிட்டார். தடுமாறிக் கீழே விழுந்த முதியவரின் ஒரு கால் ஒடிந்துவிட்டது. அதைக் கண்டும் காணாமல் அலட்சியத்துடன் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து மறுபடியும் கதவைத் தாழிட்டுக்கொண்டார்.

    மறுநாள் குருக்கள், கோயிலுக்குப் பூஜை செய்யச் சென்றபோது, விநாயகப் பெருமானின் ஒரு கால் ஒடிந்திருப்பதைக் கண்டு வியப்பும், அச்சமும் அடைந்தார். தனக்கு அறிவுரை கூற வந்த முதியவர் விநாயகரே என்பதை அறிந்து வருந்தினார். தன் செயலுக்காக பிள்ளையாரிடம் மன்னிப்புக் கேட்டவர் மனம் திருந்தினார். இதுவே காலொடிந்த பிள்ளையாரின் கதை.

  • endha-disai-nooki-thirunuru-poosalam

    மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக அதிகமாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால் தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

    மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்து விடலாம். கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

    திருநீறை காலையில் கிழக்கு நோக்கியும், மதியம் வடக்கு நோக்கியும், மாலை மேற்கு நோக்கியும் பூசிக் கொள்ள வேண்டும். இது அனுஷ்டானத்திற்கும், வீட்டில் இட்டுக் கொள்வதற்கும் பொதுவானது.

    கோயிலில் பிரசாதமாகப் பெறும் பொழுது சுவாமியைப் பார்த்துப் பூசிக் கொள்ள வேண்டும்.

  • kalvi-kelvigalil-sirandhu-vilanga

    மாணவர்கள் சிலர் படிப்பில் மந்தமாகவும், சிலர் என்னதான் விழுந்து விழுந்து படித்தாலும் படித்தவை அனைத்தும் மறந்துவிடுவர். இதற்கு சரியான பரிகாரங்களை செய்வதன் மூலம் படிப்பில் சிறந்து விளங்கலாம்.

    புதன் கிழமைகளில் பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி, பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம், பாசிப்பருப்பு பாயசம் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் கல்வியில் ஏற்பட்ட தடை அகலும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

  • arubatham-kalyanam-seivadhu-een

    ஒருவருக்கு 60 வயது முடிந்து 61ம் வயது தொடங்கும் நாளில் 60ம் கல்யாணம் செய்து கொண்டாடுகிறார்கள்.

    ஒருவருக்கு 60 வயது முடிந்து 61ம் வயது தொடங்கும் நாளில் காலயவனன், சுதூம்ரன் என்னும் தேவதைகள் உடலில் புகுந்து இந்திரியங்களை வலு இழக்கச் செய்கின்றனர். இதனால் உடலைப் பலப்படுத்தவும், ஆயுள் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் சஷ்டியப்த பூர்த்தி என்னும் அறுபதாம் கல்யாணம் நடத்த வேண்டும்.

    ஒருவர் பிறக்கும் போது வான மண்டலத்தில் நவக்கிரகங்கள் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்தனவோ, அதே ராசிகளில் மறுபடியும் தொடங்குவது 61 வயது தொடங்கும் நாளில் மட்டும் தான். அதனால் இந்த விழாவை ஜென்ம (பிறந்த) நட்சத்திர நாளிலேயே நடத்த வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    செப்டம்பர் 7
    விளம்பி வருடம் – ஆவணி 22
    பிரதோஷம்
    07-செப்-2018 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30 :
    திதி : திரையோதசி
    திதி நேரம் : துவாதசி கா 7.00
    நட்சத்திரம் : பூசம் கா 11.44
    யோகம் : மரண யோகம்
    சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பெருமை
    ரிஷபம் – நலம்
    மிதுனம் – தெளிவு
    கடனம் – இன்பம்
    சிம்மம் – நற்செயல்
    கன்னி – தோல்வி
    துலாம் – ஜெயம்
    விருச்சிகம் – நஷ்டம்
    தனுசு – உயர்வு
    மகரம் – துன்பம்
    கும்பம் – அனுகூலம்
    மீனம் – நட்பு

  • murugan-temples

    முருகப் பெருமான் மகர வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் வடிவம் காங்கேயம் தலத்தில் உள்ளது.

    திருமருகல் (நாகை) திருத்தலத்தில் முருகன் கஜவாகனராய் காட்சியளிக்கிறார்.

