Author: சக்தி ஆன்லைன் டீம்

  • thiruvallur-veera-ragava-perumal-koil-navarathri

    திருவள்ளூர் வீரராகவர் கோயில் சார்பில் நவராத்திரி விழா மற்றும் வேதாந்த தேசிகரின் 750 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொலுக்களை கண்டு வியந்தனர். பள்ளி மாணவ மாணவிகளின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் சார்பில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு நவராத்திரி விழாவும், வேதாந்த தேசிகரின் 750 வது பிறந்த நாள் நேற்று தொடங்கியது.

    முதல் நாளான நேற்று வேதாந்த தேசிகரின் வாழ்க்கை வரலாறு மீது நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.. பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நவராத்திரி விழாவையொட்டி 9 வகையான கொலு பொம்மைகள் அரங்கத்தில் வைக்கப்படிருந்தது.

    வீரராகவப் பெருமாளின் முழு அவதாரமும் பொம்மைகளாக வடிவமைத்து காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். அதே போல் கிருஷ்ணரின் முழு அவதார பொம்மைகளும், ராமானுஜரின் சிலையும் வைக்கப்பட்டிருந்தன. இதனைக் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கண்டு களித்தனர்.

  • kalahasthi-guru-dakshana-moorthi-sirappu-poojai

    ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி நடைபெற்றதால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதாக கோயிலின் ஆஸ்தான அர்ச்சகர் கருணா சுவாமி தெரியப்படுத்தினார்.

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் குரு பெயர்ச்சியை யொட்டி குருதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது .இந்நிலையில் இவ்வாண்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக காலை 9 மணிக்கு சங்கல்பம் ,அஷ்டோத்திர சத சங்காபிஷேகம் நடைபெற்ற பின்னர் கலச பூஜை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றதோடு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு நெய்வேத்தியம் தீபாரதனை நடந்தது .மாலை சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த தோடு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது தொடர்ந்து நான்கு மாடவீதிகளில் குரு தக்ஷிணாமூர்த்தி உற்சவ மூர்த்தி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  • anna-vaganathil-malayappa-swamy

    திருப்பதி கோயில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 2வது நாளான நேற்று இரவு அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று சிம்ம வாகனத்தில் வீதி உலா வருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பிரமோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இதில் இந்தாண்டு கூடுதல் சிறப்பாக இரண்டு பிரமோற்சவம் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் 13ம் தேதி முதல் 21ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பெரிய சேஷ வாகன உற்சவத்துடன் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நவராத்திரி பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்கியது.

    2வது நாளான நேற்று காலை 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி யானை, குதிரை, காளை மாடு அணிவகுத்து செல்ல, மேளதாளம் முழங்க நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டும் கற்பூர ஆரத்தி எடுத்தும் சுவாமி தரிசனம் செய்தனர். வீதி உலாவில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் சுவாமி வேடமணிந்தும், கோலாட்டம் ஆடியபடியும், பஜனை பாடல்கள் பாடியும் வந்தனர்.

    மேலும், வீதி உலாவில் சின்ன ஜீயர், பெரிய ஜீயர் தலைமையில் சீடர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடி வந்தனர். தொடர்ந்து, இரவு அன்ன வாகனத்தில் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். பிரமோற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் வருகிற 18ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • nellayil-maha-pushkaram-starts

    நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கரம் விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.

    குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசியின் தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    மகா புஷ்கரம் விழா வழிபாடு :
    இந்த புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாபுஷ்கர விழாவாகும். இதையடுத்து புஷ்கர விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு யாகங்கள் செய்து தாமிரபரணி நதிக்கு வழிபாடு நடத்த உள்ளனர். இன்று தொடங்கி 12 நாட்கள் இந்த வழிபாடு நடைபெறும்.

    இதையடுத்து, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். பின்பு அங்கு புனித நீராடும் ஆளுநர், பாபநாசம் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் நடைபெறும் தாமிரபரணி புஷ்கர துறவிகள் மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

    இன்று மாலை 5.15 மணிக்கு நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்துகொண்டு தாமிர பரணிக்கு ஆரத்தி எடுத்து, ஆளுநர் பூஜையை தொடங்கி வைக்கிறார். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    புஷ்கரம் அன்று என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

    மாலை நடைபெற இருக்கும் ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபரணி ஆரத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் தமிழகத்தில் உள்ள முக்க்ய கோவில்களின் 12 தேர் ரதங்கள், மதுரை வழியாக நெல்லையை வந்தடையும். இந்த ரதம் ஊர்வலம் இன்று சிறப்பாக தொடங்கியது.

  • thiirumalaiku-malargal-anuppivaippu

    திருப்பதி திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு திருச்செங்கோட்டில் இருந்து 9 டன் மலர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    திருப்பதி திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்காக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருந்து ஸ்ரீ திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயண நித்திய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் மூலமாக 9 டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பெண்கள் சம்பங்கி, முல்லை, ரோஜா உள்ளிட்ட மலர்களை மாலையாக கட்டி திருப்பதி மலைக்கு லாரி மூலமாக அனுப்பி வைத்தனர்.

    சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 900-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பூக்களை மாலையாக தொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  • thirupathy-navarathiri-bramorsavam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கி உள்ளது. முதல் நாளான நேற்று காலை, தேவி, பூதேவி, சமேதராய் உற்சவர் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு 3 ஆண்டு களுக்கும் ஒருமுறை 2 பிரம்மோற் சவங்கள் நடத்துவது ஐதீகம். இந்த ஆண்டு இதுபோன்று 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப் படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் மிகவும் பிரம்மாண்டமான முறை யில் நடந்தது. இதனை அடுத்து நேற்று முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    இவ்விழா, வரும் 18-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் முதல் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் தங்க திருச்சியில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பின்னர் இரவு, ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் வாகன மண்டபத்தில் எழுந்தருளி, 4 மாட வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    நவராத்திரி பிரம்மோற்சவத்தை யொட்டி, திருமலையில் மலர் கண்காட்சி, புகைப்பட கண்காட்சி போன்றவைகளை தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது. மேலும், பிரம்மோற்சவத்தால், திருமலை முழுவதும் பல வண்ண விளக்கு களாலும், மலர்களாலும் அலங் காரம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி நகரிலும் பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களிலும் அலங்கார வளைவுகள், மின் அலங்காரங்கள் செய்யப்பட்டு திருமலை மற்றும் திருப்பதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

  • indru-ungal-rasiku-enna-palan

    அக்டோபர் 11
    விளம்பி வருடம் – புரட்டாசி 25
    11-அக்-2018 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : திரிதியை
    திதி நேரம் : துவிதியை கா 7.58
    நட்சத்திரம் : சுவாதி ம 1.04
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரேவதி,அசுவினி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஆதரவு
    ரிஷபம் – சிரமம்
    மிதுனம் – அசதி
    கடனம் – லாபம்
    சிம்மம் – செலவு
    கன்னி – சுகம்
    துலாம் – கவலை
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு – நன்மை
    மகரம் – பயம்
    கும்பம் – வருத்தம்
    மீனம் – சிக்கல்

  • sri-ramar-kadaipiditha-navarathiri-poojai

    ஸ்ரீராம பிரான் வனவாசம் சென்ற சமயத்தில் தன் மனைவியை இழந்தார். கடல் கடந்து சென்று சீதையை எவ்வாறு மீட்பது என்று ஏங்கினார். அதனை உணர்ந்த நாரதர் ஸ்ரீராமா! நவராத்திரியில் அம்பிகையை முறையாக வணங்கினால் சீதையை மீட்பதற்கான அருள் கிட்டும் என எடுத்துக்கூறினார். அதோடு நாரதரே ஸ்ரீராமருக்கு குருவாய் இருந்து மாலியவான் மலையில் நவராத்திரி பூஜையினை உபதேசித்தார்.

    ஸ்ரீராமரும் மாலியவான் மலையில் நாரதர் முன் அம்பிகைக்கு நவராத்திரி பூஜை செய்து, தன்னை மறந்து அம்பிகையின் நினைவால் மந்திரத்தை ஓதினார்.

    ஸ்ரீராமரின் பூஜைக்கு மகிழ்ந்த அன்னை, ஸ்ரீராமருக்கு மாலியவான் மலையில் சிம்ம வாகனத்தில் காட்சிளித்தான். பிறகு அவன், ஸ்ரீராமா! உனக்குத் துணையிருப்போர் அனைவரும் வெறும் வானரர் அல்ல. தேவர்கள் என்று அறிவாய்! உனக்கு அனைத்தும் அளித்தோம். வெற்றி கொள்வாய்! என்று அருளி மறைந்தாள்.