    திருவையாறுக்கு அருகே திருக்கண்டியூரில் ஞானஸ்கந்தனைக் காணலாம்.

    கொல்லி மலைக்கு அருகே பேருக்குறிச்சியில் உள்ள “கூகைமலை’ கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன், பழனி ஆண்டவர் வடிவம் கொண்டவர்.

    திருச்சிக்கு அருகில் திண்ணியத்தில் கோயில் கொண்டுள்ள முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனியாக ஆளுக்கொரு மயில் வாகனத்தில் எழுந்தருளியிருப்பர்.

    சென்னைக்கு அருகில் போரூர் பாலமுருகன் பனை மரத்தின் கீழ் பூமிக்கு அடியில் இருந்து வெளிப்பட்டவர்.

  • thirupathy-bramorchavam-invitation

    திருப்பதியில் நடைபெற உள்ள ஏழுமலையானின் வருடாந்திர மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    வைதீக நாள் காட்டியின்படி இந்த ஆண்டில் அதிக மாதங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதன் காரணமாக, திருப்பதியில் நடப்பாண்டில் இம்மாதம் வருடாந்திர பிரம்மோற்சவமும், அடுத்த மாதம் (அக்டோபர்) நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளன.

    பிரம்மோற்சவத்தின் சிறப்பை விளக்கும் வகையில் 12 ஆயிரம் சுவரொட்டிகள், ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் 8 ஆயிரம் கையேடுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

    திருமலைக்கு வரும் அனைத்து மாநில மக்களுக்கும் தெளிவாகப் புரியும் வகையில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த சுவரொட்டிகளை தேவஸ்தானம் அச்சடித்துள்ளது

    வாகன சேவை விவரங்கள், அவற்றின் நேரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளடங்கிய சுவரொட்டிகளை திருமலை, திருப்பதியில் உள்ள விசாரணை மையங்கள், நேர ஒதுக்கீடு டோக்கன்கள் அளிக்கப்படும் கவுன்ட்டர்கள், நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான கல்யாண மண்டபங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பியுள்ளது.

    திருமலை-திருப்பதி இடையே இயக்கப்படும் பஸ்கள், திருமலை மற்றும் திருப்பதியிலிருந்து அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், தெலுங்கானா ஆகியவற்றுக்கு இயக்கப்படும் ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழக பஸ்களிலும் சுவரொட்டிகளை ஒட்டி தேவஸ்தானம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    அதனால் இம்முறை பிரம்மோற்சவத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் திருமலைக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • thirunallaru-thanga-radham

    திருநள்ளாறு கோயிலில் தங்க ரதம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரூ. 4.5 கோடி மதிப்பில் தங்க ரதம் தயார் செய்யும் பணியில், தற்போது செப்புத் தகடு பதிக்கும் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசிக்க சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், இரண்டரை ஆண்டுக்கொரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர். பக்தர்கள் பிரார்த்தனை நிறைவேற்றமாக சிறப்பு வழிபாடுகளுக்கான வசதிகளாக தங்க காக வாகனத்தில் சனீஸ்வரர் பிராகாரப் புறப்பாடு உள்ளிட்டவை இருந்தாலும், கோயிலுக்கென தங்க ரதம் இருக்க வேண்டும் என நிர்வாகத்தினர் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    கடந்த 2014 -ஆம் ஆண்டு தங்க ரதம் தயார் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டாலும், தொடர் பணிகளின்றி முடங்கியது. கடந்த மார்ச் மாதத்தில் முடங்கியிருந்த பணிகள் மீண்டும் தொடங்கின. ரதத்துக்கான மரப்பணிகள் நிறைவை எட்டியுள்ளன. தங்க ரதம் ஒட்டுமொத்தமாக ரூ. 4.5 கோடி மதிப்பில் செய்யப்பட்டு வருகிறது. பீடம், சிம்மாசனம், விமானம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.

    இந்த ரதம் 14.5 அடி உயரத்தில், பர்மா தேக்கு மரத்தால் செய்யப்பட்டுள்ளது. தற்போது செப்புத் தகடு பதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக 460 கிலோ செப்பு பயன்படுத்தப்படுகிறது. செப்புத் தகடு பதிக்கும் பணிகள் ஒரு மாத காலத்துக்குள் முடிந்துவிடும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அடுத்ததாக 8 கிலோ எடையில் தங்கத் தகடு பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.