    ராம -ராவண யுத்தம் நடந்தது. யுத்தத்தில் ராவணன் தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் இழந்தான். அனைத்தையும் இழந்த ராவணன் தன் குலதேவதை துர்க்கையை நினைத்து வணங்கினான். ராவணனுடைய இஷ்ட தேவதையும் துர்க்கையே.

    ராவணன் நினைத்த உடனேயே துர்க்கை அவன் முன் தோன்றினாள். ராவணன் துர்க்கையை வணங்கி, அன்னையே! நீ என் சாரதியாய் ஆக வேண்டும் என வேண்டினான். ராவணனின் பிரார்த்தனைக்கு ஏற்ப துர்க்கை அவன் தேரில் சாரதியாய் நின்றாள்.

    ‘கலியுகத்தில் தீயவர்களே அதிக பலம் பெறுவர். தனது பணத்தாலும், பதவியாலும், பலத்தாலும், ஆணவத்தாலும் தீயவரே அதிகமாயிருந்து நல்லவர்களைத் தளர்ச்சி அடையச் செய்வர் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டவே துர்க்கை ராவணனுக்குச் சாரதியாய், 18 கைகளில் ஆயுதங்களை ஏந்தி நின்றாள்.

    இதைப் பார்த்த ஸ்ரீராமர் மனம் தளர்ந்தார். தனது கோதண்டத்தைக் கீழே போட்டு விட்டு தேவி! எனக் கதறித் துதித்தார்.

    எனினும், தேவி செவி சாய்க்கவில்லை. ஸ்ரீராமரை நோக்கித் தேரைச் செலுத்தினான்.

    இதைப் பார்த்த ஸ்ரீராமர் மிகவும் தவித்தார். வேறு வழி இல்லையே! என்று மீண்டும் மனமுருகி அன்னையைத் துதித்தார்.

    வெற்றி பெறுவாய் என நீதானே ஆசியளித்தாய். இப்போது அதற்கு நான் தகுதி இல்லையா, என்று ஸ்ரீராமர் கதறினார்.

    அன்னையே! உன்னை என் எதிரியின் தேரினில் சாரதியாய்ப் பார்ப்பதற்கா எனக்கு இரு கண்கள் இருக்கின்றன? அவற்றால் இனி என்ன பயன்? இப்போதே எனது இரண்டு கண்களையும் எடுத்து உனக்குக் காணிக்கையாக அளிக்கின்றேன் என்று தன் அம்புகளால் தன் கண்களை நோண்ட முற்பட்டார். இதனைக் கண்டதுமே அம்பிகையானவள் ராவணனின் தேரிலிருந்து மறைந்து விட்டாள்.

    ராவணன் பலகோடி யுகங்களாய் நவராத்திரி பூஜையினை விடாது செய்தவன். நவராத்திரி பூஜையை விடாது செய்த புண்ணிய பலத்திற்காக அம்பிகையானவள் சிறிது நேரம் சாரதியாய் அமர்ந்தாள்.

    பலநாள் தொடர்ந்து பூஜை செய்தாலும் அதர்மத்தின் வழிச் செல்பவனுக்குச் சிறிது நேரமே. ஆனால், தர்மத்தின் வழி செல்லும் ஸ்ரீராமன் மாலியவான் மலையில் ஒன்பது நாள் மட்டுமே செய்த பூஜையால் மனமகிழ்ந்த தேவி, ராவணன் தேரை விட்டு மறைந்து அவனை வெற்றி கொள்ளும் சக்தியையும் கொடுத்தாள்.
    இதனால் போரில் ராமர் வெற்றி பெற்றார்.

  • thirumanam-kai-kooda-vaikum-navarathiri-vazhipadu

    நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

    நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

    நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.

    உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

    நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

    தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.

    கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.

    நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

    சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

    ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

    ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.

    கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

    தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.

  • kulasekara-pattinam-dusara-festival

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

    அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா, 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நேர்த்திக்கடனாக பல்வேறு நாட்கள் விரதம் இருந்து, காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு கோவில் பூசாரி காப்பு அணிவித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    முதலாம் நாளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்திலும், 2-ம் நாளில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் கோலத்திலும், 3-ம் நாளில் ரி‌ஷப வாகனத்தில் பார்வதி கோலத்திலும், 4-ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்திலும், 5-ம் நாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் கோலத்திலும், 6-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்திலும், 7-ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்திலும், 8-ம் நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்திலும், 9-ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்திலும் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    10-ம் நாளான வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. 11-ம் நாளான 20-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

    12-ம் நாளான 21-ந்தேதி காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையுடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.